அஞ்சலிக்குறிப்பு தன்னார்வத் தொண்டர் அப்புத்துரை சதானந்தவேல் விடைபெற்றார் முருகபூபதி ( தலைவர் – இலங்கை மாணவர் கல்வி நிதியம் - அவுஸ்திரேலியா )


வடபுலத்தில் சுழிபுரம் நகரை பிறப்பிடமாகவும், பின்னாளில் அவுஸ்திரேலியா – மெல்பனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்பர் அப்புத்துரை சதானந்தவேல் அவர்கள் அண்மையில் மறைந்தார்.

கருணை உள்ளம் கொண்ட  அன்பர்களின் ஆதரவுடன் நாம் கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயக்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில் அவர் அங்கம் வகிக்கத்தொடங்கிய நாள் முதலாக  எம்மால் நன்கறியப்பட்டவர்.  எமது அன்பிற்கும் அபிமானத்திற்குமுரியவராகத்  திகழ்ந்தவர்.

அவருடைய மனிதநேயப்பண்புகளும்   எமக்கு முன்னுதாரணமாகத்


திகழ்ந்திருப்பவை.

இலங்கையில் நீடித்த போரினால் பாதிப்புற்ற ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வித் தேவைக்கு உதவும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட எமது கல்வி நிதியத்தின் செயற்பாடுகளை நன்கறிந்து, உதவ முன்வந்த பெருந்தகை அவர். 

போர் முடிவுக்கு வந்ததையடுத்து எமது கல்வி நிதியம் வடக்கு – கிழக்கு – மலையகம் மற்றும்  தென்னிலங்கையில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெற்றுவரும் மாணவர்களின் ஒன்றுகூடல்களை நடத்தி வந்திருக்கின்றோம்.

அத்தகைய ஒன்றுகூடல்களுக்காகவும் அன்பர் அப்புத்துரை சதானந்தவேல்  அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

எமது கல்வி நிதியத்தின் பரிபாலன சபையிலும் அவர் அங்கம் வகித்தவர்.  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில்   யாழ். மாவட்ட மாணவர்களின் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் நடந்தவேளையிலும் அவர் கலந்துகொண்டு உரையாற்றியிருப்பவர்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனப்பான்மைகொண்டிருந்த அவரிடம் கலை, இலக்கிய ஆர்வமும் குடிகொண்டிருந்தது.

அதனாலும் அவர் எமது நெஞ்சத்திற்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தார்.

சில இலக்கிய சந்திப்புகளுக்கும் நூல் வெளியீட்டு அரங்குகளுக்கும் வருகை தந்து எழுத்தாளர்களை வாசகர்களை ஊக்குவித்தவர்.

மெல்பன் கேசி தமிழ் மன்றம் வாராந்த விடுமுறை தினத்தில் மெய்நிகரில் நடத்திவந்த  கலை, இலக்கிய, கல்வி சார்ந்த கலந்துரையாடல்களில் அவர் காப்பகத்திலிருந்தவாறே இணைந்துகொண்டு கருத்துக்களும் தெரிவித்து வந்தார்.

அன்னாரின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது கல்வி நிதியத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன்,  அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.

No comments: