படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல்
காசா போருக்கு எதிராக: அமெரிக்க பல்கலைகளில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பு
காசாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் 200 நாட்களைத் தொட்டது; 34,183 பேர் பலி
மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல்: 14 பலஸ்தீனர் பலி
ஹமாஸ் தலைவருடன் எர்துவான் பல மணி நேரம் பேச்சுவார்த்தை
படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல்
எகிப்து உயர்மட்ட தூதுக்குழு இஸ்ரேல் விரைவு
தனது நாட்டு எல்லையில் அமைந்திருக்கும் ரபா மீதான படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சும் எகிப்து புதிய போர் நிறுத்த முயற்சியாக உயர் பட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.
காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான படையெடுப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வலுத்திருந்தபோதும் அங்கு தரைவழி நடவடிக்கைக்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இதற்கான சமிக்ஞையாகவே அங்கு தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ரபா நகர கடற்கரையில் வேலை செய்துகொண்டிருந்த மீனவர் ஒருவர், இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.
காசா கடற்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை செயற்படுத்தி வரும் இஸ்ரேலினால் அங்குள்ள மீனவர்கள் தொடர்ந்து தொந்தரவுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ‘நட்சரிட் இடைவழியில்’ செயற்படும் இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் கடந்த வியாழனன்று (25) மோட்டார் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக போர் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரபா மீதான படை நடவடிக்கைக்கு இஸ்ரேலிய படையினர் வெளிப்படையாக தயாராகி வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ரபா படையெடுப்பு தொடர்பில் சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில் இஸ்ரேல் இரு மேலதிக படைப்பிரிவுகளை அழைத்திருப்பதோடு, ரபாவுக்கு அருகில் கான் யூனிஸ் நகரில் பாரிய அளவில் வரிசையாக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பது செய்மதி படங்கள் காட்டுகின்றன.
ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதற்கும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 133 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ரபா மீதான படை நடவடிக்கை அவசியம் என்று இஸ்ரேல் கூறி வருகிறது.
எனினும் காசா விளிம்பில் உள்ள ரபா நகர் இடம்பெயர்ந்த மக்களின் கடைசி அடைக்கலமாக இருப்பதோடு அங்கிருந்து அவர்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டபோதும் அது நடைமுறை சாத்தியமற்றது என்று ஐ.நா. அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் வடக்கில் காசா நகரில் உள்ள அல் ஷபா குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலை அடுத்து ஒரு குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் காசா நகரில் இயங்கும் கடைசி மருத்துவமனையான அல் அஹ்லி அரபு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இஸ்ரேல் இராணுவம் நடத்திய பாரிய சுற்றிவளைப்பில் அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை பேரழிவையும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கும் எகிப்து, உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.
இழுபறி நீடிக்கும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் புதிய முயற்சியாக எகிப்து உளவுப் பிரிவு தலைவர் அப்பாஸ் கமால் தலைமையிலான குழு ஒன்றே இஸ்ரேல் விரைந்துள்ளது.
இதில் ஹமாஸ் பிடியில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய கணிசமான எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிப்பது தொடர்பிலேயே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவிருப்பதாக எகிப்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் முழுமையான போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படை வாபஸ் பெறும் தமது நிபந்தனையில் இருந்து பின்வாங்கப்போதில்லை என்று ஹமாஸ் கூறி வருவதோடு அந்த நிபந்தனைகளை இஸ்ரேல் மறுத்து வருகிறது. ஹமாஸ் முழுமையாக தோற்கடிக்கப்படுவது மற்றும் அதன்பின் காசாவில் பாதுகாப்பு நிலைப்படுத்தப்படும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறுகிறது.
ரபாவையொட்டி இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எகிப்துடனான காசா எல்லையில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்படுவதற்கு அதிருப்தியை வெளியிடவும் இஸ்ரேல் சென்றிருக்கு எகிப்து தூதுக் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
ரபாவில் உள்ள பலஸ்தீனர்கள் எல்லை கடந்து எகிப்துக்குள் வர அனுமதிக்கப்போதில்லை என்று எகிப்து ஏற்கனவே உறுதியாக குறிப்பிட்டுள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு எகிப்துடன் கட்டார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் ரபா மீதான படையெடுப்பு இந்த பேச்சுவார்த்தையை முறிக்கும் என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘ரபாவில் இஸ்ரேல் எதிர்பார்த்ததை அடையாது’ என்று மூத்த ஹமாஸ் அதிகாரியான காசி ஹமாத் தெரிவித்தார். ஏழு மாத போரில் ஹமாஸை ஒழிப்பது அல்லது பணயக்கைதிகளை விடுவிப்பது ஆகிய எந்த இலக்கையும் இஸ்ரேல் அடையவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
காசா போர் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு இடையில் மோதலை தூண்டி இருக்கும் சூழலில் அது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமகன் ஒருவன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
கபர் சுபா மலைப் பகுதியில் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி மேற்கொண்ட சிக்கலான அதிரடி தாக்குதலில் இரு இஸ்ரேலிய வாகனங்களை அழித்ததாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டது.
இது தொடர்பில் இஸ்ரேல் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
தெற்கு லெபனானில் ஷெபா கிராமத்தைச் சூழ ஹிஸ்புல்லா இலக்குகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதாக அது குறிப்பிட்டது. இதில் பல வீடுகளும் சேதமடைந்திருப்பதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா மோதல்களில் லெபனானில் குறைந்தது 380 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் 252 ஹிஸ்புல்லா போராளிகளும் அடங்குவதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
இந்தக் காலப்பகுதியில் 11 இஸ்ரேலிய படையினர் மற்றும் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
காசா போருக்கு எதிராக: அமெரிக்க பல்கலைகளில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பு
காசா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் யாலே பல்கலைக்கழகத்தில் இருந்து ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு நிர்வாகங்கள் போராடி வருகின்றன.
நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்த பொலிஸார் பலரை கைது செய்தனர். முன்னதாக யாலே பல்கலைக்கழகத்திலும் பல மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கொலம்பியாவில் வகுப்புகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதனையொத்த ஆர்ப்பாட்ட முகாம்கள் பார்க்லி எம்.ஐ.டீ. மற்றும் நாடெங்கும் உள்ள ஏனைய கல்லூரிகளிலும் பரவியுள்ளன.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசா போர் வெடித்தது தொடக்கம் அந்தப் போர் மற்றும் கருத்துச் சுதந்திரம் பற்றி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கடும் விவாதங்களில் நீடித்து வருகின்றன. இதில் பல்கலைக்கழகங்களில் முகாம்கள் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் போர் தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். நன்றி தினகரன்
காசாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் 200 நாட்களைத் தொட்டது; 34,183 பேர் பலி
மருத்துவமனை புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் 283 ஆக உயர்வு
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்று (23) 200ஆவது நாளை தொட்ட நிலையில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,183 ஆக உயர்ந்துள்ளது என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை குறைவதற்கான சமிக்ஞைகள் இல்லாத நிலையில் வடக்கு, மத்திய மற்றும் மக்கள் நிரம்பி வழியும் தெற்கு காசாவில் இஸ்ரேலின் அதிரடி தரைவழி நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதோடு வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களும் இடைவிடாது இடம்பெற்று வருகின்றன.
மத்திய காசாவின் நுஸைரத், புரைஜ் மற்றும் மகாசி அகதி முகாம்கள் மீது கடந்த 48 மணி நேரமாக இடைவிடாது தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கில் காசா நகர், அதன் கிழக்கு பகுதியான ஷுஜாயி மற்றும் செய்தூன் பகுதிகளில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. அங்கு தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் கட்டடங்கள் தாக்கி அழிக்கப்பட்டு வருவதாகவும், அது ஒரு தகர்ப்பு நடவடிக்கை போன்று இருப்பதாகவும் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் விபரித்துள்ளார்.
மறுபுறம் காசா நகரில் பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு இடையே மோதல்களும் பதிவாகியுள்ளன. இந்த நகரில் இராணுவ நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டு பலஸ்தீன போராட்டக் குழுக்கள் நீக்கப்பட்டு விட்டதாக இஸ்ரேல் கூறி வரும் நிலையிலேயே அங்கு மோதல் நீடித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
குறிப்பாக இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வரும் எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் நீடித்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது. ரபாவின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் கடுமையான சூடு நடத்தி வருவதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. அங்கு ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் தாக்குதல்களில் 77,143 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கான் யூனிஸ் நகரில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் இந்த மாத ஆரம்பத்தில் வாபஸ் பெற்ற பின் அங்குள்ள நாசர் மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.
சிவில் பாதுகாப்பு நிறுவனத்தால் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த புதைகுழியில் தேடுதல் நடத்தி வருவதோடு தமது அன்புக்குரியவர்களை தேடி உறவினர்கள் அங்கு விரைந்து வருகின்றனர். இந்த புதைகுழியை தோண்டுவது மற்றும் உடல்களை அகற்றுவதற்கு உதவியாக 1,500 பிரேதப் பைகள் மற்றும் பாதுகாப்பு பொருட்களை வழங்கி இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
‘எனது மகன் ஜமாலின் உடலைத் தேடி ஐந்தாவது நாளாகவும் நான் இங்கு வந்திருக்கிறேன். துரதிருஷ்டவசமாக எனது மகனின் உடலை என்னால் கண்டுபிடிக்கக் கிடைக்கவில்லை’ என்று ராயிதா அபூ அல் ஓலா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
நாசர் மருத்துவமனை முற்றவெளியில் இந்தத் தேடுதல் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதோடு இஸ்ரேல் இது தொடர்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.
காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேலிய படை சுற்றிவளைப்புகள் மற்றும் உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அங்குள்ள ‘மருத்துவ உட்கட்டமைப்புகள் சீர்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது’ என்று ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளரான ட்லாலங் மொகோகெங், ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
காசா மீதான இஸ்ரேலிய குண்டுத் தாக்குதலுக்கு மத்தியில், சுகாதார வழங்குநர்கள் பல மாதங்களாக மருத்துவப் பொருட்களுக்கான மிகக் குறைந்த அணுகலுடன் இக்கட்டான சூழ்நிலையில் பணியாற்றுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகளும் ஸ்தம்பித்திருக்கும் சூழலில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் தமது நிபந்தனைகளை மாற்றியதாக அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டுக்கு ஹமாஸ் அமைப்பு பதிலளித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமது அமைப்பின் நிபந்தனைகள் முதல் நாளில் இருந்து தெளிவானது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசே ஒப்பந்தத்தை தடுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேலுடனான பணயக்கைதிகள் பேச்சுவார்த்தையில் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ‘கோல் கம்பத்தை நகர்த்தியதோடு அதன் நிபந்தனைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது’ என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் கடந்த திங்களன்று (22) குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஹமாஸ் அமைப்பு கூறியதாவது, ‘ஹமாஸ் மற்றும் போராட்டக்காரர்களின் நிபந்தனைகள் முதல் நாளில் இருந்து தெளிவாக உள்ளதோடு அவை கடந்த மார்ச் மாதம் முன்வைக்கப்பட்டு அனைத்து தரப்புகள் மற்றும் மத்தியஸ்தர்களால் வரவேற்கப்பட்டது.
இந்த நிபந்தனைகள் எமது மக்களின் தேசிய நிலைப்பாடு என்பதோடு நிரந்தர போர் நிறுத்தம் ஒன்று, ஆக்கிரமிப்பு படைகளின் வெளியேற்றம் மற்றும் காசாவின் அனைத்து பகுதிகளிலும் தமது இடங்களில் இருந்து வெளியேறிய குடியிருப்பாளர்கள் திரும்புவது மற்றும் மீள் கட்டமைப்பை ஆரம்பிப்பதிலேயே அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கே இஸ்ரேல் முயற்சித்து வரும் நிலையில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி ஸ்தம்பித்துள்ளது. நன்றி தினகரன்
மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல்: 14 பலஸ்தீனர் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கில் உள்ள நூர் ஷம்ஸ் அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவம் சனிக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது 10 ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இஸ்ரேலின் இந்த சுற்றிவளைப்பு கடந்த வியாழக்கிழமை (18) தொடக்கம் இடம்பெற்று வருகிறது.
இதன்போது வீதிகளில் உடல்கள் இருப்பதும், வானில் சுற்றித் திரியும் ஆளில்லா விமானங்கள் வீடுகளை தாக்குவதையும், பலஸ்தீன முகம்களுக்கு ஊடாக கவச வாகனங்கள் செல்வதையும் கண்டதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ‘இதுவரை எமது பணியாளர்கள் நூர் ஷம்ஸ் முகாமில் இருந்து 14 சடலங்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்’ என்று பலஸ்தீன செம்பிறை சங்கம் கூறியது.
பலஸ்தீன போராளிகளை இலக்குவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகளை நடத்தியபோதும் பெரும்பாலான பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேறிகளினால் இதுவரை சுமார் 480 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நன்றி தினகரன்
ஹமாஸ் தலைவருடன் எர்துவான் பல மணி நேரம் பேச்சுவார்த்தை
காசாவில் இஸ்ரேலின் போருக்கு மத்தியில் ஹமாஸ் தலைவர் இஸ்மையில் ஹனியேவுடன் ஸ்தன்பூலில் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், பலஸ்தீனர்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். ‘இந்த செயற்பாட்டில் பலஸ்தீனர்கள் ஒற்றுமையுடன் செயற்படுவது முக்கியமானதாகும். வெற்றிக்கான பாதை மற்றும் இஸ்ரேலுக்கு வலுவான பதில் கொடுப்பது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிலேயே தங்கியுள்ளது’ என்று எர்துவான் குறிப்பிட்டார்.
காசா மீதான இஸ்ரேலின் படையெடுப்பை துருக்கி தொடர்ந்து கடுமையாக சாடி வருகிறது. இந்நிலையில் கடந்த 2011 தொடக்கம் துருக்கியில் ஹமாஸ் அலுவலகம் ஒன்றை நடத்தி வருவதோடு ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் அங்கு அடிக்கடி பயணித்து வருகிறார். ‘தையிப் எர்துவானாகிய நான் மாத்திரமே இருந்தாலும் கூட, இறைவன் எனக்கு ஆயுளைத் தந்திருக்கும் வரையில் பலஸ்தீன போராட்டத்தை பாதுகாப்பதற்கும் ஒடுக்கப்பட்ட பலஸ்தீனர்களின் குரலாகவும் நான் தொடர்ந்து செயற்படுவேன்’ என்று எர்துவான் முன்னதாக குறிப்பிட்டிருந்தார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment