உலகச் செய்திகள்

 பைடனை சந்தித்தார் உக்ரைன் ஜனாதிபதி

 ‘இந்தியாவை சீண்டுவது நோக்கமல்ல’ கனடா பிரதமட் ட்ரூடோ தெரிவிப்பு

இந்தியா – கனடா பதற்றம்; வீசா சேவையை இரத்து செய்த இந்தியா அரசு

சீக்கிய தலைவரின் கொலை: இந்திய அரசு மீது கனேடிய பிரதமர் நேரடிக் குற்றச்சாட்டு 

USA ஜனாதிபதி தேர்தலில் விவேக் ராமசாமி போட்டி


பைடனை சந்தித்தார் உக்ரைன் ஜனாதிபதி

September 23, 2023 10:13 am 

அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தனியாகவும், பின்னர் அதிகாரிகளுடனும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஜோ பைடனுடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது என்று ஸெலன்ஸ்கி கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், இராணுவ தளபாடங்கள் அளிப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்த பின்னர் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஸெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அவர் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் உள்ளிட்டோரை சந்தித்து உக்ரைன் போரில் ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.   நன்றி தினகரன் 

 




 ‘இந்தியாவை சீண்டுவது நோக்கமல்ல’ கனடா பிரதமட் ட்ரூடோ தெரிவிப்பு

September 23, 2023 7:16 am 

இந்தியாவை சீண்டி பார்த்து, பிரச்சினைகள் ஏற்படுத்த வேண்டும் என்பது கனடாவின் நோக்கமல்ல என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் நிகழ்ந்த சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கனடாவில் செய்தியாளார்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

“வளரும் முக்கியத்துவம் கொண்ட நாடு இந்தியா என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் இந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இந்தியாவுடன் தொடர்ந்து உறவாட வேண்டிய அவசியம் உள்ளது.

இந்தியாவை சீண்டி பார்த்து பிரச்சினைகள் ஏற்படுத்துவது கனடாவின் நோக்கமல்ல” என்று அவர் தெரிவித்தார்.

எனினும் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்திய அரசுக்கும் நம்பத்தக்க தொடர்பு உள்ளது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தொடர்ந்து கனடா நாட்டு பிரஜை என்று குறிப்பிட்டு பேசினார் ஜஸ்டின் ட்ரூடோ. “ஒரு கனடியர் கனடிய மண்ணில் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. எனவே இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இந்திய அரசு எங்களுடன் சேர்ந்து உண்மையை கண்டறிய உதவ வேண்டும் என கூறுகிறோம்” என அவர் தெரிவித்தார். இந்தியா–கனடா நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இரு நாடுகளும் வெளியுறவு கொள்கை தொடர்பாக சில முடிவுகளை அறிவித்துள்ளன.

கனடாவில் பணியிலிருந்த இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதை போல, இந்தியாவிலுள்ள கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேற இந்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.

இதேவேளை இந்தியாவுக்கு எதிராக கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

கனடாவின் ‘கடுமையான’ குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டுடன் தொடர்பில் இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் சீக்கியர்கள் வாழ்ந்துவரும் நிலையில், இந்த விவகாரம் அந்நாடுகளின் உள்ளூர் அரசியலில் கடும் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.   நன்றி தினகரன் 





இந்தியா – கனடா பதற்றம்; வீசா சேவையை இரத்து செய்த இந்தியா அரசு 

September 21, 2023 3:58 pm

காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக, இரு நாடுகள் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் இன்று (21) கனடா நாட்டு குடிமக்களுக்கான வீசா சேவையை இரத்து செய்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்துவராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். நிஜ்ஜார் குரு நானக் சீக்கிய குருத்வாரா சாஹிப்பின் தலைவராகப் பதவி வகித்துவந்தார். அவர் இந்திய அரசால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். ஆனால், கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது.

இதற்குப் பிறகு இந்திய தூதரக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (RAW) மூத்த அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஓட்டாவா உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக கனடாவின் உயர்மட்ட தூதர் ஒருவரை “நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் இந்தியா வெளியேற்றியது. இந்தச் சம்பவத்தால், கனடா – இந்தியா உறவுக்கிடையில் விரிசல் ஏற்பட்டு, பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது

இந்நிலையில், கனடாவில் இருந்து இந்தியா வரும், கனடா குடிமக்களுக்கான வீசா சேவையை இரத்து செய்து இந்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அங்கு மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





சீக்கிய தலைவரின் கொலை: இந்திய அரசு மீது கனேடிய பிரதமர் நேரடிக் குற்றச்சாட்டு 

September 20, 2023 3:34 pm 0 comment

கனேடிய சீக்கிய தலைவர் ஒருவரின் மரணத்தில் இந்திய அரசுக்கு பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஹார்தீப் சிங் நிஜார் என்ற அந்த சீக்கிய தலைவர் கடந்த ஜூன் 18 ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய கோயிலுக்கு வெளியில் சுட்டுக்கொல்லப்பட்டார். கார் வண்டியில் இருந்த நிஜார் இரு முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டார்.

அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையில் ‘நம்பகமான’ தொடர்பை கனேடிய உளவுப் பிரிவினர் கண்டறிந்திருப்பதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போதும் ட்ரூடோ இது பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். எனினும் இது ‘அபத்தமானது’ என்று இந்தியா குறிப்பிட்டுள்ளது.

“கனேடிய மண்ணில் கனேடிய பிரஜை ஒருவரின் கொலையில் வெளிநாட்டு அரசு ஒன்றின் எந்த ஒரு தொடர்பும் ஏற்க முடியாத எமது இறைமையை மீறும் செயலாகும்” என்று ட்ரூடோ கடந்த திங்கட்கிழமை (18) கனடா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ட்ரூடோவின் இந்த கூற்றை நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இந்தியா இராஜதந்திரியான பவன் குமார் ராயை கனடா கடந்த திங்கட்கிழமை நாடுகடத்தியதாக வெளியுறவு அமைச்சர் மெலனி ஜொலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் உள்ள கனேடிய மூத்த இராஜதந்திரி ஒருவரை ஐந்து நாட்களுக்குள் வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டுள்ளது.

முன்னணி சீக்கிய தலைவரான நிஜார் இந்தியாவின் பஞ்சாப் பிராந்தியத்தில் சுதந்திர சீக்கிய தாய் நாடு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பகிரங்க பிரசாரம் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிரிவினைவாத ஆயுதக் குழு ஒன்றுக்கு தலைமை வகிப்பதாகக் கூறி இந்தியா அவரை ஒரு பயங்கரவாதியாக அறிவித்தது.   நன்றி தினகரன் 





USA ஜனாதிபதி தேர்தலில் விவேக் ராமசாமி போட்டி

-களமிறங்குவதை உறுதிப்படுத்தி பரப்புரை

September 19, 2023 1:11 pm 0 comment

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் H-1B விசா முறை ஒழிக்கப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என இந்திய வம்சாவளி அமெரிக்கரான விவேக் ராமசாமி பரப்புரை செய்துள்ளார். குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் தனது தேர்தல் பிரசாரத்தில் கலந்துக்கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் மென்பொருள் துறையில் செயல்படும் அனைவரும் பொதுவாக விண்ணப்பிக்கும் இந்த விசாவானது, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்திக்கொள்ள அனுமதிக்கின்றது.

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் H-1B விசா முறையை நம்பியுள்ளன.

இந்த முறையை ஒழிக்க வேண்டும் என வாதிடும் விவேக் ராமசாமியும், இதுவரை 29 முறை இந்த விசா வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டுள்ளார்.   நன்றி தினகரன் 


No comments: