ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்திப்பு
நிதி நெருக்கடி கொண்ட நடுத்தர வருமான நாடுகளுக்கு உதவ முறையான திட்டம் அவசியம்
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு USAID தொடர் ஆதரவு வழங்கும்
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டத்திற்கு உலக வங்கி முழுமையான ஆதரவு
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு தென் கொரியாவின் ஆதரவு
பருத்தித்துறையில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நியூயோர்க்கில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், இடம்பெற்ற சிறு உரையாடலுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பைடன் தம்பதிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நன்றி தினகரன்
நிதி நெருக்கடி கொண்ட நடுத்தர வருமான நாடுகளுக்கு உதவ முறையான திட்டம் அவசியம்
- அபிவிருத்திக்கான நிதியுதவி தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி விசேட உரை
நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (20) நடைபெற்ற அபிவிருத்திக்கான நிதியுதவி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் ஆற்றிய சிறப்புரையிலேயே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.
“யாரையும் கைவிடாத உலகில் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான நிதியளிப்பு” எனும் தொனிப்பொருளில், நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்த 2023 மாநாட்டுடன் இணைந்தாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் பல நாடுகளின் அரச தலைவர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“ஒரு பொதுவான கட்டமைப்பு அல்லது செயன்முறை இல்லாததன் விளைவாக நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் அவலநிலை குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உதாரணமாக கூறுவதாயின், இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த பின்பு அனைத்து வெளிநாட்டு நிதி கொடுக்கல் வாங்கல்களும் நிறுத்தப்பட்டதைக் குறிப்பிடலாம்.
இதன் காரணமாக பாரிய அரசியல் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தாலும், அமெரிக்க அரசிடமிருந்து கிடைத்த பசளை நன்கொடையால் பல பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறாகப் பார்க்கும்போது, நிதிச் நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்க முறையான திட்டம் தேவை என்பதை வலியுறுத்தும் அதேநேரம், இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும் என்பதோடு, உலகளாவிய பொருளாதார நிலைமை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு, எதிர்பார்க்கப்படும் உலகளாவிய மொத்த தேசிய உற்பத்தி 105 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இதில் 91 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் பொதுக் கடனாகும். எனவே, இந்த அனுமானங்களை மையப்படுத்தியே நாம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அதனால் தற்போது எம்மிடத்தில் உள்ள விடயங்களை கொண்டு பயனடைய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீடிக்கப்பட்ட கடனாக பெற்றுக்கொள்ளும் இயலுமை உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பயன்டுத்துவதே இங்கு முக்கியமானதாக காணப்படுகின்றது.
அதனையடுத்து, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வருடாந்தம் 500 பில்லியன் டொலர்களையும் வழங்குவதாகவும், குறுகிய காலக் கடன்களை குறைந்த வட்டி விகிதத்தில் நீண்ட காலக் கடனாக மாற்றப்பட வேண்டும் எனவும் செயலாளர் நாயகத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்துவதற்கான அவசர வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இலக்குகள் எதிர்காலத்தில் அடைந்துகொள்ள வேண்டியிருப்பதால், செயலாளர் நாயகம் முன்வைத்த யோசனைகளை சாத்தியமாக்குவது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். அதேசமயம், மேலும் இரண்டு முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக உரம் மற்றும் எரிபொருளுக்கான மானியங்களை விரிவுபடுத்துவது தொடர்பான உலக வங்கியின் முன்மொழிவு மிக முக்கியமான யோசனை யாகும். இதன்போது சேமிக்கப்படும் பணத்தை வேறு தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் இயலுமையும் கிட்டும்.
அடுத்த முக்கியமான யோசனையாக, வர்த்தக நிதி தொடர்பான உலக வணிக அமைப்பின் (WTO) முன்மொழிவை கருத முடியும். அதனால் ஏற்றுமதி விரிவுபடுத்தப்படும்.
கடன் வழங்குநர்களுக்கு நெருக்கடிகள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன். ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அந்தச் சலுகைகளை உடனடியாக வழங்காவிட்டால், இந்த முன்மொழிவுகள் பயனற்றதாகிவிடும். எங்களுக்கு பேச்சுமூலமான ஆதரவு கிடைத்துள்ளது. அந்த வார்த்தைகள் எப்போது செயல்படுத்தப்படும் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.
தற்போதைய சவால்கள் மற்றும் அதற்கான பயனுள்ள தீர்வுகளை பற்றி பேசுவதற்கும் நிலையான அபிவிருத்திக்காக 2030 ஒழுங்கு பத்திரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கும் உறுப்பு நாடுகளுக்கும் ஏனைய பங்குதாரர்களுக்கும் இவ்வாறான உயர்மட்ட கலந்துரையாடல்கள் சிறந்த களமாக அமையும்.” என்றும் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். நன்றி தினகரன்
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு USAID தொடர் ஆதரவு வழங்கும்
- ஜனாதிபதியுடனான சந்திப்பில் சமந்தா பவர் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) பிரதானி சமந்தா பவரை சந்தித்தார்.
இலங்கை நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த போது சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். நன்றி தினகரன்
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டத்திற்கு உலக வங்கி முழுமையான ஆதரவு
- ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் சென்றால் இலங்கை எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும்
– இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் கல்வித்துறை ஊக்குவிப்புக்கும் ஆதரவு – உலக வங்கியின் தலைவர் தெரிவிப்பு
பொருளாதார நெருக்கடியின் போது உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களை வெகுவாகப் பாராட்டிய உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga) இலங்கையின் புத்தாக்க பாதைக்கான பிரவேசம் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆரம்பித்துள்ள இந்த செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றால் இலங்கை எதிர்பார்க்கும் இலக்குகளை விரைவாக அடைய முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, அந்த முயற்சிகளுக்கு உலக வங்கியின் முழுமையான ஒத்துழைப்பு கிட்டும் என்றும் உறுதியளித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கும் இடையில் நேற்று (18) நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றது இந்த விசேட சந்திப்பின் போதே உலக வங்கித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கி வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக வங்கியின் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கை முழுமையான பொருளாதார மறுசீரமைப்புப் பாதையில் பிரவேசித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த தசாப்தத்தில் அதிக பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் நாடு முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்காக சர்வதேச நாணய நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களை முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது இலங்கைக்கு அபிவிருத்திக்கு பொன்னான கதவுகளை திறந்துள்ளது என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுற்றுலா, தொழில் மற்றும் உணவுப் பாதுகாப்பு, விவசாய நவீனமயமாக்கல் துறைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இணைந்து பாரம்பரிய ஏற்றுமதி பயிர்களுடன் இலங்கையின் விவசாயத்துறையின் நவீனமயமாக்கல் செயல்முறையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்திய – இலங்கை தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பலனாக, 4 புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவும் அதற்கு மேலதிகமாக காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவதற்கும் அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உத்தேச காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவதற்கு உலக வங்கியின் தொழில்நுட்ப உதவிகயை எதிர்பாரத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையினூடாக இலங்கையின் அபிவிருத்தியை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் வட மாகாணம் துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் நிலையில், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலமான மின்உற்பத்தி என்பவற்றை ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி,பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியாவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாலின சமத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல், மகளிர் ஆணைக்குழு உருவாக்கம் மற்றும் பெண்கள் ஆய்வுக்கான நிறுவனத்தை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்களுக்காக 4 புதிய சட்டமூலங்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை உலக வங்கியின் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
தேவையான ஆலோசனை சேவைகளுக்காவும் தொழில்நுட்ப உதவிகளுக்கும் அவசியமான நேரங்களில் தம்மை அல்லது சர்வதேச நடவடிக்கைகளுக்கான தலைவரை தொடர்பு கொள்ளுமாறு அறிவித்த உலக வங்கியின் தலைவர், ஒக்டோபர் மாத இறுதியில் ர்வதேச நடவடிக்கைகளுக்கான தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறைக்கு முன்னுரிம அளித்து பொருளாதாரச் மறுசீரமைப்புக்காக மேற்கொண்டுள்ள அணுகுமுறையானது சாதகமானது என சுட்டிக்காட்டிய உலக வங்கியின் தலைவர், தற்போதைய நிலைமையில் இலங்கைக்கு அதுவே மிகவும் பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.
உலக கப்பல் பாதையின் மத்தியஸ்தானமாக விளங்கும் இலங்கையின் புவியியல் அமைவிடம் தனித்துவமானது. அதனால் பொருளாதார அனுகூலங்களைப் பெறுவதற்கு துறைமுக வர்த்தகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என உலக வங்கியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல், காற்றாலை சூரிய சக்தி மற்றும் கல்வித்துறை உட்பட புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைக்கு உலக வங்கி ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.
அத்தோடு இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளில் தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற வலயத்தை இணைக்கும் “உள்ளக வலுசக்தி கட்டமைப்பில் இணைந்துகொள்ள உலக வங்கி விருப்பத்துடன் இருப்பதாகவம் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டங்கள் வெளிப்படைத்தன்மை மிக்கதாக திறம்பட முன்னெடுக்க வேண்டுமென உலக வங்கியின் தலைவர் தெரிவித்ததோடு, அந்த மாற்றங்களை செய்யும் போது, ஆசிரியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தடையேற்படுத்த முற்படாலாம் என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாணவர்களின் எதிர்காலமே தனக்கு முக்கியம் என்றும் வெளிப்படைத் தன்மை மற்றும் செயல்திறனை ஊக்குவிப்பதே தனது நோக்கம் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் சமரநாயக்க உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். நன்றி தினகரன்
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு தென் கொரியாவின் ஆதரவு
- இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வு
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை தென்கொரிய ஜனாதிபதி பாராட்டியதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
மேலும், எதிர்காலத்தில் இலங்கை இளைஞர்யுவதிகளுக்கு தென்கொரியாவில் பல புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், காலநிலை மாற்றத்தை குறைப்பது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் விரைவில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (18) நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது தென்கொரிய ஜனாதியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டதோடு, சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் இரு தலைவருகளுக்குமிடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றது.
1978 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தென்கொரியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்ச்சியாக முன் கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்ற இணக்கப்பாட்டுடன், தொடர்பாடல்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் தலைவர்கள் நீண்ட கலந்துரையாலில் ஈடுபட்டனர்.
இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இரு தலைவர்களும் விசேட அவதானம் செலுத்தியிருந்ததோடு, விரைவில் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக ஒப்பந்தத்தை கைசாத்திட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
தற்போதும் இலங்கையின் இளைஞர் யுவதிகள் பெருமளவில் தென்கொரியாவில் தொழில் புரிகின்றனர் என்பதோடு அந்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றமைக்காக தென்கொரிய ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.
அதேபோல் தென்கொரிய சேவைக் காலத்தின் பின்னர் தொழில் திறன் மிக்கவர்களாகவே அவர்கள் இலங்கை திரும்புவதாகவும், அதனால் அவர்களால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பு கிடைக்கும் எனவும் வலியுறுத்தினார்.
இதன்போது காலநிலை மாற்றங்களை மட்டுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தை விரைவில் கைசாத்திட எதிர்பார்த்திருப்பதாகவும், காலநிலை மாற்றங்களுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்திருந்த அதேநேரம், டிஜிட்டல் மயமாக்கலில் ஆச்சர்யமாக விளங்கும் தென்கொரியாவை முன்னுதாரணமாக கொள்ள முடியும் என தென்கொரிய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
விரைவில் தென் கொரியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் (Yoon Suk Yeol) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்தார். நன்றி தினகரன்
பருத்தித்துறையில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வை காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (20) நண்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர் .
வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு வாசலில் சுமார் 20 வைத்தியர்கள் ஒன்று கூடி ஒரு மணித்தியாலம் வரையில் இக்கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர் .
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலவச வைத்திய சேவையை முடக்காதே, முறையற்ற வரி சம்பள வெட்டுக்களால் வைத்தியர்களை துரத்தாதே, நெருப்பு விலையில் மருந்து வேண்டாம், தரம் குறைந்த மருந்துகளை வழங்காதே, அடிப்படை மருந்துகள் உபகரணங்களை உறுதிப்படுத்து ஆகிய கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
நாகர்கோவில் விஷேட நிருபர் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment