செல்வி மாயா குமரதேவனின் பரதநாட்டிய அரங்கேற்றம். கண்ணோட்டம் - உஷா ஜவாகர்

 


27 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமை 6 மணிக்கு Parramatta  Riverside தியேட்டர், சிட்னி ஆஸ்திரேலியாவில் செல்வி மாயாவின் அரங்கேற்றம் நடைபெற்றது.

மாயா ஆரம்ப காலத்தில் தனது தாயும் நாட்டிய ஆசிரியையுமான திருமதி அபிராமி குமரதேவனிடமும் பின்னர் ஆருதி குமணனிடமும் நாட்டியம் பயின்றார்.

அரங்கேற்றத்திற்கு நட்டுவாங்கம் செய்தவர் மாயாவின் நடன ஆசிரியர் ஆருதி குமணன், வாய்ப்பாட்டு அகிலன் சிவானந்தன், மிருதங்கம் ஜெனகன் சுதந்திரராஜ், வயலின் கிரந்தி கிரன் முடிகொண்டா, புல்லாங்குழல் வெங்கடேஷ் ஸ்ரீதரன்.

பின்னணி இசையும், பாடகர் அகிலனின் பாடல்களும் பார்ப்போரை இருந்த இடம் விட்டு அசையாது கட்டிப்போட்டன. செல்வி பிரதாயினி ரவிச்சந்திரன் திறமையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செல்வன் ஆயன் குமரதேவனும், செல்வன் மயிலன் குமரதேவனும் நல்லதொரு வரவேற்புரையை நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கினார்கள்.
மண்டபம் நிறைந்திருந்த அந்த வேளையில் அரங்கேற்றம்

ஆரம்பித்தது.
பிள்ளையார் சுலோகத்துடன் மாயா நடனமாட ஆரம்பித்தார். நல்ல அபிநயத்துடன் மிகவும் திறமையாக மாயா ஆடினார்.
 
அகிலாண்டேஸ்வரித் தாயே என்ற வர்ணத்தை மாயா ஆடி முடித்த போது அரங்கு எங்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. அவர் அந்த நடனத்தை ஆடி முடித்த போது அந்த அகிலாண்டேஸ்வரியே அரங்கில் அமர்ந்திருந்த மாதிரி ஒரு பிரமை பார்ப்போர் மத்தியில் உருவானது.

இடைவேளைக்குப் பின்னர் பூங்குயில் கூவும் என்று ஆரம்பிக்கும் பதத்திற்கும், இடது பாதம் தூக்கி என்று ஆரம்பிக்கும் கீர்த்தனைக்கும், பின்னர் விஷமக்காரக் கண்ணன் என்று ஆரம்பிக்கும் பதத்துக்கும் மாயா நடனம் ஆடினார்.

முருகன் மீது அளவற்ற காதல் கொண்டவளாகவும் பின்னர் சிவனாகவும் தோன்றி மாயா மிகவும் அற்புதமாக நடனம் ஆடினார். விஷமக்காரக் கண்ணன் என்ற பாடலுக்கு ஆடும் போது அவரது கண்களில் குறும்பு கொப்பளித்தது. அந்த கண்ணனாகவே மாறி  பார்ப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்.


அடிக்கடி
மாறும் வேகமான தாளத்திற்கு இலாவகமாக  ஆடும் திறமை எல்லாவற்றையும் தன்னில் கொண்டுள்ளார் மாயா. இறுதியில் தில்லானா மற்றும் லிங்காஷ்டகத்துடன் மாயாவின் அரங்கேற்றம் சுபமாக நிறைவேறியது.


பார்வையாளர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்!

நல்லதொரு அரங்கேற்றத்தைக் கண்டு களித்த பூரிப்புடன் எல்லோரும் வீடு திரும்பினார்கள்.

புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்குத் தமிழ் கலைகளை மறவாது பழக்கி அந்தக் கலைகளை தொடர்ந்து எடுத்து செல்லும் இளம் தலைமுறைப் பெற்றோர் ஆசிரியர்கள் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள்.

திறமை மிகுந்த ஒரு நாட்டிய தாரகையாக மாயா எதிர்காலத்தில் நடன உலகில் ஜொலிப்பார் என்பது திண்ணம்.

No comments: