ரமழானை பயனுள்ளதாக்குவோம்!

 Thursday, March 23, 2023 - 5:54pm

நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் நமது எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. நமது செயல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதற்கும் அதற்கு நன்மை கொடுக்கப்படுவதற்கும் எண்ணம் (நிய்யத்) தான் அடிப்படை. அதன் அடிப்படையில் ரமழானை நாம் பயனுள்ளதாக கழிப்பதற்கு நமது எண்ணத்தை சீராக்கிக் கொள்ள வேண்டும். கடந்த கால ரமழானை நாம் சரியான முறையில் பயன்படுத்தினோமா? அப்படி பயன்படுத்த தவறியிருந்தால் அதற்குக் காரணம் நிய்யத்தை நாம் சரியான முறையில் அமைத்துக் கொள்ளவில்லையென்பதுதான்.

இமாம் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் ஒரு தடவை, 'எத்தனையோ அற்பமான செயல்களைக்கூட நிய்யத் மிகப்பெரியதாக மற்றிவிடுகிறது. எத்தனையோ மிகப்பெரிய செயல்களைக்கூட நிய்யத் அற்பமானதாக மாற்றிவிடுகிறது' என்று கூறியுள்ளார்கள்.

சரியான நிய்யத்தான் அச்செயலை நன்மையானதாக மாற்றும். எனவே நாம் எண்ணத்தை (நிய்யத்) சீராக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இமாம் சுஃப்யானுஸ் ஸவ்ரி(ரஹ்) அவர்கள், 'என்னுடைய நிய்யத்திற்கு நான் சிகிச்சை அளிப்பதற்கு சிரமப்பட்டதைப் போன்று வேறு எதற்கும் நான் சிரமப்பட்டதில்லை. ஏனெனில் எனது நிய்யத் அடிக்கடி புரண்டுகொண்டே இருக்கிறது' என்றுள்ளார்கள்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், 'நிய்யத்தேயே எல்லா செயல்களுக்கும் அடிப்படை' என்று கூறியுள்ளார்கள். செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதை அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்-புஹாரி)

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் கூறுகிறான் எனது அடியான் நன்மை செய்யவேண்டுமென்று எண்ணினால் நான் அவனுக்கு நன்மையை எழுதிவிடுகிறேன் என்று குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்கள். (ஆதாரம் -முஸ்லிம்)

அதனால் ரமழானில் இறையச்சத்தை (தக்வா) அடைய வேண்டுமென்று நிய்யத் கொள்ளவேண்டும். நோன்பின் நோக்கமே இறையச்சம்தான்.

'நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகக்கூடும்' (அல் குர்ஆன்: 2:183) என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

அல்லாஹ் இவ்வசனத்தில் இறையச்சமுடையவர்களாக ஆவீர்கள் என்று கூறாமல் ஆகக்கூடுமென்று கூறுகிறான். எனவே நமது நிய்யத்தான் நாம் உண்மையான இறைச்சமுடையவரா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும். பாவங்களை விட்டொழித்து எல்லா நிலையிலும் அல்லாஹ் நம்மை கண்காணிக்கிறான் என்ற இறையச்ச உணர்வு நம்மில் வளர வழிவகுக்கும்.

அதேநேரம் அருள்மறையாம் அல் குர்ஆன், 'ரமழான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியை தெளிவுபடுத்தக்கூடியதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்' (02:185) என்று குறிப்பிட்டுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப்பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் (சாதாரண நாள்களை விட) கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாக அல் குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்.
(ஆதாரம் - புஹாரி) .

மேலும் ரமழானை பாவங்களிலிருந்து விலகி பாவமன்னிபுக் கோருவதற்கான சிறந்ததோர் மாதமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.

'நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமழான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் - புஹாரி)

இம்மாதத்தை அடைந்த பின்னரும் யார் தமது பாவங்களுக்கான மன்னிப்பை பெறவில்லையோ அவன்தான் மனிதர்களில் மிகப்பெரிய நஷ்டவாளியாவார். அதனால் ரமழான் மாதம் நன்மையின் மாதம். அதனை சரியாகப் பயன்படுத்தி நோன்பு நோற்றல், ஃபர்ளான, உபரியான தொழுகைகளில் ஈடுபடுதல், குர்ஆன் ஓதுதல், அதிகம் திக்ருகளைச் செய்தல், பிரார்த்தனை (துஆ) செய்தல், தர்மம் செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். அத்தோடு இம்மாதத்தில் ஆயிரம் மாதங்களை விடவும் மகத்துவம் மிக்க இரவு (லைலத்துல் கத்ர்) அமைந்துள்ளது. அந்த இரவையும் உச்சளவில் பயன்படுத்திக் கொள்ளவும் தவறக்கூடாது. இவை அனைத்துக்காகவும் தூய எண்ணம் (நிய்யத்) கொள்ள வேண்டும்.

நோன்பு என்பது பசியும் தாகமுமல்ல இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்கானது. அவ்வாறு இறையச்சத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கும் நாம் நமது குணத்தை அழகாக்க வேண்டும். இப்படிப்பட்ட எண்ணமில்லாமல் நோன்பு நோற்பதனால் அந்நோம்பினால் எவ்வித பயனுமில்லை என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆகவே இந்த புனித மாதத்தை நோன்பு நோற்று இறைவணக்கங்களில் ஈடுபட்டு உச்சளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக உறுதியான எண்ணம் (நிய்யத்) கொள்வோம்.

அப்துல்லாஹ்...

நன்றி தினகரன் 

No comments: