செ.பாஸ்கரன்
எழுதாத காகிதமாய் நானிருந்தேன்
என்னை எடுத்துச்செல்ல எத்தணித்தனர்சிலர்
சுற்றிலும்
சுயநலப்போர்வையை போர்தியிருந்தனர்
மென்மையின் அழகு நீயென்றவரும்
மேனி மினுங்கும் தாரகை என்றவரும்
என்னைப்பார்த்தனர்
என் அழகைப்பார்த்தனர்
என் உள்ளத்து எண்ணங்களையும்
உணர்வுகளின் மென்மையையும்
பார்ப்பதையே தவிர்த்துக்கொண்டனர்
நான் கேட்காதவற்றை கொட்டித் தந்தவர்கள்
நான் தேடியவற்றை ஒளித்துக்கொண்டார்கள்
நான் வேண்டுவதெல்லாம்
வயல்வெளியின் வரம்புபோல
என்மீது கிறுக்கப்படும் சில கோடுகள்
என்மீது வரையப்படும் சில ஓவியங்கள்
மைகொண்டு எழுதி என்னை வருடும்
அந்த அற்புதங்கள்
தான்வரைந்த ஓவியத்தை
ஓய்வின்றிப் பேசும் ஒருவன் வேண்டாம்
என்னில் விழுந்த கோடுகள்
ஓவியமாய் பெயர்பெற்றதைப்பற்றி
பேசும் ஒருவனுக்காய் காத்திருப்பேன்
வரைவதற்காய் மட்டுமன்றி
வளித்துணைக்காயும் என்னைத் தேடுபவன்
எங்கோ ஓரிடத்தில்
எனக்காகக் காத்திருப்பான்
அதுவரை
நான் எழுதாத காகிதமாய்
அவனுக்காய் காத்திருப்பேன்.
###########################################################
###########################################################
2 comments:
சரியாக சொல்லியுள்ளீர்கள் "என்னைப் பார்த்தார்த்தனர் என் அழகைப்பார்த்தனர். பெண்களுக்கு ஒரு மனம் என்று ஒன்று உள்ளது என்பதை ஆண்கள் ஏன் பார்க்கின்றார்கள் இல்லை. எழுதியதற்கு என் வாழ்த்துக்கள்.
ரதி.
[quote]எனக்காகக் காத்திருப்பான்
அதுவரை
நான் எழுதாத காகிதமாய்
அவனுக்காய் காத்திருப்பேன்.[/quote]
கசக்கி குப்பைப் தொட்டியில் போடப்போறாங்கள்.
Post a Comment