தமிழ் கட்சிகளின் கவனத்துக்கு!

 April 25, 2024


ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தென்னி லங்கை அரசியல் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. மும்முனை போட்டிக்கான நிலைமை தெரிகின்றது.
தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களாக வெளித்தெரிபவர்கள் ஒவ்வொருவரும் – குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகி யோர் தமிழ் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்னும் அடிப்படையில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் எனவும் தெரி கின்றது. ஆனால், தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கும் எவருமே தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வை முன்வைக்கும் முதுகெலும்பு இல்லாதவர்களாகவே இருக் கின்றனர். இதேபோன்று, மற்றவர்களை விடவும் மாறுபாடானவர் என்னும் அடிப்படையில் தன்னை காண்பிக்க முற்படும் அநுர குமார திஸநாயக்க இலங்கையர் என்னும் நிலைமையை ஏற் படுத்தப் போவதாகக் கூறுகின்றார். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னையை அங்கீகரிக்காமல் – தமிழ் மக்கள், தமிழ் மக்களாக வாழக்கூடிய நிலையை ஏற்றுக்கொள்ளாமல் எவ்வாறு தமிழ் மக்களை இலங்கையர் என்னும் நிலையில் வாழவைக்க முடியும்? அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்னும் போட்டியில் ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தென்னிலங்கை கட்சிகளும் ஒரு விடயத்தில் ஒன்றாகவே இருக்கின்றன.
அதாவது, தமிழ் மக் களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசினால் சிங்கள மக்களின் வாக்குகளை இழந்துவிடுவோம். எனவே, இதுபற்றி பொது வெளிகளில் பேசக்கூடாது. இவ்வாறானதொரு நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறான முடிவை எடுப்பது? இதற்கு பதிலளிக்க வேண் டிய தமிழ்த் தேசிய கட்சிகளோ தங்களுக்குள் முட்டிமோதிக் கொள் வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தமிழ் மக்களை தயார்படுத்தும் பணிகளை எவருமே முன்னெடுக்கவில்லை.
‘மக்கள் மனு’ சிவில் சமூகம் தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை பொது வெளிக்குக் கொண்டுவந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் தமிழ் பொது வேட்பாளர் விடயம் பேசப்பட்டாலும் கூட இந்தளவு பரவலாக பேசப்படவில்லை.
இந்த நிலையில், இது தொடர்பில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்து தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டியிருக்கின்றது. உண்மையில், தமிழ் அரசியல்சூழல் பரபரப்பாக இருக்க வேண்டும். ஆனால், அப்படி இடம்பெறவில்லை. காரணம் என்ன? ஒரு பதில்தான் உண்டு.
கட்சிகளின் தலைவர்கள் அனை வருக்கும் வயது மட்டும் போகவில்லை. புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு புத்தாக்கம்மிக்க அணுகுமுறைகள் தொடர்பில் சிந்திக் கக்கூடியவாறான ஆற்றலையும் அவர்கள் இழந்துவிட்டனர் போலும். இது மாற்றத்துக்கான தேர்தல் என்று கூறிக்கொண்டு, முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் முயற்சியையும் சிலர் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.
செயல்பட வேண்டியவர்கள் அமைதியாக இருந்தால் செயல்படக்கூடாதவர்களே விடயங்களைத் தீர்மானிப்பார்கள். எனவே, தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக்கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தும் அனைத்துத் தரப்புகளும் தங்களின் அமைதிக்கு முற்றுப்புள்ளியிட வேண்டும்.
நன்றி ஈழநாடு 





No comments: