நூற்றாண்டு நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் ஆரம்பம்
உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு(1924_-2024) நேற்றுமுன்தினம் (23.04.2024) ஆரம்பமாகியுள்ளது.
1924 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியன்று சுவாமிகள் தனது 32 ஆவது வயதில் பண்டிதர் மயில்வாகனன் என்ற நாமத்திலிருந்து விடுபட்டு காவியுடை தரித்து ‘சுவாமி விபுலாநந்தர்’ ஆகினார்.
கிழக்கின் காரைதீவு மண்ணில் 1982.03.27 ஆம் திகதி அவதரித்த சுவாமியின் வாழ்க்கையின் திருப்புமுனையான காலம் துறவறத்தின் பின்னராகும். மயில்வாகனன் என்ற நாமத்துடன் லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியாய், மதுரைத் தமிழ்ச் சங்க பண்டிதராய் மேல்நாட்டு உடையுடன் கம்பீரமாக இருந்த கோலம் மாறி காவிஉடை தரித்து, தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து துறவியாய் பிறப்பெடுத்த நாள் சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஆகும்.
சுவாமிகளை உலகம் போற்றும் பெருமகனாராக விளங்க வைத்தது இத்துறவுநிலை எனலாம்.
விஞ்ஞானம் படித்தவர் மெஞ்ஞானத்துள் மூழ்கினார். தமிழை மூச்சாக்கி வாழ்ந்தார். சமரச சன்மார்க்கத்தின் வழியில் பயணித்தார். சைவத்தைக் கைகளில் ஏந்தினார். 23 வருட துறவு வாழ்க்கை அவரை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. துறவறத்தின் பின்னர்தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசியரானார்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் அறிஞர்கள் பலபேர் இருந்தும்,- ஈழத்து மைந்தனை தமிழ்ப் பேராளுமையாக அண்ணாமலைச் செட்டியார் கண்டுகொண்டார்.
உலகியல் பற்றுக்களையும் அறுத்த சுவாமி மொழியில், சமயத்தில், கலாசாரத்தில், பண்பாட்டில், ஆராய்ச்சியில், சமூகத்தொண்டில், இசையில், நாடகத்தில் பற்றுக் கொண்டு வாழ்ந்தார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல்தமிழ் பேராசிரியரான பின்னர் இலங்கை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியராயும் அணி செய்தார் சுவாமி விபுலாநந்தர். இலங்கையில் பல பகுதிகளில் கல்விக்கூடங்களை நிறுவினார். ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார்.
இலக்கியக் கட்டுரைகள், சமயசன்மார்க்கக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், மாநாடுகள் பலவற்றில் பேருரைகள், என்றுமே பயன்தரும்வகையில் நயமிக்க, பொருள் பொதிந்த கவிதைகள், கவிதை நூல்கள், என்று பல்துறைகளில் -பன்முக ஆற்றல்களை வெளிப்படுத்திய காலம் முத்தமிழ் வித்தகரின் துறவுக்காலமேயாகும்.
அதனால்தான் அவருக்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன. அவருக்குச் சிலை வடிக்கின்றார்கள். உலகெங்கும் இன்றும் போற்றுகின்றார்கள்.
No comments:
Post a Comment