கவிஞர் அம்பி எனும் இனிய எழுத்தாளன் எம்மிடம் இருந்து விடை பெறுகின்றார். செ.பாஸ்கரன்

 .

கவிஞர் அம்பி அவர்கள் மறைந்து விட்டார். செய்தியை கேள்விப்பட்டதும் பல

நினைவுகள் பின்னோக்கி பாய்கின்றது. கவிஞர் அம்பி என்றால் குழந்தைகள்

உட்பட பெரியவர்கள் எல்லோருக்குமே பரீட்சியமான பெயர். 95 வருடங்கள்

இறுதி மூச்சு நிற்கும் வரை பேசிக்கொண்டே இருந்தவர். கவிதைகள் பற்றி,

இலக்கியம் பற்றி எழுத்தாளர்கள் பற்றி எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தவர்

கவிஞர் அம்பி அய்யா அவர்கள்.


இந்த மனிதனின் வாழ்வியல் வரலாற்றில் அன்பான குடும்பம், அழகான உறவுகள்

அதற்கு மேலான இலக்கிய நண்பர்கள், வயது வித்தியாசம் இல்லாமல் இவருக்கு

இருந்த நட்பு அளப்பெரியது. பல சாதனைகள் மற்றவர்களுக்கு தெரியாத பல

விடயங்கள் வலது கை கொடுப்பதை இடது கை அறியாத கர்மவீரன் கர்ணன்

என்பார்கள் அதுபோல் அம்பியவர்கள் செய்த பல உதவிகள் பலருக்கு தெரியாமலும்

இருக்கின்றது. கிரீன் அவர்களை பற்றி பேசும் போது அவர் உள்ளம் எவ்வளவு

மகிழ்ச்சி கொள்ளும் என்பது அவரோடு உறவாடிய கணங்களில் பல முறை

கண்டிருக்கின்றேன். 


எத்தனையோ சமூக விடயங்களில் ஈடுபட்டு சேவையாற்றிய இந்த மனிதனோடு

பழகிய பின் பல விடயங்களை உணரக்கூடியதாக இருந்தது. உரத்து பேசாத சுபாவம்

ஆளுமை மிக அதிகமாக இருந்தாலும் அனைவரோடும் அமைதியான குரலில் அன்பாக

பேசி தன்னுடைய கருத்துக்களிலே இருக்கின்ற ஆழத்தை புரிய வைக்கின்ற ஒரு

கவிதை தான் அம்பி அய்யா அவர்கள். இளம் குழந்தைகளுக்காக பாடல்களையும்

கவிதைகளையும் எழுதினதாலோ என்னவோ கவிஞருடைய மனம் கூட ஒரு

குழந்தையைப் போல் தான் எப்போதுமே இருந்து கொண்டிருந்தது. எந்த மிகப்பெரிய

விடயத்தை பேசுகின்ற போதும் லாவகமாக அறிவுக் குழந்தை ஒன்று பேசுகின்றது

போல் பேசி அந்த விடயத்தை தீர்த்து வைக்கின்ற மிகப்பெரிய ஆளுமை கவிஞர் அம்பி.

அவருக்கு இருந்த தீராத ஆசை எவ்வளவு முறை பேசினாலும் இலக்கியவாதிகளோடும்

தனக்கு பிடித்த உறவுகளோடும் கவிதைகளைப் பற்றி இலக்கியங்களைப் பற்றி

பேசுவதுதான். அவுஸ்திரேலிய தமிழ் முளக்கம் வானொலியில் நான் நிகழ்ச்சிகளை

தயாரித்து படைத்துக் கொண்டிருந்தேன் அவர் அந்த வானொலியை

கேட்டுக்கொண்டிருப்பார். எத்தனை ஆண்டுகள் என்று கூற முடியாது அவர் அந்த

வானொலியை கேட்டுக் கொண்டே இருப்பார். நிகழ்ச்சி முடிந்ததும் தொலைபேசியை

அழுத்தி பாஸ்கர் இன்று நீங்கள் மூன்று நிமிடங்கள் முன்பதாகவே முடித்து

விட்டீர்களே என்பார், அல்லது இந்த விடயத்தை பற்றி நீங்கள் பேசியது மிக அழகாக

இருந்தது, அல்லது இதில் இப்படி ஒரு விடயம் இருக்கின்றதா அதை சற்று சரிபார்த்துக்

கொள்ளுங்கள் என்று கூறுவது, இப்படி ஒரு விமர்சகராக பல தடவைகள் ஊக்கப்படுத்தி

ய ஒரு வானொலி ரசிகன்.


90 வது வயதை அவர் அடைந்தபோது தமிழ் மக்கள் சார்பிலே ஒரு பாராட்டு விழா

அவருக்காக எடுக்கப்பட்டது. அதிலே ஒரு கவிதை அவரைப் பற்றி வாசிப்பதற்கு

சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த கவிதையை வாசித்து விட்டு அந்த நிகழ்வு நிறைவுற்ற

பின் வீடு வந்து விட்டேன், மறுநாள் மாலை என்னை அழைக்கின்றார் அந்த கவிதையை

மீண்டும் ஒருமுறை நான் கேட்க வேண்டும். உங்களுடைய கவிதை கைகளில்

இருக்கின்றது ஆனால் நீங்கள் வாசித்த போது அந்த கவிதைக்கு இருந்த உயிர் வேறாக

இருந்தது ஆகவே மீண்டும் ஒருமுறை வாசிப்பீர்களா என்று கேட்டார் நானும்

தொலைபேசியில் அவருக்காக அந்த கவிதையை மீண்டும் வாசித்துக் காட்டினேன்.

சிரித்துக் கொண்டே நீர் வாசிக்கின்ற போது இந்த கவிதைக்கு எவ்வளவு அழகு

இருக்கின்றது தெரியுமா என்று என்னை பாராட்டினார். ஒவ்வொரு விடயத்துக்காகவும்

ஒருவனை பாராட்டிக் கொண்டிருப்பதே அவருடைய இயல்பு அதுதான் எம் அம்பி ஐயா

அவர்கள்.


இவரோடு பழகிய நாட்கள் இவரோடு கவியரங்கங்களில் பங்கு பற்றிய நாட்கள் இவை

எல்லாம் என் மனதிலே ஆழமாக பதிந்த விடயங்கள் இவருடைய தலைமையில்

கவியரங்கம் செய்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு தலைமை எவ்வளவு

ஆழமாகவும் அதே சமயம் நகைச்சுவையாகவும் இருக்க வேண்டுமோ அதற்கு

எடுத்துக்காட்டாக இருந்தவர் கவிஞர் அம்பி அவர்கள். கவிநயத்தோடும் ரசனையோ

டும் அதை செய்து முடிப்பார். பலமுறை என்னிடம் கேட்பார் நீங்கள் கவிதை

தொகுப்பு போட்டு விட்டீர்களா என்று, எப்போதும் நான் கூறுகின்ற மறுமொழி

இல்லை என்பதுதான். பாஸ்கர் நீங்கள் கவிதை பாடுவதோ அல்லது கவிதை

எழுதுவதோ எவ்வளவு முக்கியமோ அதுபோல எழுதுகின்ற கவிதைகளை

தொகுப்பாக்குங்கள் நாலு பேருடைய கையிலே அப்போது தான் அது சென்று சேரும்

எப்போதாவது ஒருவனுக்கு உங்கள் கவிதை தேவைப்படுகின்ற போது அதை பெற்றுக்

கொள்வார்கள் என்பார். இது ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல எத்தனையோ

முறை என்னிடம் சளைக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தார் அதனுடைய

விளைவாகத்தான் என்னுடைய கவிதை தொகுதியான முடிவுறாத முகாரி கவிதத்

தொகுதி வெளிவந்தது. அந்த வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டு அதற்காக

ஆற்றிய உரை இப்போதும் என் நினைவுகளை தட்டிச் செல்கின்றது.

எங்கு இலக்கிய விழாக்கள் இடம் பெற்றாலும் அங்கு வரவேண்டும் அதிலே கலந்து

கொள்ள வேண்டும் என்பதை ஆவலோடு எதிர்பார்ப்பார் அதுபோல அந்த ஆசைகளை

நிறைவேற்றுவதற்காகவே பிறந்தது போல் அவருடைய மகன் திருக் குமார் அவர்கள்

எப்போதும் அம்பி ஐயாவை அழைத்துக் கொண்டு அந்த விழாக்களுக்கு எல்லாம்

வருவார், அவற்றையெல்லாம் பார்க்கின்றபோது இந்த புலம்பெயர்ந்த நாட்டிலே

இப்படி ஒரு மகன் அவருக்கு கிடைத்திருப்பது அவர் செய்த மிகப்பெரிய பாக்கியம்

என்று நான் எண்ணிக் கொள்வேன். அதிகம் நடக்க இயலாமல் போனபோது சக்கர

நாற்காலியிலே அவரை வைத்து இந்த விழாக்களுக்கு எல்லாம் அழைத்து வருகின்ற

திருக்குமார் அவர்களுக்கும் இந்த வேளையிலே நன்றி கூற கடமைப்பட்டு

இருக்கின்றேன். அவருடைய வாழ்விலே நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், நல்ல

உறவுகள் நல்ல நண்பர்கள் என்று எல்லாமே நன்றாக அமைந்து விட்டது அதுபோல்

நீண்ட காலம் அவருடைய நல்ல வாழ்வும் தொடர்ந்தது என்று தான் கூற வேண்டும்.

அவர் இறக்கம் வரை அவருடைய நினைவுகள் மாறாமல் எல்லாவற்றையும் எதை

கேட்டாலும் சுட்டி சொல்லுகின்ற அந்த நினைவுகளோடு அவர் வாழ்ந்து இன்று

அமைதியான முறையில் அவர் உயிர் பிரிந்து இருக்கின்றது.


எழுத்தாளர்களாக பழகிய சிலரிலே இந்த மனிதன் என் மனதை எல்லாம் விட்டு

அகலாத ஒரு மனிதன். அம்பி அய்யா என்ற வார்த்தை என் நெஞ்சிலே மட்டுமல்ல

அவரோடு பழகிய ஒவ்வொருவருடைய நெஞ்சங்களிலும் ஒலித்துக் கொண்டே

இருக்கும் அவருடைய நினைவுகள் எப்போதும் நமக்கு பல பாடங்களை சொல்லிக்

கொண்டிருக்கும். அவர் ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்தவர்.


1950 ஆம் ஆண்டில் தினகரனின் இலட்சியச் சோடி என்ற கதையுடன் அறிமுகமாகிய இவர், கிறீனின் அடிச்சுவட்டில், அம்பிப் பாடல், வேதாளம் சொன்ன கதை, கொஞ்சும் தமிழ், அம்பி கவிதைகள், அம்பி மழலை, பாலர் பைந்தமிழ், மருத்துவத் தமிழ் முன்னோடி, Lingering Memories, Scientific Tamil Pioneer ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழுக்குச் செய்த அளப்பரிய சேவைகளில் மருத்துவத் தமிழ் முன்னோடி டொக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களைத் தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியமையும், கிறீன் ஞாபகார்த்த முத்திரையை இலங்கை அரசு வெளியிட ஆக்கபூர்வமாக ஆலோசனை வழங்கியமையையும் குறிப்பிடலாம். அத்தோடு மானிப்பாயில் நிறுவப்பட்ட கிறீன் மருத்துவமனைக் குறித்தும் டொக்டர் கிறீன் மேற்கொண்ட தமிழ்ப்பணி பற்றியும் ஆங்கிலத்தில் விரிவான நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார்.

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு விருது, இலங்கை இந்து கலாச்சார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’, கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருது, கனடாவில் சி.வை. தாமோதரம்பிள்ளை விருது, அவுஸ்திரேலியாவில் மெல்பன் ‘நம்மவர்’ விருது, அவுஸ்திரேலியாவில் கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருது ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
என்னுடைய புத்தக அலமாரியிலே அவருடைய பெரும்பாலான கவிதை புத்தகங்களுமே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. HSC யில் தமிழ் பாடத்தை எடுக்கும் மாணவர்கள் பாடசாலை சோதனைளுக்கோ அல்லது குழந்தை இலக்கியத்திலே அம்பியினுடைய பங்களிப்பு என்ற ஆராய்விலே சில பிள்ளைகள் அவற்றை செய்கின்றபோது என்னிடம் வந்து அம்பி ஐயாவினுடைய புத்தகங்களை எடுத்துச் செல்வார்கள். ஒரு சிலர் திருப்பி தர மறந்து விடுவார்கள். ஆனால் கொடுக்கும்போதே நான் சொல்லிக் கொடுப்பேன் புத்தகங்கள் விலைமதிப்பில்லாதவை தயவு செய்து திருப்பித் தாருங்கள் என்று இருந்தாலும் ஒரு சில சமயம் சில புத்தகங்கள் தவறி விடும், அப்படி அம்பிஐயாவினுடைய ஒரு கவிதை தொகுப்பு கூட இன்றும் என் கைக்கு திரும்பி வராமலே இருக்கின்றது. இன்னும் ஒரு பெண் பிள்ளை ஒரு முறை என்னுடைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு செல்வதற்காக கேட்டபோது நான் மிக அழுத்தமாக அவரிடம் சொன்னேன் உங்களுடைய வேலை முடிந்ததும் இத்தனை புத்தகங்களையும் நீங்கள் திருப்பித் தர வேண்டும் இது அம்பி ஐய்யாவினுடைய தொகுப்பு என்னுடைய புத்தக அலமாரியில் இடம் பெற்றுக் கொண்டிருப்பவை, இது பலருக்கு தேவைப்படுகின்ற ஒன்றாக இருக்கும் என்று கூறி கொடுத்திருந்தேன், அவர் திருப்பி அந்த புத்தகங்களை தன்னுடைய சோதனை முடிந்ததும் தருகின்ற போது மேலதிகமாக அம்பி அவர்களுடைய ஒரு புத்தகத்தையும் கொண்டு வந்தார் அங்கிள் உங்களிடம் இது இல்லை ஆகவே தான் இதை நான் பார்த்தபோது வாங்கினேன் இது உங்களிடமே இருக்கட்டும் ஏனென்றால் பலருக்கு இது உதவியாக இருக்கும் என்று கூறி அதையும் என்னிடம் தந்து விட்டு சென்றார்.

இவர் ஒரு இலக்கியவாதியாக இருந்து இலக்கியங்களை, கவிதைகளை ரசித்து

பேசியதோடு மட்டுமில்லாமல் எங்களை எல்லாம் அழைத்து சுவை மிகுந்த

உணவுகளையும் பரிமாறிய வாழ்வியல் மிக அற்புதமானது. துயரில் வாடும் அவரது

மனைவி அவரது பிள்ளைகள் அனைவருக்கும் எமது அனுதாபங்கள். அவருடைய

நினைவுகள் என்றும் நீங்காதவை அவர் மறைந்தாலும் அவர் நினைவுகள் நம்மோடு

வாழ்ந்து கொண்டிருக்கும்.

ஒரு இனிய எழுத்தாளன் எம்மிடம் இருந்து விடை பெறுகின்றார். அவர் நினைவுகள்

எம்மோடு வாழும்.

No comments: