படித்தோம் சொல்கின்றோம் : “அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல குரலிலும் தெரியவேண்டும் “ பி. எச். அப்துல் ஹமீதின் வாழ்வியல் அனுபவத்தை பேசும் வானலைகளில் ஒரு வழிப்போக்கன் முருகபூபதி


மகாத்மா காந்தியின் சத்திய சோதனை இன்றளவும் பேசப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.  அதில் உண்மையும் நேர்மையும் சத்தியமும் நினைவாற்றலும் இழையோடியிருந்தது.

அரைநூற்றாண்டுக்கும் மேலாக வானொலி – தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும்,  நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் , தொகுப்பாளராகவும் பணியாற்றிவந்திருக்கும் பி. எச். அப்துல் ஹமீத்,  தன்னை ஒரு சிறந்த எழுத்தாளனாகவும் நிரூபித்திருக்கிறார்.

எனினும்,  அவரிடம் இயல்பாகவே குடியிருக்கும் தன்னடக்கம், தானும் ஒரு எழுத்தாளன்தான் எனச்சொல்வதற்கு தடுக்கிறது.

 “ கடந்து வந்த பாதையை மறப்போமேயானால், செல்லும் பாதையும்


இருட்டாகவே இருக்கும்.  “ என்று நான் எனது பதிவுகளில் அவ்வப்போது சொல்லி வந்திருக்கின்றேன்.

கடந்துவந்த பாதையை மறக்காமல் இருப்பதற்கு நினைவாற்றல் மிகவும் முக்கியம்.

அந்தப்பாதையில் ஒரு வழிப்போக்கனாகவே நடமாடியிருக்கும்  அப்துல் ஹமீத்,  காய்தல் உவத்தல் இன்றி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து,  பொது சன ஊடகத்தில் எதிர்நோக்கப்பட்ட சவால்களையெல்லாம் சமாளித்து முன்னோக்கி வந்திருக்கிறார் என்பதற்கு  இந்த நூல் சான்று பகர்கிறது.

பொதுவெளியில்   “ பேரும் புகழும்  “  பெற்றிருந்தாலும் தன்னடக்கத்தையே  மூலதனமாகக் கொண்டிருப்பவர்  பி. எச். அப்துல் ஹமீத்.  அதனால்தான் இன்றும் வானலைகளிலும் சில விமானங்களிலும்,  மேடைகளிலும் ,  தொலைக்காட்சிகளிலும் இணைய ஊடகங்களிலும், காணொளிகளிலும்  தனது மதுரமான குரலுடன்  வலம்வந்துகொண்டிருக்கும் அவரால், தன்னை ஒரு வழிப்போக்கனாக்கிக்கொண்டு, தன்னைப்பற்றியும் தனது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பங்கேற்றவர்கள் பற்றியும், தனது வாழ்வின் முக்கிய தருணங்களையும்,  எதிர்பாராத திருப்பங்களையும்  தொகுத்து பதிவுசெய்யமுடிந்திருக்கிறது.

இலங்கைத் தலைநகருக்குள் வரும்  ஒரு புறநகர் பிரதேசத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து ,  இளமையில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்து, வேதனைகளையெல்லாம் சாதனைகளாக்கி நிமிர்ந்து நிற்கும் ஒரு ஆளுமையின் வாழ்வியலை இந்த நூலிலிருந்து தெரிந்துகொள்கின்றோம்.

கருவில் சுமந்து பெற்ற அன்னைக்கும்,  நெஞ்சில் சுமந்து வாழும் அன்னைக்கும் ( மனைவிக்கும் ) இந்த நூலை சமர்ப்பணம் ( படையல் ) செய்துள்ளார்.  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.  அப்துல் ஹமீதை பொருத்தமட்டில், அவரது தாயும் தாரமும் அவ்வாறு  இருந்திருக்கிறார்கள் என்பதை  இந்த நூலை வாசிக்கும்போது புரிந்துகொள்கின்றோம்.

விசும்பு வெளியினூடே ஒலி ஊடகத்திற்கு வித்திட்ட முதல்வர் என போற்றப்படும் GUGLIELMO MARCONI ( 1874 – 1937 ) அவர்களையும் நினைவுகூர்ந்து,  தான் கடந்து வந்த பாதையையும் அதில் சந்தித்தவர்களையும்  முடிந்தவரையில் சான்றாதாரங்களுடன் பதிவுசெய்துள்ளார் அப்துல்ஹமீத்.

ஒலிபரப்புக்கலையில் படிப்படியாக தேர்ச்சிபெற்றிருக்கும் அவரிடம்,


 பேச்சாற்றல் மட்டுமன்றி, மொழிபெயர்க்கும் ஆற்றலும், கூடவே எழுத்தாற்றலும் குடியிருந்திருக்கிறது என்பதை இந்த வழிப்போக்கனின் எழுத்துக்களில் இருந்து தெரிந்துகொள்கின்றோம்.

எனவே அவர் தொடர்ந்தும் தன்னை எழுத்தாளன் எனச்சொல்லிக்கொள்வதற்கு இனிமேலும் தயங்கக்கூடாது என்ற வேண்டுகோளுடன் இந்நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை பதிவுசெய்கின்றேன்.

இந்நூல் பற்றிய  ஆய்வுரையை பேராசிரியர் சபா. ஜெயராசாவும், நூல் நயவுரையை அ. முத்தலிங்கம் அவர்களும்

  இந்நூல் வெளிவருவதற்கு பிரதானமாக இருந்தவர்களில் ஒருவரான த. செ. ஞானவேல், மற்றும் ( அமரர் ) சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்                              ( கவிதை )  ஆகியோரும்   அப்துல்ஹமீதின் ஒலிபரப்புத்துறை மற்றும் எழுத்தாளுமையையும் விதந்து குறிப்பிட்டுள்ளனர்.

அப்துல்ஹமீத்,  இந்நூலில் தனது கனவுகளையும், அவற்றை நனவாக்க மேற்கொண்ட பிரயத்தனங்களையும்  கால வரிசைப் பிரகாரம் எழுதியிருக்கிறார். இங்குதான் அவரது நினைவாற்றல் அவருக்கு கைகொடுத்து உதவியிருக்கிறது.

அத்துடன் அவர் பயன்படுத்திவரும் நாட்குறிப்பு புத்தகமும் பக்கத்துணையாக இருந்திருக்கக்கூடும் எனவும் நம்புகின்றோம்.

கவியரசு கண்ணதாசன் தான் எழுதியிருக்கும்  சுயசரிதையான


 வனவாசம் நூலில்  தன்னை  “ அவன்  “  என்றே விளித்திருப்பார். 

 “ எங்கே வாழ்க்கை தொடங்கும் – அது எங்கே எப்படி முடியும் – இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் புரியாது “ என்ற கவியரசரின் பாடல் வரிகளுடன் ஆரம்பித்து, தனது கதையை எழுதியிருக்கும் இந்த வழிப்போக்கன், தன்னை                “ இவன்  “ என்றே தொடர்ந்தும்  இந்த நூல் முழுவதும் விளித்துக்கொள்கின்றார்.

 “ காசிநகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்  “ என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்க உழைத்த விஞ்ஞானிகள் பற்றியெல்லாம் விரிவாகவும் விதந்தும் எழுதியிருக்கும் அப்துல்ஹமீத், வாசகர்களின் சிந்தனையில் ஊடுருவும் வகையில் தேவைப்பட்ட படங்களையும் தேடி எடுத்து பதிவுசெய்துள்ளமை இந்நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றது.


பிரித்தானியாவிலே வானொலி ஒலிபரப்பின் நதிமூலமாய் விளங்கும் கலையகம் பேணிப்பாதுகாக்கப்படும் அருங்காட்சியகத்தை பார்க்கச்சென்ற அனுபவத்தை கதைபோன்று சித்திரிக்கும்  அப்துல் ஹமீத், பிரித்தானியாவைத் தொடர்ந்து மூன்றே மூன்று நாடுகளில்தான் வானொலி ஒலிபரப்பு ஆரம்பமானது என்ற செய்தியையும் கூறி, அதில் ஒன்று இலங்கை ( 1925 ) என்ற தகவலையும் குறிப்பிடுகிறார்.

இதுபோன்ற பல வரலாற்று உண்மைகளையும் இந்த நூல் பேசுகின்றமையால்,  இந்த  நூல் வானலை வழிப்போக்கனின் சுயசரிதையாக  மட்டுமன்றி, ஊடகத்துறையில் பயிலும் மாணாக்கர்களுக்கும் உசாத்துணையாக விளங்குகின்றது.

நூலின் தொடக்கத்திலேயே தனது ஆதங்கத்தையும் இவ்வாறு கூறிவிடுகிறார்.

 “   நாமெல்லோரும் காற்றில் கலை படைக்கும் துர்ப்பாக்கியசாலிகள்.  “ காரணம், இத்துறையில் அவர்கள் படைத்தவையும், அவர்களது பங்களிப்புகளும்  காற்றலைகளில் கலந்து மறைந்தும் மறந்தும் போயின அல்லவா! மின்னிடும் நேரத்தில் மட்டுமே கண்ணுக்குப் புலப்படும் ஒரு மின்னலின் ஆயுளைப்போன்றது.  “ இத்தனை மணிக்கு அப்படி ஒரு மின்னல் மின்னியது என அதன் பின் எவரும் நினைவில் வைத்துக்கொள்வதில்லையே ! ஆனால், ஒரு சாதாரண எழுத்தாளரது படைப்பு கூட, காலம் காலமாய் அவர் பெயர் சொல்ல நிலைத்திருக்கும்.   “ எனச்சொல்லி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நூலாசிரியர், பலரதும் நீண்ட கால வேண்டுகோளை ஏற்று எழுதுவதற்கு முன்வந்திருக்கிறார். அதனால் இந்த வழிப்போக்கரின் கதை எமக்கு வரவாகியிருக்கின்றது.

இலங்கை, இந்தியா , கனடா, சிங்கப்பூர், பிரித்தானியா, அமெரிக்கா , அவஸ்திரேலியா எங்கும் இந்த நூலுக்கான அறிமுகம் கிடைத்திருக்கிறது.  அதன் மூலம் நூலாசிரியர் தனது ஆதங்கத்தை இனிமேல் தவிர்த்துக்கொள்ளமுடியும்.

தெமட்டகொடயில் தனது சிறிய வீட்டிலிருந்து சிறுவனாக அரைக்காற் சட்டையுடன் கால் நடையாகவே வெகு தொலைவில் அமைந்திருக்கும் இலங்கை வானொலி கலையகத்திற்கு நண்பன் ஒருவனுடன் சென்றிருக்கும் அப்துல்ஹமீத்,  இடைவழியில் பொரளையை கடக்கும்போது அன்றைய பிரதமர் டட்லிசேனா நாயக்கா, தனது Woodlands இல்லத்தின் முற்றத்தில் வளர்ந்திருக்கும் புல்லை ஒரு இயந்திரத்தினால் வெட்டிக்கொண்டிருக்கிறார்.

அவர்தான்  நாட்டின் பிரதமர் என்ற உண்மையை அறிந்தோ, அறியாமலோ சிறுவன் அப்துல்ஹமீத் ஆங்கிலத்தில்  அவருக்கு காலை வணக்கம் சொல்கிறான்.

பிரதமரும் பதிலுக்கு காலை வணக்கம் சொல்கிறார்.

அவ்வாறு துள்ளித்திரியும் பருவத்தில்  அன்றைய பிரதமருக்கு காலை வணக்கம் சொன்னவர், மூன்று தசாப்த காலத்தில், நாட்டின் பிரதமராக வந்த ரணசிங்க பிரேமதாசவின் அருகாமையில் நின்று அவரின் உரையை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 

அப்துல்ஹமீதின் வளர்ச்சிக்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.  ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று,  இந்த நூலில் பல தருணங்களை நாம் உதாரணம் காண்பிக்க முடியும்.

ஒல்லாந்தில் ஒலிபரப்புக்கலை தொடர்பான பயிற்சியில் அப்துல்ஹமீத் சில மாதங்கள் ஈடுபட்டபோது,  தான் கற்றதையும் பெற்றதையும் எளியமுறையில் இந்நூலில் விளக்கியிருக்கிறார்.

வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை, சரியாக புரிந்துகொண்டு பயிற்சிவழங்கியவரிடம் பாராட்டு பெறுகிறார் இந்த வழிபோக்கன்.

அந்த பயிலரங்கில் பேசும்போது ,  விமானத்திலிருந்து இறங்கியதும் நெதர்லாந்து பூமியில் தான் பார்த்த காட்சியை கவித்துவமாக இவ்வாறு சொல்லியிருக்கிறார்.

வெற்றுக்கண்களால் சூரியனைப்பார்க்க முடியாது.  பனிப்புகாருக்கூடாக பார்த்தபோது சந்திரனைப்போலத் தெரிந்தது என்ற அப்துல்ஹமீதின் விபரிப்பு ஏனைய பயிற்சியாளர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

ஒலிபரப்புத்துறையில் முழுநேரமாக ஈடுபடத்தொடங்கியது முதல் அவதானித்தல், கிரகித்தால், மனதில் பதிவுசெய்தல், பின்னர் நேயர்களுக்கு அழகான உச்சரிப்போடு தெரிவித்தல் என தனது வாழ்நாளில்  தான் ஆழமாக நேசித்த தொழிலுக்கு விசுவாசமாக வாழ்ந்திருக்கிறார் இந்த வழிப்போக்கர்.

இரண்டு சந்தர்ப்பங்களில் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருக்கும் ஹமீதின் வாழ்க்கையில் உயிராக இருந்த பெற்றதாய் ஆசியா உம்மா  உடல் நலம் குன்றியிருந்தபோது  வானொலிக்கலையகத்தில் ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஏற்றிருந்த பாத்திரத்தின் தாயின் மரணம் நிகழுகிறது. கதறிக்கதறி அழுது நடிக்கிறார்.

ஒலிப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போது,  பெற்ற தாயின் உடல் நிலை மோசமாகிக்கொண்டிருக்கிறது என்ற தகவல் வானொலி நிலைய வாசலுக்கு வருகிறது.

தகவல் சொல்ல வந்தவர்களுடன் ஓடுகிறார்.

அங்கே தாயின் உயிர் பிரிந்திருக்கிறது.

இந்தக்காட்சியை விவரிக்கும்போது அவர் கண்கள் பனிக்கவே எழுதியிருப்பார். வாசகர்களது கண்களும் இந்தத் தருணத்தை வாசிக்கும்போது பனிக்கலாம்.

இலங்கை வானொலியில் ஈழத்துப்பாடல்கள், மெல்லிசைப்பாடல்கள், பொப்பிசைப்பாடல்கள் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அவை எவ்வாறு பிரபலமாகி, கடல் கடந்தும் ஒலித்தது, அதற்கு மூல காரணமாக விளங்கியவர்கள் யார்..? யார்.. ? முதலான தகவல் குறிப்புகளையும் தவறவிடாமல் பதிவுசெய்துள்ளார் இந்த வழிப்போக்கன்.

கனடாவில் வதியும் பிரபல எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் கூறியிருப்பதுபோன்று  இந்த நூலை கையில் எடுத்தால் கீழே வைக்க மனமின்றி தொடர்ந்தும் வாசிக்கத்தூண்டும்.

அவ்வாறு இந்த நூலின் ஒவ்வொரு வரிகளையும் தவறவிடாமல், வாசித்தபோது, அந்த வரிகளுக்கிடையில் பொதிந்திருக்கும் செய்திகளையும் அதிர்வுகளையும் ஒரு கணம் நின்று உள்வாங்க நேர்ந்தது.

இலங்கையில் சமகாலத்தில் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஊடகக் கற்கை நெறியும்  தொடங்கப்பட்டிருக்கிறது.

அந்தத்துறையில் பயிலும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த நூலை பரிந்துரை செய்யலாம்.

அறிவிப்பாளனாக வளர்ந்து,  எழுத்தாளனாகியிருக்கும் பி.  எச். அப்துல்ஹமீத் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

letchumananm@gmail.com No comments: