எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் தேர்தலுக்காகப் பணம் ஒதுக்கப்பட்டால் மக்களுக்குத் தேவையான பெற்றோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியாது என்று வஜிர தெரிவித்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ‘ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முற்படுமானால் நாட்டில் நிர்வாகக் கட்டமைப்பு முழுமையாக சீர்குலையும்.
சர்வதேச மட்டத்தில் எந்தவொரு சட்டபூர்வமான நகர்வுகளிலும் ஈடுபட முடியாமல்போகும்.’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
வஜிர சொல்ல வருவது, அடுத்த ஆண்டு தேர்தலுக்காகஅதாவது கட்டாயம் நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதி தேர்தலுக்காக – எதிர்வரும் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமானால், எரிபொருள் வாங்க பணம் இல்லாமல்போய்விடும் என்கிறார்.
அதாவது இப்படியொரு பயமுறுத்தலை செய்வதன் மூலம் அவர் தேர்தல் ஒத்திவைக்கப்படவேண்டும் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று
நினைக்கின்றார் என்பது தெரிகின்றது.
2024 ஒக்ரோபர் மாதத்துக்குள் கட்டாயம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதுதான் நாட்டு சட்டம்.
2024 நவம்பரில் புதிய ஜனாதிபதி பதவியேற்கவேண்டும்.
வஜிர அபேவர்த்தன கூறுவதுபோல் ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் என்ன நடக்கும்? 2024 ஒக்ரோபருக்கு பின்னர் நாட்டில் சட்டவிரோத – அரசமைப்புக்கு முரணான ஜனாதிபதியே ஆட்சியில் இருப்பார்.
அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாமல்போகும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் வஜிர ஒரு பலமான தலைவர்.
அவரே இன்று ஐக்கிய தேசியக் கட்சியின், கட்சி அலுவல்களை பிரதானமாக ஒருங்கிணைத்துவருபவர்.
அடுத்த தேர்தலுக்காக மிகப்பெரும் கூட்டணி ஒன்றை ஐ.தே.க. தலைமையில் அமைப்பதற்கான பணிகளை பின்னணியிலிருந்து செய்துகொண்டிருப்பவர்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தவர் அவர்.
அவர் இல்லத்திலேயே முக்கிய ‘டீல்கள்’ நடந்தன என்று அப்போது பேசப்பட்டதுண்டு.
அவர், இப்போது தேர்தலை ஒத்திவைக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது பலரின் கவனத்தையும் பெற்றிருக்கின்றது.
அதனால் அது குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த ஊர்க்குருவி பலருடன் பேசியபோது பல விடயங்கள் தெரியவந்தன.
ஒன்று, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலரை இழுத்தெடுக்க நடந்த முயற்சிகள் இதுவரை பயனளிக்கவில்லை.
பலரும் மதில்மேல் பூனையாகவே இருந்துகொண்டிருக்கின்றனர்.
இரண்டாவது, பலமுள்ள அயல் நாடு ஒன்று, பொதுவேட்பாளர் ஒருவரை களம் இறக்குவதற்கு திரைமறைவில் முயன்றுகொண்டிருக்கின்றது.
மூன்றாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ களம் இறங்கமாட்டார் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவர் இப்போது தான் போட்டியிடுவது என்பதில் திடமாக இருக்கிறார்.
அவரையே பொதுவேட்பாளராகக் களம் இறக்கினால் எப்படி வெற்றிவாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதை அந்த அயல்நாடு ஆராய்ந்து வருகின்றது.
சஜித் பொதுவேட்பாளராக போட்டியிடும்பட்சத்தில் ரணில் நம்பும் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைப்பது நம்பிக்கைக்குரியதாக இருக்காது.
இப்படி பல காரணங்களால், தேர்தலில் இலகுவான வெற்றியை அடைய முடியாது என்ற எண்ணம் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஏற்பட்டிருப்பதாக தெற்கில் அவர்களுடன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
சில தினங்களுக்கு முன்னர் ரணிலின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவரும், முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமான இந்திரஜித் குமாரசாமி, அடுத்த ஆண்டு தேர்தல் ஒன்று நடைபெற்றால், ஏற்கனவே ஏற்பட்டதைவிட பலமடங்கு பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்போது ரணிலின் முக்கிய அரசியல் சகாவான வஜிர, தேர்தல் ஒன்றுக்காக பணத்தை ஒதுக்கினால், எரிபொருள் வாங்குவதற்கு நாட்டில் பணம் இருக்காது என்று எச்ரிக்கை விடுத்திருக்கிறார்.
ஆக, பாராளுமன்றில் தனக்கிருந்த ஐந்தில் ஒரு பெரும்பான்மையை வைத்து தேர்தல் நடத்தாமலே ஆட்சியைத் தொடர ஜே.ஆர். முயன்றதுபோல, பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி தேர்தலை நடத்தாமலே ஆட்சியில் தொடர ரணில் முயல்கிறாரோ என்று சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.!
- ஊர்க்குருவி.
- நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment