ஈழம்-இந்திய அரசு தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது.- அருந்ததிராய்

அருந்ததி ராய்… இந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம்!

மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடு களில் இருக்கும் கனிம வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வில், அம்பு ஏந்தி வீரத் துடன் போரிட்டுக்கொண்டு இருக்க, அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடுகிறார் அருந்ததி ராய்.
‘ஆபரேஷன் பசுமை வேட்டை’ என்ற பழங் குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய், அண்மையில் அந்தக் காடுகளுக்குள் நேரடியாகச் சென்றும் வந்தார். கடந்த வாரம் சென்னைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவரை, பிறகு தனியே சந்தித்தேன். மென்மையான குரலில், வன்மையான சொற்களில் எல்லாக் கேள்வி களையும் எதிர்கொள்கிறார் அருந்ததி ராய்.
தண்டகாரண்யா காடு என்பது இன்று இந்தியாவின் மர்மப் பிரதேசம். அங்கு போய் வந்தவர் என்ற அடிப்படையில் தண்டகாரண் யாவில் என்னதான் நடக்கிறது என்பதுபற்றிச் சொல்ல முடியுமா?”

எல்லைகளை இணைப் பதாக இருக்கும் தண்டகாரண்யா காடு, இந்தியப் பழங்குடிகளின் பூர்வீகப் பிரதேசம். குறிப்பாக டோங்ரியா, கோண்டு இன மக்களின் தாயகம். இந்தியா என்ற ஒரு நாடு தோன்றுவதற்கு முன்பிருந்தே அந்த மக்கள் அந்தக் காடுகளில்தான் வாழ்கிறார்கள். காட்டின் வளங்களை அவர் கள் பணம் கொட்டும் இயந்திரங்களாகப் பார்ப்பது இல்லை. காடு, அவர்களின் கடவுள். அவர்களின் கடவுளை அவர்களுக்கே தெரியாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்று விட்டது இந்திய அரசு. நல்ல விலை கிடைக்கிறது என்பதற்காக உங்கள் கடவுளை விற்பீர்களா? (அது ‘நல்ல விலை’யும் இல்லை என்பது வேறு விஷயம்).

தண்டகாரண்யா காட்டின் மலைத் தொடர்களில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்ஸைட் கனிம வளம் இருக்கிறது. இதுதான் வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் போன்ற மிகப் பெரிய நிறுவ னங்களின் இலக்கு. இந்த நிறுவனங்களுக்காக தரகர் வேலை பார்க்கும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைப் பிடுங்குகின்றனர். அந்த மக்களுக்கு இந்த அரசினால் இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடம், மருத்துவ மனை, சாலை வசதி, சுத்தமான குடிநீர், வனம்சார் விளைபொருட்களுக்கான விலை, குறைந்தது போலீஸ் பயமற்ற நிம்மதியான வாழ்க்கை என எதுவுமே இல்லை. ஆனால், எஞ்சியிருக்கும் நிலங்களையும் வன்முறையாகப் பிடுங்குகின்றனர். நாட்டின் இதர பகுதி மக்களை போலீஸ், ராணுவம் மூலம் அரசு அடக்கி ஒடுக்குகிறது. ஆனால், பழங்குடி மக்கள் வீரத்துடன் எதிர்த்துப் போரிடுகின்றனர். ஒடுக்கப்படும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்திக் களத்தில் நிற்கின்றனர். உடனே, அவர் களை ‘இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மிகப் பெரிய சக்தி’ என வர்ணிக்கிறார் பிரதமர். தண்டகாரண்யா காட்டில் நடப்பதை வெறு மனே ‘கிளர்ச்சியாளர்களை அடக்கும் நடவடிக்கையாக’ மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. அங்கு நடப்பது ஒரு போர். உள்நாட்டுப்போர். சொந்த மக்களை வதைத்து, பட்டினியில்வாடும்ஏழைப் பழங்குடி மக்களைக் கொன்று, மலையின் வளங்களைப் பெரு முதலாளிகளின் காலடியில் சமர்ப்பிப்பதற்காக இந்திய அரசு தொடுத்திருக்கும் போர்!”

“அதற்காக மாவோயிஸ்ட்டுகள் ரயில்களைக் கவிழ்ப்பதையும், அப்பாவிகளைக் கொல்வதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?”

“நான் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை, அதை யார் செய்தபோதிலும் ஒருபோதும் ஆதரிக் கப் போவது இல்லை. ஆனால், ரயில் கவிழ்ந்தவுடன் எந்தவித ஆதாரங்களும் கிடைப்பதற்கு முன்பே ‘இதை மாவோயிஸ்ட்டுகள்தான் செய்தார்கள்’ எனத் தீர்ப்பு எழுதுபவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் கொடூர மான முறையில் கொல்லப்படும்போதும், காடுகளைவிட்டுத் துரத்தப்படும்போதும் எங்கு போயிருந்தனர்? போராடும் மக்களின் சாதிப் பிரிவினையை அதிகப்படுத்தி ‘சல்வா ஜூடும்’ என்ற பெயரில் அரசக் கூலிப் படைகளை உருவாக்கி, சொந்த மக்களை வாழ்விடங்களில் இருந்து விரட்டி அடிக்கிறது அரசு. இந்த சல்வா ஜூடும் என்கிற கூலிப் படை, இதுவரை சுமார் 700 கிராமங்களைத் தீயிட்டு அழித்திருக்கிறது. மூன்று லட்சம் மக்களைக் காடு களுக்குள் துரத்தி இருக்கிறது. எதற்காக? அந்த மக்களை அங்கே இருந்து துரத்தி, நிலத்தை அபகரித்து, பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுப்பதற்காக. இந்த அரசக் கூலிப் படையை உருவாக்கியவர் அந்தப் பகுதியின் காங்கிரஸ் பிரமுகர் மகேந்திர கர்மா என்பவர். சல்வா ஜூடுமுக்குச் சம்பளம் தருவது டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள். இப்படி சொந்த அரசாங்கத்தால் எல்லா வகையிலும் கைவிடப்பட்ட மக்கள், வேறு வழியின்றிதான் மாவோயிஸ்ட்டுப் படையுடன் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். நீங்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. அவர்கள் காடுகளுக்குள் போராடுகின்றனர். உண்ணாவிரதம் இருக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் அவர்களால் முடியாது. நிஜத்தில் அவர்கள் வேறு வழியின்றி உண்ணா மல்தான் இருக்கின்றனர் என்பதே நமக்குப் புரியாத நிலையில், அதை ஒரு போராட்டமாகச் செய்தால் மட்டும் புரிந்துவிடப் போகிறதா? தமது வீடுகளையும் நிலங்களையும் காப்பாற்றிக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு என அவர்கள் நம்புகின்றனர். அதில் என்ன தவறு இருக்கிறது?”

” ‘பசுமை வேட்டை‘ நடவடிக்கையில் நீங்கள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறீர்களே… ஏன்?”

“ஏனெனில், அவர்தான் இந்தப் போரின் சி.இ.ஓ. இப்போது தண்டகாரண்யா காட்டின் பாக்ஸைட் கனிமத்தைக் கொள்ளையிடத் துடிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் அவர். அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முந்தைய நாள்தான் வேதாந்தா பதவியை ராஜினாமா செய்தார். இப்போது தன் முன்னாள் எஜமானருக்கு விசுவாசமாக, சொந்த நாட்டின் மக்களைக் கொன்றொழிக்கிறார். இந்தப் போருக்கு மக்களிடம் தார்மீக மனநிலை ஆதரவைப் பெறுவதற்கு, ‘நீங்கள் எங்களோடு இல்லை என்றால், எதிரியோடு இருப்பதாக அர்த்தம்’ என்ற புஷ் கோட்பாட்டைக் கையில் எடுத்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் நடந்துகொண்டு இருக்கும் எண்ணற்ற பிரச்னைகள் எல்லாம் மாவோயிஸ்ட்டு பிரச்னைகளாக மாற்றப்படுகின்றன. முன்பு, ‘முஸ்லிம் பயங்கரவாதம்’ என்ற சொல்லைவைத்து பெரும் பிரசாரம் செய்து கொண்டு இருந்த ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் இப்போது ‘சிவப்புப் பயங்கரவாதம்’பற்றி வாய் ஓயாமல் பேசுவதைக் கவனிக்க வேண்டும். உலகின் பணக்கார நிறுவனங்கள் அனைத்தும் அந்தப் பழங்குடி மக்களின் வளங் களைச் சுரண்டுவதற்கு நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு இருக் கின்றன. அங்குள்ள ஒவ்வொரு நதியின் மீதும், ஒவ்வொரு காட்டின் மீதும் புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் போடப்பட்டுள்ளன. இதை மறைப் பதற்குத்தான் உள்துறை அமைச்சர் மாவோ யிஸ்ட்டு அபாயம் என்ற பூதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்!

‘எங்கோ தண்டகாரண்யா காட்டில் நடக்கிற யுத்தம்தானே, நமக்கென்ன?’ என நீங்கள் நினைத் தால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இந்தப் போர் நாளை மறுநாளோடு முடியப் போவது இல்லை. இது வருடக்கணக்கில் தொடரப் போகும் யுத்தம். இந்தப் போர் விழுங்கப் போகும் தீனி, நாட்டின் பொருளாதாரத்தையே உறிஞ்சி ஊனமாக்கும். அது உங்களையும் மோசமாகத் தாக்கும்!”

“இலங்கையில் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனாலும், எதையும் தடுக்க முடியவில்லையே?”

“உங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதால் அர சாங்கம் வெட்கப்பட்டு பிரச்னையைச் சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்திய அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது.இது தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது. தமிழர்கள் மட்டுமல்ல; நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எத்தனையோ வகையினர் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமை யால் தற்கொலை செய்துகொள்கின்றனர். எதிர்ப் பவர்களை ராணுவம், போலீஸ், சல்வா ஜூடும் என கூலிப் படைகளைவைத்துக் கொல்வதற்கே தயங்காத அரசு, அவர்கள் தானாகவே முன்வந்து தற்கொலை செய்துகொண்டால் மகிழ்ச்சி அடையத்தானே செய்யும்!”

“ஈழப் போரில் தமிழர்கள் அழிக்கப்படுவதுபற்றியும், அது ஓர் இன அழிப்பு என்பதையும் நீங்கள் எழுதினீர்கள். ஆனால், போர் நடந்தபோது அறிவுத் துறையினர் பலர் மௌனமாகவே இருந்தார்கள். ஈழப் போர், பசுமை வேட்டை போன்ற மக்களுக்கு எதிரான அரச நடவடிக்கைகளின்போது, எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்பான பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்?”
எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.என்.ஏ-ல் இருந்து வரவில்லை. இந்தச் சமூகத்தின் எல்லா வகை மாதிரிகளையும் அவர்களிடமும் காணலாம். நாட்டின் மிகப் பெரிய அறிவுஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்துக்குப் பல நூறு கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடம் இருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிர்பார்க்க முடியும்?

உண்மையில், இலங்கையின் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தக்கூடிய செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள் தமிழக அரசியல் கட்சிகள்தான். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. போராட்டங்களை ஒரு சடங்கு ஆக மட்டும் நிறுத்திக்கொண்டுவிட்டனர். இப்போதைய பசுமை வேட்டை நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பும் அரசியல் கட்சிகளுக்குத்தான் இருக்கிறது. ஆனால், இதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில், நம் நாட்டில் காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. போன்றவை புறத்தோற்றத்தில் மட்டுமே அந்தப் பெயருடன் உள்ளன. உண்மையில் அவை, டாடா கட்சி, அம்பானி கட்சி, மிட்டல் கட்சியாகத்தான் செயல்படுகின்றன!”

“மாவோயிஸ்ட்டு வேட்டைக்கு விமானங்களைப் பயன்படுத்தவேண்டும் என்று சி.பி.எம். சேர்ந்த சீதாராம் யெச்சூரி சொல்கிறார். கம்யூ னிஸ்ட்டுகளின் இந்தக் கருத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“(சிரிக்கிறார்) அவர்கள் டாடாவிடமும், அம்பானி யிடமும் சரணடைந்த பிறகு, பாட்டாளிகளுக்கான கட்சி என்ற தகுதியை எப்போதோ இழந்துவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் பழங்குடி மக்கள் மீது விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வதும். உடனே, ‘மாவோயிஸ்ட்டுகள் வேறு, பழங்குடிகள் வேறு’ என்று யாரேனும் இலக்கணம் சொல்வார்களானால், அவர் களுக்கு நான் சொல்கிறேன், 99 சதவிகிதப் பழங்குடிகள், மாவோயிஸ்ட்டுகள் அல்ல; ஆனால், 99 சதவிகித மாவோயிஸ்ட்டுகள்… பழங்குடிகளே!”

” ‘ஆமாம், நான் ஒரு மாவோயிஸ்ட்டுதான்‘ என நீங்கள் பேசியதாகச் செய்தி வந்ததே?”

“நான் சொல்லாத ஒன்றை ஏன் திரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நான் எதிர்ப்பியக்கம் பக்கம்தான் நிற்கிறேன். பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறேன். இது வெளிப்படையான ஒன்று. ஆனால், ஏன் நான் சொல்வதை மாற்றுகிறார்கள்? இதன் பின் னாலும் ஓர் அரசியல் இருக்கிறது. இந்த அரசை எதிர்த் தால்… முத்திரை குத்தப்படுவீர்கள் என்ற மிரட்டல் இருக்கிறது. நாட்டில் எமர்ஜென்சி நிலை பல வருடங் களுக்கு முன்புதான் இருந்தது என்று இல்லை. உண்மையில் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் இருக்கிறது. இந்த அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று சொல்வதே சட்ட விரோதமாக இருக்கிறது.
நீங்கள் காட்டுக்குள் இருந்தால், உங்கள் நெஞ்சில் ஒரு தோட்டா பாயலாம். நாட்டுக்குள் இருந்தால், சிறையில் அடைக்கப்படலாம்.

இதற்குத் தயாராக இருந்தால், நீங்கள் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தயாராகலாம்!”

நேர்காணல்- பாரதி தம்பி.
நன்றி-ஆனந்த விகடன்.

1 comment:

kirrukan said...

தண்டகாரண்யா காட்டிலும் ஒரு முள்ளிவாய்க்கால் நடக்கும் ..மக்கள் கொல்லப்படுவார்கள் ..மனித உரிமைகள் மீறப்படும் ..எவரும் கண்டுகொள்ளமாட்டர்கள் ..

பத்திரிகையாளர்கள் கட்டுரை வடிப்பர் .பார்வையாளர்கள் பின்னூட்டல் விடுவார்கள்..மனித உயிர் மதிப்பற்று மிதிபடும்
அமைச்சர்கள் முதலாளியாவார்கள் ,மாவோயிஸ்ட்கள் காட்டினுல் ஒழித்துக்கொள்வார்கள்