இலங்கைச் செய்திகள்

சம்பந்தனுக்கு மேலும் 3 மாத கால விடுமுறை

குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை மீட்க விரைவில் புதிய சட்டம்

கொக்குவில் புகையிரத நிலையம் கால வரையறையின்றி பூட்டு; சீல் வைப்பு

அமெரிக்க உதவியுடனான பால் உற்பத்தியை நவீனமயப்படுத்த நடவடிக்கை

2024 முதல் காலாண்டில் வருமான இலக்குக்கு அப்பால் 6% வளர்ச்சி


சம்பந்தனுக்கு மேலும் 3 மாத கால விடுமுறை

- சபை அமர்வுகளில் பங்கேற்காமலிருக்க பாராளுமன்றம் அனுமதி

April 25, 2024 4:01 pm 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமலிருக்க மேலும் 3 மாத கால விடுமுறையை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று (24) எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

91 வயதாகும் இரா.சம்பந்தன் தற்போது சுகயீனமுற்றிருக்கும் நிலையிலேயே அவருக்கு மேலும் 3 மாதகாலம் விடுமுறை வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி முன்மொழிந்தார்.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.

இந்த முன்மொழிவுக்கு ஆளும் கட்சியினரும் ஆதரவழித்தமைக்கு அமைய இரா. சம்பந்தனுக்கு மேலும் 3 மாதகால விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

 




குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை மீட்க விரைவில் புதிய சட்டம்

சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

April 27, 2024 1:41 pm 0 comment

ஜனாதிபதி, நீதி அமைச்சர் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்ட பணத்தை மீட்க அரசாங்கம் சட்டமொன்றை கொண்டு வரவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்த கடன் வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கமைய 2024ஆம் ஆண்டாகும் போது சொத்துக்களை அறவீடு செய்தல் தொடர்பான முழுமையான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய குற்றச்செயல்களால் ஈட்டிய சொத்துகள் தொடர்பான சட்டத்துக்கு தேவையான கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நடவடிக்கை முறைகளை தயாரிப்பதற்காக 2023 மார்ச் மாதம் நீதித் துறையின் நிபுணர்களுடனான குழுவொன்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் நியமிக்கப்பட்டது. இக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் குற்றச்செயல்களால் ஈட்டிய சொத்துகள் தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த இந்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உத்தேச சட்டம் தொடர்பில் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ நேற்று கண்டியில் கருத்து தெரிவித்த போது,

“இலஞ்சம், ஊழல், மோசடியூடாக பெறப்பட்ட சொத்துக்கள் எவரிடமேனும் இருப்பின் அதனை அரசுடமையாக்குவதற்கு ஏதுவாக அல்லது பறிமுதல் செய்ய தேவையான சட்டங்களை கொண்டு வருவதற்கான யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக தெரிவித்தார்.

இதற்கு நேற்று முன்தினம் (25) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும், அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கண்டியில் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 25 ஆண்டுகளாக கொண்டு வரப்படாத பல மசோதாக்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்ற முடிந்ததாகவும் அவர் கூறினார். அமைச்சரவையில் கலந்துரையாடி இணக்கப்பாட்டின் பின்னர் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.   நன்றி தினகரன் 






கொக்குவில் புகையிரத நிலையம் கால வரையறையின்றி பூட்டு; சீல் வைப்பு

- டிக்கெட் விற்பனை உள்ளிட்ட ரூ. 20 இலட்சம் பணம் மாயம்

April 26, 2024 8:50 am 0 comment

– புகையிரத நிலைய பொறுப்பதிகாரி கைது
– டிக்கெட் பெற யாழ் செல்ல வேண்டிய சிரமத்தில் பயணிகள்

யாழ்ப்பாணம், கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சுமார் 20 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான பிரயாண சீட்டு விற்பனை மூலமான பணம் உள்ளிட்ட புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான சுமார் ரூ. 20 இலட்ச பணத்தை மோசடி செய்துள்ளமை கணக்காய்வில் தெரிய வந்துள்ளமையால், பொறுப்பதிகாரிக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் புகையிரத நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் , பிரயாண சீட்டினை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தல் காட்சிப்படுத்தப்பட்டு, புகையிரத நிலைய அலுவலக கதவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் புகையிரத நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளமையால் கொக்குவில், திருநெல்வேலி பகுதி மக்களும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், தொழிநுட்ப கல்லூரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி உள்ளிட்ட கல்வியக மாணவர்கள் என பெரும்பாலானோர் புகையிரத பயணங்களை மேற்கொள்ள சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 





அமெரிக்க உதவியுடனான பால் உற்பத்தியை நவீனமயப்படுத்த நடவடிக்கை

- அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் - ஜனாதிபதியுடன் சந்திப்பு

April 27, 2024 11:34 am 

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.   நன்றி தினகரன் 




2024 முதல் காலாண்டில் வருமான இலக்குக்கு அப்பால் 6% வளர்ச்சி

- இதுவரை அரச வருமானம் ரூ. 834 பில்லியன்

April 25, 2024 7:38 pm 

– நாட்டில் நிதி நிர்வாகம் சரியாக இடம்பெறுகிறது

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும், அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நாட்டின் முறையான நிதி முகாமைத்துவம் மற்றும் வருமான முறைமையைக் பார்க்கும் போது, 2024 ஆம் ஆண்டு வருமான இலக்குகளை எட்டக்கூடிய ஆண்டாக அமையும் எனவும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

இந்த ஆண்டு பணப்புழக்கத்தை முகாமைத்துவம் செய்வதில் திறைசேரி கடும் சவாலை எதிர்கொள்கிறது. தற்போதைய சட்டத்தின்படி கடன் பெறவும், பணத்தை அச்சிடவும் முடியாமலிருப்பதே அதற்கு காரணமாகும். நலன்புரி மற்றும் மீள்கட்டமைப்புச் செயற்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும், நாட்டில் சரியான முறையில் நிதி நிர்வாகம் செய்யப்படுகிறது.

மீள்கட்டமைப்புச் செலவுகள் குறித்து கவனம் செலுத்தி 2024 முதல் காலாண்டை 2020 முதல் காலாண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, 2024 முதல் காலாண்டில் மீள் கட்டமைப்புச் செலவுகள் 35% அதிகரித்துள்ளன. கடன் வட்டியை திருப்பிச் செலுத்துவதிலும் 114% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மூலதனச் செலவுகளும் 60% ஆக அதிகரித்துள்ளன. பொதுக் கடனின் மூலதனத்தை திருப்பிச் செலுத்துவதிலும் 177% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 93,670 மில்லியன் ரூபா சமுர்திக் கொடுப்பனவுக்காக செலவிடப்பட்டுள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 117,107 மில்லியன் ரூபா நலன்புரி உதவிகளை வழங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் 25% வளர்ச்சியைக் காண்பிக்கிறது.

மேலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அரச வருமானம் 6% வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 787 பில்லியன் ரூபா அரச வருமானமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாம் 834 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளோம்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 430 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. இலங்கை சுங்கம் 354 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. மதுவரி திணைக்களம் 51 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்நிலை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். நாட்டில் சரியான நிதி முகாமைத்துவம் காணப்படுவதையும் உறுதிசெய்ய முடிந்துள்ளது.

மேலும் இவ்வாறான வருமான முறையைக் கருத்தில் கொண்டால் 2024ஆம் ஆண்டு வருமான இலக்குகளை எட்டக்கூடிய ஆண்டாக அமையும் என நம்பலாம்.

அத்தோடு, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டியின் படி, பெப்ரவரி மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5.1% ஆக காணப்பட்டது. இது மார்ச் மாதத்தில் 2.5%மாக குன்றியது. அதேபோல் பெப்ரவரியில் 5.1% ஆக இருந்த உணவு பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.7% ஆக கணிசமானக் குறைவைக் காட்டுகிறது.

இந்த அனைத்து தரவுகளும் நாட்டின் பொருளாதார நிலைமை சுமூகமான தன்மையை அடைந்துள்ளதை உறுத்திப்படுத்துகின்றன.   நன்றி தினகரன் 



\

No comments: