கட்டுரை - இப்படியும் நடக்கிறது - September 21, 2023

  


தியாகி திலீபனின் ஊர்தி மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி நேற்றும் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுவாமி சங்கரானந்தா என்ற பெயரில் முகநூலில் எழுதப்பட்டிருந்த பதிவு ஒன்றை நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.
யார் இந்த ‘சுவாமி’ என்பதை அறிய முயன்றபோது அப்படியொருவர் முன்னர் திருகோணமலையில் வாழ்ந்தாரெனவும் இப்போது அவர் புலம்பெயர்ந்து
வெளிநாடொன்றில் வாழ்கிறார் என்றும் நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்திருக்கும் கருத்துகளுடன் முழுமையாக இந்த ஊர்க்குருவிக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவர் இதுபோன்ற சம்பவம் ஒன்று முன்னர் நடந்தது பற்றி எழுதியிருப்பது நமது கவனத்திற்குரியது.
அதனால் அந்தச் சம்பவம் பற்றி அவர் எழுதியிருப்பதை அப்படியே கீழே தருகின்றேன்.
‘தமிழரசு கட்சியின் ஸ்தாபகரும் ‘தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறி ‘விடுதலை பெற்ற தனித் தமிழீழமே ஒரே தீர்வு’ என்ற வரலாற்று புகழ்மிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியவரும் ஈழத் தமிழ் மக்களால் தந்தை செல்வா என்று அழைக்கப்பட்டவருமான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி மரணமானர்.
அந்தக் காலத்தில் எந்த தலைவருக்கும் திரளாத மக்கள் கூட்டம் அவரது இறுதி ஊர்வலத்தில் திரண்டு, எழுச்சி கொண்டு எழுந்து அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன் பின்னர் தந்தை செல்வாவின் அஸ்தி அதே 1977ஆம் ஆண்டே, தமிழரசு கட்சியால் (அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி) திருகோணமலை நகரத்தில்
உள்ள சிவன் கோவிலடி பகுதியில் சிலை அமைக்கும் நோக்கத்தோடு திருகோணமலைக்கு எடுத்துவரப்பட்டது.
திருகோணமலை அநுராதபுர சந்தியை வந்தடைந்தபோது நரித்தனமாக யோசித்த தமிழரசு கட்சி, சிங்கள மக்களை சீண்டி இனக் கலவரத்தை தூண்டி தமிழ் மக்களின் வாக்குகளை சுவீகரிக்கும் எண்ணம் கொண்டு, அநுராதபுர சந்தியில் இருந்து சிவன் கோவிலடியை சென்று அடைய லிங்கநகர், உவர்மலை, சிவபுரி என்ற தமிழர் வாழும் பிரதேசங்கள் ஊடாக பாதை இருந்தும் அதனை புறக்கணித்து அபயபுர, மகிந்தபுர, சிறிமாபுர என்று சிங்களவர் வாழும் பிரதேசங்களின் ஊடாக கொண்டு வந்தபோது, சினம் கொண்ட சிங்களவர்களால் சிறிமாபுரவில் வைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், சில தமிழ் மக்கள் காயமடைய, தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தினால் பல தமிழர்கள் கொல்லப்பட்டு தமிழர்களின் சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஆக மொத்தத்தில் இனவாதத்தை தூண்டி தமிழ் மக்களின் வாக்கை சுவீகரிக்கும் நோக்கத்தோடு தமிழ் மக்களின் துன்பங்களில் பதவியை பெற்றுகொண்ட அரசியல்வாதிகள், இன்றுவரை தமிழ் இனத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் வழியை நிரந்தரமாக அடைத்ததுதான் மிச்சம்.’ – இப்படிச் செல்கின்றது
அந்தப் பதிவு.
இதற்கு பின்னர் அவர் எழுதியிருப்பவை தற்போது நடந்துகொண்டிருக்கின்ற சம்பவங்கள் பற்றியவை என்பதால் அதனைத் தவிர்த்துக்கொள்கின்றோம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கை முழுமையாகவும் கிழக்கின் பெரும்பகுதியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதுகூட வடக்கு – கிழக்கு தழுவிய எந்த ஊர்வலத்தையும் நடத்தவில்லை என்பதையும் அவர் அந்தப் பதிவில் நினைவுகூர்ந்திருக்கிறார்.
திலீபனின் ஊர்தி மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்திய சில நாட்களிலேயே கொழும்பில் திலீபனுக்கு நினைவஞ்சலி வைபவத்துக்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்திருக்கின்றது.
திலீபனை நினைவு கூருவதல்ல முக்கியம்.
அந்த நிகழ்வை சுமுகமாக நடத்தி முடிப்பதுதான் புத்திசாதுர்யமானது.
அந்த ஊர்திப்பயணத்தில் இப்போதும்கூட ஒரு சிலரை மாத்திரமே காணமுடிகின்றது.
திலீபனை நினைவுகூருகின்ற ஒரு வைபவத்தில் நூற்றுக்கணக்கானவர்களை திரட்ட முடியாத நாம், அவரின் தியாகத்தை முதலில் தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
அதுவே, அவருக்கு தமிழ் மக்கள் செய்யவேண்டிய உண்மையான அஞ்சலி.

ஊர்க்குருவி.  -  நன்றி ஈழநாடு No comments: