கட்டுரை - இப்படியும் நடக்கிறது - September 20, 2023கடந்த ஆண்டு இந்தக் காலப்பகுதியில் திலீபனின் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயல்பாடுகள் பேசுபொருளாகியிருந்தன.
திலீபனின் நினைவிடத்துக்கு தாமே சொந்தக்காரர்கள் என்பதுபோல முன்னணியினர் நடந்து கொண்டதால் அங்கே அமைதியின்மை தோன்றியிருந்தது.
ஆனால், இவ்வாண்டு திலீபனின் நினை விடத்தில் அவரது நினைவுகூரல்கள் ஆரம்பமான போது அங்கே முன்னணியினர் வழமையைப்போல காணப்படவில்லை.
இதனால் திலீபன் நினைவஞ்சலி ஆரம்ப நிகழ்வுகள் சுமுகமாக நடந்தேறின.
பல ஆண்டுகளாக முன்னணியினர் திலீபனின் நினைவு தினத்தையொட்டி பொத்துவில் முதல் நல்லூர் வரையான ஊர்திப் பவனியை நடத்தி வருகின்றனர்.
அது பல வருடங்களாக நடந்துவருகின்றது.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக இவ்வருடம் மாத்திரம் திருகோணமலையில் ஓர் எல்லைக் கிராமமான சர்தாபுர என்னுமிடத்தில் மிகச்சிறிய கூட்டம்
ஒன்று அதனை மறித்து தாக்குதல் நடத்தியிருக்கின்றது.
அதுவும் பொலிஸார் முன்னிலையில் நடந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளானவர்களில் ஒருவர் மக்கள் பிரதிநிதி.
அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இத்தனை ஆண்டுகளாக இதுபோன்ற ஊர்வலம் வந்தபோதெல்லாம் கண்டுகொள்ளாத இந்த சிங்கள பெரும்பான்மையினர் இப்போது தாக்குதல் நடத்தியிருப்பது எதை உணர்த்துகின்றது? கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில் இனங்களுக்கு இடையேயான முறுகல்நிலை அல்லது இனவாத உணர்வு ஊட்டப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வியையே இந்தச் சம்பவம் எழுப்பியிருக்கின்றது.
இந்தச் சம்பவம் நடந்த பின்னர், தான் எழுதிய குறிப்பு ஒன்றை தெற்கின் அரசியல்வாதி ஒருவர் இந்த ஊர்க்குருவிக்கு பகிர்ந்திருந்தார்.
அவர் ஒருகாலத்தில் தீவிர இனவாதியாக இருந்தவர்.
அண்மைக்காலத்தில் தன்னை – தனது அரசியலை மாற்றிக்கொண்டவர்.
யுத்த காலத்தில் எல்லைக் கிராமங்களில் தீவிர அரசியலில் ஈடுபட்டவர்.
அவரின் பல கருத்துகள் இந்த ஊர்க்குருவிக்கு உடன்பாடானதல்ல.
இதுபோன்ற ஊர்வலங்களுக்கே அனுமதி வழங்கியிருக்கக்கூடாது என்பது அவரின் கருத்தாக இருந்ததைக் காணமுடிந்தது.
ஆனாலும் அவரின் மற்றுமொரு கருத்து கவனத்துக்கு உரியது.
‘இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, அசுத்த நீரில் மீன் பிடிக்கும் சந்தர்ப்பவாத குழுக்களும் இதனை சாதகமாக்கிக் கொள்வார்கள்.
இதை அனுமதிப்பதும் பதற்றமான சூழ்நிலையில் பொலிஸார் செயல்படாமல் இருப்பதும் பல பிரச்னைகளை எழுப்புகின்றன.
ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு நடத்தப்படும்போது, அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக இத்தகைய தூண்டுதல்களுடன் வேலைத்திட்டங்களை சாதிக்க அனுமதிக்கிறது? தமிழ் இனவாத அரசியல்வாதிகளின் பிரிவினைவாத உத்திகளுக்குத் தேவையான சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதே இவர்களின் திட்டம் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
அத்தகைய திட்டத்தை ஏன் அனுமதிக்க வேண்டும்? யார் அனுமதிப்பார்கள்? மயங்கி விழுந்துவிடாத அளவுக்கு புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்பது
உண்மைதான், ஆனால் சாதாரண மக்கள் அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.
ஆனால், பொலிஸ், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடுப்பது அவர்களின் பொறுப்பு.’
அவர் எழுப்பியுள்ள கேள்வி நியாயமானது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்காமல் – இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்த விரும்புபவர்களின் நோக்கம் தடுக்கப்படவேண்டும்.
இது தொடர்ந்தால் நாடு இன்னும் அதலபாதாளத்திற்கே செல்லும்.!

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு No comments: