‘பூமராங்’ சிறப்புமலர்.


                                                                             ரஸஞானிஅவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக கலை,இலக்கிய,ஊடகத்துறையில் ஈடுபட்டுவரும் குறிப்பிட்ட சிலரின் கூட்டுமுயற்சியால் கடந்த பத்து ஆண்டுகாலமாக (2001-2010) தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் ‘அற்லஸ்’ (Atlas) என அழைக்கப்படும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சமீபத்திய வெளியீடு ‘பூமராங்’ சிறப்புமலர்.

மெல்பனில் அண்மையில் நடந்த பத்தாவது எழுத்தாளர் விழவை முன்னிட்டு வாசகர்களின் கரங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இம்மலர் 84 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது.

‘பூமராங்’ என இம்மலருக்கு பெயர் சூட்டியிருப்பதற்கான காரணத்தை மலர்க்குழுவினர் இவ்வாறு தமது ஆசிரியத்தலையங்கத்தில் பதிவுசெய்துள்ளனர்:-

ஆதிவாசிகளுக்குச்சொந்தமான இக்கண்டத்தில் புகலிடம் பெற்றுள்ள நாம் அம்மக்களின் குறியீடாக விளங்கும் அவர்களின் பூர்வீக ஆயுதத்தின் பெயரையே இம்மலருக்குச்சூட்டி அவர்களை நினைவுபடுத்துகின்றோம்.

கடந்துவந்த பாதையை மறப்போமேயானால் செல்லும் பாதையும் இருட்டாகிவிடும். இந்தக்கங்காருதேசம் 40 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ஆதிவாசிகளின் தாயகமாக விளங்கியிருக்கிறது. இங்கு புலம்பெயர்ந்து வந்து வாழத்தலைப்பட்டுள்ள அந்நியதேசவாசிகள் அனைவருமே பல்தேசிய கலாசார சூழலுக்குள் தத்தமது அடையாளங்களைப்பேணி வருகின்றனர். அந்தவகையில் இங்கு புகலிடம்பெற்றுள்ள தமிழ் மக்களிடம் உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் தமது கனவுகளையும் கற்பனைகளையும் புனைவுகளாக்கி படைப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

‘பூமராங்’ காற்றிலே எறியப்பட்டால் மீண்டும் அது புறப்பட்ட திசைநோக்கியே திரும்பும். அதுபோன்றதே புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வுக்கோலங்களும். நினைவுகளை பிறந்த தாயகத்திலும் வாழ்வை புகலிடத்திலும் படரவிட்டு எதிர்காலத்தை பரவசத்துடன் நோக்குபவர்களிடத்தில் கடந்த காலங்கள் மீண்டும் மீண்டும் திரும்பி வந்துகொண்டேயிருக்கின்றன. இதுவே படைப்பாளிகளின் எழுத்துக்களிலும் தவிர்க்கமுடியாமல் பிரதிபலிக்கின்றன.

இம்மலரில் 13 கட்டுரைகள் 5 கவிதைகள் 6 சிறுகதைகள் உட்பட மொழிபெயர்ப்புக்கவிதைகளும் சிறுவர் இலக்கிய படைப்பும் பதிவாகியிருக்கின்றன. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினதும் தொடர்ச்சியான எழுத்தாளர் ஒன்றுகூடலினதும் வரலாற்றை முருகபூபதி எழுதியிருக்கிறார். வீட்டிலே தொலைக்காட்சியில் தமிழ் சினிமாப்படம் பார்க்கும் எம்மவர்கள் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளை ரிமோட் கொன்ரோலரினால் ஓடவிட்டு ஓடவிட்டு பார்த்து முழுநீள சினிமாவையே குறும்படமாக்கிவிடும் பண்பை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. புகலிட நாடுகளில் தமிழ்த்திருமணங்களில் தலைமுறையினரிடையே உருவாகும் கருத்துமுரண்பாடுகளை ரேணுகா தனஸ்கந்தா, சிவசம்பு ஆகியோரின் கட்டுரைகள் அலசுகின்றன. மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களை பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா ஆய்வுசெய்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஊடகங்கள் தொடர்பான அறிமுகக்குறிப்பு எழுதியிருக்கிறார் நவரட்ணம் அல்லமதேவன். தலித் இலக்கியப்போராளி டானியலின் கடிதங்களைப்பற்றிய தமது கண்ணோட்டத்தை கானா. புpரபா பதிவுசெய்துள்ளார். எமது தமிழ் மொழியின் பூர்வீகம் குறித்த ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார் திருமதி பாலம்லக்ஷ்மணன். அவுஸ்திரேலியா அரசமைப்பின் சுருக்கமான பார்வையை வரலாற்றுத்தகவல்களுடன் எழுதியிருக்கிறார் மூத்த படைப்பாளி காவலூர் ராஜதுரை.

இலங்கையில் வன்னியில் நடந்த யுத்தத்தின் பின்னர் பாதுகாப்பு படையினரால் அழித்தொழிக்கப்பட்ட தமிழர் நினைவுச்சின்னங்கள் தொடர்பான கட்டுரையை எழுதியிருக்கிறார் ஊடகவியலாளர் தெய்வீகன். தமது அவுஸ்திரேலிய வாழ்வியல் அனுபவங்களை பதிவாக்கியிருக்கிறார் மாலதி முருகபூபதி.

இன்று புதிது புதிதாக தோன்றிக்கொண்டிருக்கும் வலைப்பதிவுகளைப்பற்றிய தமது பார்வைகளை பதிவு செய்துள்ளார் வசந்தன். வலைப்பதிவுகளைப்பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு அவரது ஆக்கம் பயனுள்ளது.

இன்றைய நவீன தமிழ் படைப்பிலக்கியபோக்குகளில் நீடிக்கும் வறுமையான சிந்தனைகளை சாடியிருக்கிறார் நடேசன். இவரது கட்டுரை விவாதத்திற்குரியது. அத்துடன் இலக்கிய உலகில் கவனிக்கப்படவேண்டியது.

அருண் விஜயராணி, யாழ்.பாஸ்கர், ஆழியாள் மதுபாஷினி, கே.எஸ்.சுதாகரன், ஆவூரான் சந்திரன், சிசு.நாகேந்திரன் ஆகியோரின் சிறுகதைகள் மற்றும் கல்லோடைக்கரன், மெல்பன் மணி, அம்பி, இளமுருகனார் பாரதி ஆகியோரின் கவிதைகளும் ஆழியாள் மொழிபெயர்த்த இரண்டு கவிதைகளும் அவுஸ்திரேலியா கங்காருகளுக்கும் பறவைகளுக்கும் தமிழ்ப்பெயர் சூட்டி உஷா ஜவகார் எழுதிய சிறுவர் இலக்கியமும் இம்மலரை சிறப்பிக்கினறன.

கடந்த ஆண்டு மெல்பனில் மறைந்த படைப்பாளி நித்தியகீர்த்தி பற்றிய குறிப்புகளுடனும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாக்களில் பாராட்டி கௌரவிக்கப்பட்டவர்களைப்பற்றிய விபரங்களுடனும் ‘பூமராங்’ மலர் வெளியாகியுள்ளது.

இம்மலரை அழகாக வடிவமைத்து அச்சிட்டவர்கள் சிட்னி ஞானம் ஆர்ட்ஸ் கிரியேஷன்.

மலரின் விiலை கூ12 .00 அவுஸ்திரேலியன் வெள்ளிகள் (தபாற்செலவுடன்) மலரைப்பெற்றுக்கொள்ள விரும்புவோர் காசோலை, காசுக்கட்டளையை பின்வரும் பெயரில் எழுதி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

Australian Tamil Literary & Arts Society

முகவரி:- ATLAS


P.O. BOX 620

Preston

Victoria 3072

2 comments:

Anonymous said...

சிட்னியில் எங்கு கிடைக்கும் என்று அறியத்தரமுடியுமா?

tamilmurasu said...

You can get a copy from kana Pirabha