ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் ஜூலியா கிலார்ட்


ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்ட் பதவியேற்றுள்ளார். ஆளும் தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆச்சரியமூட்டும் வகையில் நடைபெற இருந்த ஒரு தேர்தலில் கெவின் ரட் போட்டிக்கு போகமல்  விலகவே அவர் தலைமைப் பதவியை பெற்றுள்ளார்.


தொழிற்கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து பிரதமர் பதவியிலிருந்த கெவின் ரட் நீக்கப்பட்ட நிலையில், துணைப் பிரதமராக இருந்த கிலார்ட் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியின் தலைமையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒரு நல்ல அரசாங்கம் வழி தவறிப் போகிறது என்று தான் நம்புவதாக கிலார்ட் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொழிற்கட்சிக்கு புத்துயிரூட்டப் போவதாக அவர் உறுதி பூண்டுள்ளார்.

அங்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்கள் தொடர்பில் கட்சிகளுக்கான ஆதரவு குறித்து மக்கள் கருத்தை அறிய நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தொழிற்கட்சிக்கான ஆதரவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கார்பன் வர்த்தகம் தொடர்பாக பிரதமராக இருந்த கெவின் ரட்டின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமும், சுரங்கங்கள் மீதான சர்ச்சைகுரிய வரியுமே தொழிற்கட்சிக்கான ஆதரவு குறைய வழி வகுத்தது.

பிரிட்டனின் தெற்கு வேல்ஸ் பகுதியில் பிறந்த கிலார்ட் நான்கு வயது சிறுமியாக இருந்த போது குடும்பத்தாருடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்று குடியேறினார்.

ரட் அவர்களின் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கான பொறுப்பு தனக்கு இருக்கின்றது எனவும் ஜூலியா கிலார்ட் தெரிவித்துள்ளார்
ஆனால் ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து எதிர்கட்சியினரின் விமர்சனத்துக்கும் குறைவில்லை. ஆளும் கட்சி தனது விற்பனை பிரதிநியைத்தான் மாற்றியுள்ளதே தவிர அவர்கள் விற்கும் பொருளை மாற்றவில்லை என லிபரல் கட்சியின் தலைவர் டோனி அப்பாட் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் முற்பகுதியில் அங்கு நடத்தப்பட்ட மக்கள் கருத்து கணிப்பில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் கெவின் ரட் அங்கு பிரபலமாக இருந்தது தெரியவந்தது

No comments: