பூக்காரி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 கலைஞர் மு கருணாநிதி குடும்பத்தின் உதய சூரியனாக கணிக்கப் பட்டவர் அவரின் மூத்த மகன் மு க முத்து. திரையுலகில் இவரை நட்சத்திர நடிகராகி பார்க்க ஆசைப் பட்ட கருணாநிதி சொந்த பட நிறுவனத்தை தொடங்கி , எம் ஜி ஆரினால் படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்து பிள்ளையோ பிள்ளை படத்தை தயாரித்தார். படமும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து முத்துவின் நடிப்பில் இரண்டாவது படம் உருவானது. இதுவும் கருணாநிதியின் சொந்த பட நிறுவனமான அஞ்சுகம் பிக்சர்ஸ் மூலம் தயாரானது. ஆனால் பூக்காரி என்ற இந்தப் படத்தின் ஆரம்ப பூஜையில் கலந்து கொண்டு எம் ஜி ஆர்


படப்பிடிப்பை ஆராம்பித்து வைக்கவில்லை. காரணம் தி மு கவிலிருந்து அவர் விலக்கப் பட்டு அண்ணா தி மு க என்ற கட்சியை உருவாக்கியிருந்தார். இதனால் எம் ஜி ஆரின் பாணியில் நடித்துக் கொண்டிருந்த முத்துவின் பூக்காரி சலசலப்புக்கு மத்தியில் விரைவில் தயாராகி திரைக்கு வந்தது.


கிராமத்தில் ஒழுங்காக விவசாயம் பார்த்து வந்த ஒர் அப்பாவி

பட்டணத்துக்கு சென்றால் விரைவில் பணக்காரன் ஆகி விடலாம் என்ற நப்பாசையில் இருந்த வீட்டை விற்று குடும்பத்துடன் பட்டணத்தில் குடியேறி, அங்கும் இருந்ததை எல்லாம் இழந்து நிர்கதி ஆகிறான். அவனின் குடும்பம் மீண்டெழ பூக்காரி ஒருத்தியும் , அவளின் அண்ணனும் உதவுகிறார்கள். ஆனாலும் பலவித இன்னல்கள் விவசாயின் குடும்பத்தை வாட்டி வதைக்கிறது. விவசாயின் மகன் எவ்வாறு குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறான் என்பதே படத்தின் கதை.

படத்தில் கதாநாயகியாக , பூக்காரியாக நடித்தவர் மஞ்சுளா. எம் ஜி ஆர் பிக்சர்சில் ஒப்பந்த நடிகையாக இருந்த இவரை எப்படியோ அதிலிருந்து மீட்டு , முத்துவுக்கு ஜோடியாக்கி விட்டார்கள். அழகு பதுமையாக வந்து கொஞ்சும் தமிழ் பேசி நடித்து ரசிகர்களை கவர்ந்தார் மஞ்சுளா. படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா. இவர்கள் இருவருக்கும் இடையே ஊடாடுபவர் முத்து. முதல் படத்தை விட இரண்டாவது படத்தில் அவர் நடிப்பு சற்று முன்னேற்றம் கண்டிருந்தது.

படத்தில் இவர்களுடன் எஸ் வி சுப்பையா, ஸ்ரீரஞ்சனி இருவரும் நடித்திருந்தனர். படம் முழுதும் உணர்ச்சிப் பிழம்பாக இருவரும் காட்சியளித்தனர். கிராமத்து அப்பாவி மனிதராக நடிப்பது சுப்பையாவுக்கு கைவந்த கலை. ஆனால் தொட்டதற்கு எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணுவது டூ மச் . ஸ்ரீ ரஞ்சனி நிறைவாக செய்கிறார். அநேகமாக இதுவே அவரின் கடைசி படமாக இருந்திருக்க கூடும். இவர்களுடன் வி கே ராமசாமி, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தாமரை, ஜெயக்குமாரி, ஓ ஏ கே தேவர், புத்தூர் நடராஜன் ஆகியோரும் நடித்திருந்தனர்.


புது முக நடிகையாக திரையில் நுழைந்திருந்த ஜெயசித்ராவுக்கு இந்தப் படத்தில் நல்ல பாத்திரம் கிடைத்து அதனை பயன் படுத்தியிருந்தார். புதுமுக வில்லன் நடிகராக இப் படத்தில் அறிமுகமானார் கன்னட நடிகரான அம்ரிஷ். பிற்காலத்தில் கன்னட திரையில் பிரபலமான இவர் , தமிழில் ஹீரோவாக நடித்த முத்துவை விட கன்னட திரையில் புகழ் பெற்று விளங்கினார். ம் எல்லாம் நேரம்!

பூக்காரியின் மணம் வீச பஞ்சு அருணாசலம் எழுதி , எம் எஸ்

விஸ்வநாதன் இசையமைத்த காதலின் பொன் வீதியில் நான் ஒரு பண் பாடினேன், வாலி எழுதிய முத்துப் பல் சிரிப்பென்னவோ இரண்டு பாடல்களும் துணை புரிந்தன. முத்துவுக்கு பொருத்தமாக சௌந்தரராஜன் வித்தியாசமாக பாடியிருந்தார். லெஜெண்ட்!


படத்தின் கதை வசனத்தை டீ என் பாலு எழுதியிருந்தார். வசனங்களில் அவர் திறமை பளிச்சிட்டது. ஒன்றிரண்டு காட்சிகளில் எம் ஜி ஆரை வம்புக்கும் இழுத்திருந்தார். கருணாநிதியின் மருமகன்களில் ஒருவரான அமிர்தம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். படத்தை கலைஞர் கருணாநிதியின் நீண்ட கால நண்பர்களான கிருஷ்ணன் பஞ்சு இருவரும் இயக்கினார்கள். பூக்காரி சுமாராகவே மணம் வீசியது!






No comments: