கறுப்புப் பணம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு அதன் பொருளாதார


வளர்ச்சிக்கு சவாலாக விளங்கிய ஒரு விவகாரம் தான் கறுப்புப் பணம். தங்களுடைய உண்மையான வருமானத்தை மறைத்து குறைந்தளவு வருமானத்தை அரசாங்கத்துக்கு காட்டி மீதி பணத்தை ஒளித்து , அதற்கு வருமான வரி காட்டாமல் பதுக்கும் பணத்துக்குத்தான் கறுப்புப் பணம் என்று பெயர். இந்த சட்ட விரோத நடவடிக்கைக்கு தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள்,என்று எவரும் விதிவிலக்கல்ல. இந்த கறுப்புப் பணத்துக்கு எதிராக அறுபது வருடங்களுக்கு முன் ஒரு படம் தயாரானது. திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய கறுப்புப் பணம் என்ற பெயரில் தயாரான இந்தப் படத்தை தயாரித்தவர் கவிஞர் கண்ணதாசன். தயாரிப்போடு நின்று விடாது கதைவசனம், பாடல்கள் என்பவற்றையும் அவரே எழுதியிருந்தார்.நகரத்தில் கோடிஸ்வரராகவும், தர்மப் பிரபுவாகவும் திகழும் தணிகாசலம் ஏழைகளுக்கு உதவுகிறர் , நல்ல காரியங்களுக்கெல்லாம் வாரி வழங்குகிறார் . அவரின் மகன் காந்தி தொழில் அதிபர் சட்டநாதனின் மகள் தேவியை காதலிக்கிறான். ஆனால் சட்டநாதனோ தொழில் ரீதியாக மற்றுமொரு தொழில் அதிபரான தாமோதரத்திடம் வாங்கிய கறுப்புப் பணத்தை கொள்ளைக்காரரிடம் பறி கொடுத்து விட்டு , பணத்துக்கு பதில் தன் இளம் மகள் தேவியை வயதான தாமோதரத்துக்கு திருமணம் செய்து கொடுக்க தீர்மானிக்கிறார். மண மேடையில் வைத்து தாமோதரம் கடத்தப் படுகிறார். அவரிடமுள்ள கறுப்புப் பணம் பற்றிய தகவல் கொள்ளையர்களுக்கு தெரிய வருகிறது. அதே சமயம் சினிமா நடிகை வீட்டில் இருந்த கறுப்புப் பணமும் திருட்டு போகிறது. கறுப்புப் பணத்தை பறி கொடுத்தவர்கள் திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி தாங்கள் பறி கொடுத்த பணத்தைப் பற்றி பொலிஸாருக்கு புகார் கொடுக்க மறுக்கிறார்கள். போலீசோ திணறுகிறது.

இப்படி அமைந்த கதையில் , முக்கிய வேடமான தணிகாசலமாக

கண்ணதாசன் நடித்தார். நீண்ட காலம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆவலை இந்தப் படத்தில் அவர் நிறைவேற்றிக் கொண்டார். அவர் ஏற்ற வேடத்துக்கு அவரின் நெடிய உருவமும் கை கொடுத்தது. ஆனால் இரண்டு தொழிலதிபர்களாக டி எஸ் பாலையா , கே சாரங்கபாணி இருவரும் நடித்த சீரியஸான இரண்டு பாத்திரங்களும் நகைச்சுவை பாத்திரங்களாக அமைந்ததால் சொல்ல வந்த விஷயம் சீரியஸ் இல்லாமல் போய் விட்டது. இவர்களோடு குலதெய்வம் ராஜகோபாலும் சேர்ந்து கொள்கிறார். படத்தில் மனோரமா இல்லை, ஆனால் அவரின் கணவர் ராமநாதன் இருக்கிறார். இவர்களோடு சந்திரகாந்தா, சண்முகசுந்தரம், எஸ் வரலஷ்மி,வி எஸ் ராகவன், சி கே சரஸ்வதி, என்னத்தே கன்னையா, எஸ் என் லஷ்மி, எம் எஸ் எஸ் பாக்கியம் ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தின் கதாநாயகி கே ஆர் விஜயா. அழகாகவும் , இளமையாகவும் வருகிறார். அவருக்கு ஜோடி பாலாஜி! மர்மப் பெண்ணாக வரும் ஷீலாவின் பாத்திரமும் கவரும் படி அமைந்தது.


நடிகராகவும் , கதைவசனகர்த்தாவாகவும் மாறியிருந்த கண்ணதாசன் தனது ஒரிஜினல் தொழிலை இதில் மறந்து விடவில்லை. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையில் விதவிதமான பாடல்களை எழுதியிருந்தார் . சமதர்ம கொள்கையை விளக்கும் வகையில் அமைந்த எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் பாடல் படம் வெளியான காலம் தொட்டு ஒவ்வொரு மே தினத்தன்றும் வானொலிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதே போல் இலக்கிய செறிவு மிக்க தங்கச்சி சின்னப் பொண்ணு தலை என்ன ஆடுது , பெண்ணின் விரக தாபத்தை விளக்கும் அம்மம்மா கேளடி தோழி சொன்னாரே ஆயிரம் சேதி, இரவு விடுதி பாடலான ஆட வரலாம் ஆட வரலாம் ஆடவரெல்லாம் ஆட வரலாம், திடீர் தலைவர்கள், பணக்காரர்களை கிண்டல் செய்யும் கையிலே பணம் இருந்தால் கழுத்தை கூட அரசனடி கை தட்ட ஆளிருந்தால் காக்கை கூட நடிகனடி ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன.

படத் தொகுப்பை எஸ் சூர்யா கவனித்த போதும் அவரின் மறைவை

அடுத்து ஆர் தேவராஜன் அதனை பூர்த்தி செய்தார். படத்தை ஜி ஆர் நாதன் ஒளிப்பதிவு செய்தார். அன்றைய காலகட்டத்திலேயே மூட் லைட்டில் கட்சிக்கு பொருந்தும் படி படமாகியிருந்தார். அதுமட்டுமன்றில் படத்தை இயக்கியவரும் அவரே.

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவது போல் சினிமா உலகில் இருந்து கொண்டு கறுப்புப் பணத்துக்கு எதிராக படம் தயாரித்த கண்ணதாசனின் துணிச்சலை பாராட்டத்தான் வேண்டும். படம் சுமாரான வெற்றியையே பெற்ற போதும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு இதே கதைக் கருவை அடிப்படையாகக் கொண்டு உருவான ஷங்கரின் ஜென்டில்மேன் படம் பெரும் வெற்றியை பெற்றுக் கொண்டது.

No comments: