வாசிப்பு அனுபவம்: கவிஞர் அம்பியின் சொல்லாத கதைகள் சியாமளா யோகேஸ்வரன்


தான் மட்டுமே பொக்கிஷமாக வைத்து அவ்வப்போது திறந்து பார்த்த நினைவுப்
பெட்டகத்தை எமக்காகத் திறந்து விட்டிருக்கின்றார் கவிஞர் அம்பி அவர்கள். இந்நூலில் நான் ரசித்த பலவற்றில் இருந்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கின்றேன்.

அழகு நகராம் நாவற்குழி பற்றி, அன்புப் பெற்றோர் பற்றி, சிறு வயது அனுபவங்கள் பற்றி, தமிழும் சமயமும் அவரது உணர்விலும் உதிரத்திலும் இரண்டறக் கலக்க, அவர் வளர்ந்த சூழல் உதவிய விதம் பற்றியெல்லாம் அற்புதமான கவிதைகள் இழையோட கவிஞர் அம்பி அவர்கள் சொல்லாத கதைகளைச் சொல்லியிருக்கின்றார்.

நேர் வளர்ந்த கற்பகதருவும், தெங்குடன் வாழையும் கொண்ட


செழிப்பான ஊர் நாவற்குழி என்று வாசித்தபோது அங்கு நெடிதுயர்ந்து
நின்ற மரங்கள் மட்டும் என் மனக்கண்ணில் வந்து போகவில்லை. மாணாக்கர்களுக்கு நேர்ப்பாதையில் நடக்க வேண்டும் என்று ஒழுக்கத்தைப் போதித்த ஒரு நல்லாசிரியரும் தாமாகவே என் கண் முன் வந்து நின்றார்.

மண் வாசம் தூக்கலாக இருந்த அவரது ஊர் பற்றிய கவிதையில் எனைக் கவர்ந்தது  தேம்பாத தோட்டந்துரவும் சுவை தானிய வகையும்” என்ற வரிகள்.

இங்கு “தேம்பாத” என்ற ஒற்றை வரியில் எத்தனை பொருளை அடக்கியிருக்கின்றார்.  கவனிப்பாரின்றி, எந்தப் பயிரும் விளையாத மொட்டை நிலமாய், எந்த பலனையும் கொடுக்காத கட்டாந்தரையாய் இருக்கும் ஒரு தோட்டம்தான் தன்னிலை எண்ணித் தேம்பும். கவிஞர் அவர்களின் ஊரில் எந்தத் தோட்டமும் தேம்பவில்லை என்றால் என்ன பொருள்? எந்தத் தோட்டமுமே வெறுமையாக இல்லாமல் சுவையுள்ள தானியவகைகளால் நிறைந்திருக்கின்றன. வீட்டுத்தோட்டத்தில் தன்னிறைவு கண்ட ஒரு சமூகமொன்று அங்கு வாழ்ந்திருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிந்தது

தாளுண்ட நீரைத் தலையாலே தந்த தேங்காய், இளநீர், நுங்கு, புளி என்பவற்றால் அவரது வீட்டுத்தேவைகள் சுய நிறைவு கண்டன என்றால் அவரின் வீட்டு வளவு அத்தனை மரங்களாலும் எத்தகு சோலையாயும்  தோற்றம் பெற்றிருக்கும்?

கவிஞரின் படலையைத் திறந்தால் பருவகாலத்தை அப்படியே பிரதிபலிக்கும் வயல்வெளிகள் கண் முன்னே விரிகின்றன. கோடைகாலத்தில் காய்ந்து வறண்ட கோலம், மாரிகாலத்தில் வரப்புகளைத் தொட்டுத் ததும்பி நிற்கும் நீர், பருவகாலத்தில் கதிர் முற்றி நின்று அறுவடைக்காகக் காத்திருக்கும் நிறைமணிகள், பின்னர் குட்டிகளுடன் ஆடுகளும், கன்றுகளுடன் பசுக்களும், கடாக்களும், காளைகளுமாய் மேய்ந்து நிற்கும் காட்சி. “வரம்புகளை மேவிப் பாய்ந்து எல்லைகளை கடந்து எல்லோரின் வயல்களையும் இணைக்கும் வெள்ளம்” யாதும் ஊரே என்ற தமிழர் சால்பையும் தண்ணீரின் குற்றம் பார்க்காக் குணவியல்பையும் கூறி நின்றது.

அப்படியான வளம் நிறைந்த மண்ணில் பண்டிதரும் பாவலரும் ஏன் பாமரரும் கூட எந்தப் பிரிவினையும் இன்றி ஓரணியில் நின்று களனமைப்பார்கள் என்று தம் ஊரின் ஒற்றுமையையும் கோடிட்டுக் காட்ட அவர்  தவறவில்லை,

ஆடல் பயில் அலரிகள் அரும்பு நகையுடன் அதிகாலைக் கதிரவனை வரவேற்பார்களாம். காற்றுக்கு கனமில்லாத கிளையுடன் உள்ள அலரிகள் அசைந்த விதம் கவிஞருக்கு ஆடல் பயில்வது போன்று இருந்திருக்கின்றது


கரிக்குருவிகளும் கால் நடைகளும் கவிஞர் அம்பி அவர்களின் கவிதைக்கு கருவாகக் கூடிய இன்னொரு தலைப்பு. கரிக்குருவியின் ஒய்யாரச் சவாரியையும் அது பூச்சி பிடிக்கும் யுக்தியையும் கூட கவிஞர் ரசித்துப் பகிர்ந்திருக்கின்றார்.

அத்தனையும் போரின் அழித்தொழிப்பால் தகர்ந்து போன வேதனையில் ஆட்சிப்படைகளைப் பேனா முனைகளால் குத்திக் கிழிக்கவும்  அவர் தவறவில்லை.

“எங்களின் கோயில்” என்று கவிஞர் சொல்லக் கூடிய சித்திர


வேலாயுதர் என்ற அவரது ஊர்க்கோயில் பற்றிப் பேசுகின்றது இரண்டாவது அங்கம். அறிவு வளர்ச்சியிலும் மனப்பாங்கிலும் கோயில்கள் ஏற்படுத்தும் மாற்றம் பற்றி அழகாக விபரிக்கின்றார். கிறிஸ்தவக் கல்லூரியில் கல்வி பயின்ற அவருக்கு சமயப்பின்னணியைக் கற்றுக் கொடுத்தது இந்தக்கோயில்தான் என்று பெருமையுடன் ஒப்புக் கொள்கின்றார். “கொன்றை மரமும் பொற்றோரணமாய் தொங்கும் அதன் பூந்துணரும்” என்ற அழகான வர்ணனை எம்மூரின்  சிவன் கோயிலை எனக்கு ஞாபகப்படுத்தியது.

தாமரைக்குளத்தின் அழகும், ஒல்லித் தேங்காய் கட்டி அங்கு நீந்தி விளையாடிய சிறுவர் குழாமும் கூட என்னை எம்மூருக்குச் கூட்டிச் சென்றன.


பெத்தாச்சி என்றபோது ஒரு சைவப்பழம்பாட்டி என் கற்பனையில் வந்து நின்றார். அவரின் விரத அனுஷ்டிப்பையும் அவருடன் சேர்ந்து புராணக்கதைகள் கேட்டு வளர்ந்த விதத்தையும் அம்பி அவர்கள் சொன்னபோது தொழில் நுட்பத்தால் கற்றுக் கொடுக்க முடியாத பெருங்கொடுப்பினைகளை இன்றைய சந்ததிகள் இழந்து விட்டிருக்கின்றனரே என்ற ஏக்கம் என்னுள் எழாமல் இல்லை.

அதன் முடிவில் கோயிலுக்குச் சென்று மீளத் தரிசிக்க துடிக்கும் அவரின் ஏக்கம் என்னுள்ளும் ஒரு வேதனையை ஏற்படுத்தத் தவறவில்லை.

சொந்த நிலத்திலே வேலன் குளத்திலே மூழ்கிக் குளிப்பேனா?

எந்தை தலத்திலே இன்னும் ஒரு முறை சென்று துதிப்பேனா?

 என்று கவிஞரின் மனம் வேதனையில் குமுறுகின்றது

விழாக்கள் பற்றிச்சொல்லும் அங்கம் 03 இல்,   ஊரின் ஒற்றுமையிலும்


சமய உணர்வுகளை ஏற்படுத்துவதிலும் திருவிழாக்கள் எவ்வாறு துணை நின்றன என்பதைக் கூறுகின்றார். செவிப்புலனை விட கட்புலனாற் பெற்ற சூரன்போர் அனுபவம் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தந்து இன்றும் மனதில் நிற்கும் விதத்தை நயமாகச் சொல்லியிருக்கின்றார். சூரன் போருக்கு சூரன் தயாராகும் விதமும் தவில் வித்துவான் அண்ணாவி தன் நாதஸ்வரக்குழுவை மறந்து, பரமரின் பாட்டில் மயங்கி,  அவரது பாட்டுக்குக்கு குமுக்கா வாசித்த விதமும் அருமை.

கவிஞர் அவர்கள் அன்னையை ஆச்சி என்றும் தந்தையை அப்பு என்றும் அழைப்பது வழக்கம். அது அன்றைய பொது வழக்கமும் கூட. அப்பா, பப்பா,  டாடி என்று சக நண்பர்கள் தம் தந்தையை அழைக்கும் போது அப்பு என்று தன் தந்தையை வெளியிடங்களில் அழைக்க இவருக்குத் தயக்கம் இருந்திருக்கின்றது. ஒரு நாள் அவரது அதிபர் தன் தந்தையை “அப்பு என்று விளித்ததோடு, தேவையற்ற அந்த போலி எண்ணம் அகன்று விட்டதை வெள்ளை மனதுடன் ஒப்புக் கொண்ட விதம் என்னை மிகவும் ரசிக்க வைத்தது

அப்பு ஊரில் இல்லாக் காலத்தில் சொக்கப்பனைக்கு தீ மூட்டியபோது அடைந்த பெருமிதத்தையும், மார்கழி மாத குளிர் நீரில் நீராடி, உடல் நடுநடுங்க, பற்கள் படபடக்க திருவெம்பாவை உதய பூஜையில் கலந்து கொண்டதையும் நினைவு கூர்கிறார். தீங்கு விளைவிக்கும் மழைக்காலப்பூச்சிகள் சொக்கப்பனை தீயினால் கவரப்பட்டு, அழிக்கப்பட்டு விடும் என்ற அறிவியல் விளக்கத்தையும் சேர்த்தே சொல்கின்றார்.

அங்கம் 04 இல்  உழுதுண்டு வாழ்தலின் பெருமை,   வயலைப்பண்படுத்தல், உழுதல், நாற்று நடல், களை பறித்தல் போன்ற விவசாயச் செயற்பாடுகள் எருதுகளாலும் ஒருவருக்கொருவர் கரங்கொடுத்த மக்களின் கூட்டு முயற்சியாலும் இலேசாகிவிட, விவசாயிகள் உழுதுண்டு இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்திருந்தார்கள் என்று தன் அனுபவத்தைப் பதிவு செய்கின்றார். நெற்பயிரின் வளர்ச்சியுடன் ஒரு ஊரின் பெயர் மட்டும் உயரவில்லை, அவற்றுடன் ஒன்றி, ஆடிப்பாடிய மக்களின் ஒற்றுமையும் மண்வாசனையுடனான நாட்டார் பாடல்களும் சேர்ந்தே மணம் பெற்ற அழகை விபரிக்கின்றார்.

பருத்து உருண்ட உடல் கொண்ட வடக்கன் மாடுகள், கொம்பு சீவி, கழுத்தில் மணி கட்டி, சலசலக்கும் சதங்கையுடன் கம்பீரமாய் நடந்து வருவதையும், நுகத்தில் மாட்டியதும் அவை சீராக உழும் அழகையும் வர்ணித்தபோது அவற்றைக் காணமுடியாதா என்ற ஏக்கத்தையும் உண்டாக்கி விட்டார்.

என் கற்பனையில் கண்டு ரசித்த என் மனதை விட்டு என்றென்றும் அகன்று விடப் போகாத காட்சி ஒன்று:  

பச்சைப் பசேல் என்று பரந்து நிற்கும் வயல் வெளிகள். வரம்பில் இரண்டு கமக்காரர்கள் சந்திக்கின்றார்கள். ஒருவரின் சுருட்டு அணைந்து விட்டிருக்கின்றது. கண்கள் மட்டுமே கருத்துப் பரிமாற, அணைந்த சுருட்டுக்காரரும் கங்குடன் இருக்கும் சுருட்டுக்காரரும் சுருட்டு முனைகளைச் சந்திக்க வைத்து “பப், பப்” என்று இழுக்க சுருட்டு பற்றிக்கொள்கின்றது. ஒரு வார்த்தை கூடப் பேசத் தேவையின்றி நன்றிக்கு அறிகுறியாய் சின்னத் தலையசைப்புடன் பிரிந்து செல்லும் அந்த உள்ளங்களில் பொறாமை என்றோர் பொல்லாக் குணம் இருந்திருக்க வாய்ப்பேயில்லை. நல்லவேளையாக அப்போது கொரோனா தொற்று இருக்கவில்லை என்பது ஆறுதலே.

அங்கம் 05 இல்  அப்பு,  ஆச்சி, பெத்தாச்சி என்று மூத்தவர்களைப் பற்றி நினைவு கூர்கின்றார்.

இரண்டாவது உலக மகா யுத்தகாலத்தில் உணவுத்தட்டுப்பாடும், கட்டுப்பாடும் நிலவிய காலத்தில் ஏழு சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தை கட்டும் செட்டுமாய் ஆரோக்கியமாக பெற்றோர் எப்படி வளர்த்தெடுத்தார்கள் என்பதையும் அன்பையும் ஆதரவையும், இன்மொழியுடன் கல்வியையும் ஊட்டி நன்மக்களாய் வளர்த்தார்கள் என்பதையும் கூறி அவர்களின் அன்பில் நெகிழ்கின்றார்.

காலியிலிருந்து அப்பு கொண்டு வந்த சிவப்பு பச்சை அரிசியை பதமாய் சமைத்து பச்சை வாழையிலையில் இஞ்சிச்சம்பலுடன் கட்டி பசியுடன் இருக்கும் மதியவேளையில் உண்ணும்போது பெற்ற அறுசுவையை சொற்களால் சிறைப் பிடிக்க முடியவில்லை என்று வருந்துகின்றார் கவிஞர். அடுப்புப் புகையுடன் தானும் எரிந்து அந்த அதிகாலை வேளையிலேயே சமைத்து தந்த அன்னைக்கு நன்றி கூறவில்லையே என்றும் கவலையுறுகின்றார். தலைக்கு சிகைக்காய் போட்டு நீராட்டி, சாம்பிராணிப் புகை காட்டி, சுட்ட உள்ளியுடன் மணக்க மணக்க துவரம் பருப்பு ரசம் தந்தார் ஆச்சி என்று சொல்லும் போது எம்மையும் ஏங்க வைத்து விடுகின்றார்.

அன்னையின் உளவியல் மாண்பு தொடர்கின்றது. இன்றைய காலத்தில் பெற்றோரின் அரவணைப்புக்காக குழந்தைகள் எவ்வளவு ஏங்குகின்றார்கள் என்பதையும் பெற்றோர் வளர்க்கும் பாங்கு பிள்ளையின் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதைப் பற்றியும் கவலையுறுகிறார் கவிஞர். “அன்பும் ஆதரவும் பெற்று வளரும் பிள்ளை அகிலத்தை நேசித்து வாழப்பழகும்” எத்தனை ஆழமான வரிகள்.

உலை போடுமுன் ஒரு பிடி அரிசியைச் சேமித்து தன்னை ஒறுத்த ஆச்சியின் தர்ம சிந்தனையும், உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய உயர்வும் நிச்சயம் போற்றப் படக் கூடியதே.

தள்ளாத வயதிலும் தான் பெற்ற பெண்ணுக்குத் துணை நின்ற பெத்தாச்சியின் மாண்பையும் எண்ணி உருகுகின்றார் கவிஞர்.

தேவையற்ற பொறுப்புகளை தட்டிக் கழிக்க எண்ணாமல் பிள்ளைக்குச் செய்ய முடியாதவற்றை பேரப்பிள்ளைகளுக்குச் செய்து நிறைவு கண்டவர் பெத்தாச்சி என்று சொல்லும் போதே அவர் பெருமை புரிகின்றது.

குருவின் பெருமையையும் உயர்கல்வியையும்பற்றி சொல்லும்போது,

மூன்றாம் வகுப்பில் கணக்கும் தமிழும் கற்பிக்கவென ஆசிரியரை ஒழுங்குபடுத்திய பெரியவாத்தியாரும், ஒரு பேணி தேநீர் சன்மானத்துடன் ஒற்றைச் சைக்கிளில் வந்து கற்பித்து உயர் பாடசாலையில் புலமைப் பரிசில் பெறுவதற்குத் துணை நின்ற பரமசாமி வாத்தியாரும் தன்னலமில்லா ஆசிரியப்பணிக்கு நிறைவு சேர்க்கின்றார்கள். 1938 ஆம் ஆண்டு யாழ். பரியோவன் கல்லூரிக்கு கட்டணங்கள் ஏதுமின்றி படிக்கச் சென்றமை கவிஞரின் கடின உழைப்புக்கும் கல்வித்திறமைக்கும் சான்று பகிர்ந்து நிற்கின்றது

பரியோவான் கல்லூரிபற்றி  எழுகின்ற எண்ணங்களும் உயிர்க்கின்ற உணர்வுகளும் பற்பல என்று கவிஞர் தனது பாடசாலை நினைவுகளில் சிலிர்க்கின்றார். கிராமத்துப் பின்னணியில் இருந்து நகரப்பள்ளிக்குச் செல்கையில் சூழலும் அனுபவங்களும் புதிது என்பதுடன் விடுதி வாழ்க்கை ஒன்பது வயதிலேயே ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கக் கற்றுத் தந்ததாக அந்த நினைவுகளில் கரைந்து போகின்றார். சைவ சமயத்தவரான கவிஞருக்கு விவிலிய நூற்கதைகள் மனித நேயத்தையும் மனவிழிப்பையும் ஏற்படுத்தி அறிவை விசாலமாக்கின என்று குறிப்பிட்ட போது மதங்கள் போட்ட எல்லையைத் தாண்டி வாழ்ந்திருக்கின்றார் என்பது புரிந்தது.

சார்ளி பப்பா என்ற வகுப்பாசிரியர் தன் முதுமையைப் பொருட்படுத்தாது பழைய சைக்கிளில் ஒவ்வொரு மாணவனின் வீட்டுக்கும் சென்று பொருளாதார நிலை, கல்வி நிலை பற்றி உரையாடுவாராம். சேவையுள்ளம் கொண்ட ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட மாணவர் சமுதாயம் எத்தனை ஆரோக்கியமானதாய் இருந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்க்க முடிகின்றது.

நடுநிலைப்பள்ளி அனுபவம் பற்றியும் இந்நூலில் அம்பி சொல்கிறார்

 நளவெண்பா, நன்னெறி, திருக்குறள், என்ற தமிழிலக்கியங்களும், ஆங்கில இலக்கியமும் பயில்வதற்கான பாடத்திட்டம் இருந்ததாக குறிப்பிடுகின்றார். தமிழ்-ஆங்கில இலக்கியபடைப்பு முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அத்திவாரமிட்ட இருபெரும் ஆசான்களையும் நன்றியுடன் பணிகிறார். பன்னிரண்டு ஆண்டுகள் பயின்ற பாடசாலையை விட்டு விலகி, ஏழு தசாப்தங்களுக்கு மேலாகி விட்ட போதும் அந்த அனுபவங்கள் நினைவுப் பொன்னேட்டில் பதிந்துள்ள வரலாறு என்கிறார் கவிஞர்.

வீட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு கைவசம் வந்த பல்கலைக்கழகப் படிப்பை உதறி விட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் நின்றிந்தமையையும், குடும்பப் பொறுப்பை தன் தோளில் தாங்கிக் கொள்ள துணிந்து நின்றமையையும் அவரது பண்புக்குச் சான்றாகின.

தான் கற்ற பாடசாலையிலேயே கற்பிக்கக் கிடைத்த வாய்ப்பை அம்பி அவர்கள்  மறுத்தமைக்கான காரணம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

கற்பித்த ஆசிரியர்களுடன் சமமாக நின்று பணியாற்ற அவரது மனம் இடம் கொடுக்கவில்லை. பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் மேல் எத்தனை மரியாதை வைத்திருக்கின்றார் என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்.

சிவயோக சுவாமிகள் சொன்னது போன்றே “எல்லாமே எப்போதோ முடிந்த காரியம்” என்று ஏற்றுக் கொண்டு ஆசிரியப்பணியைத் தொடங்கிய கவிஞர் அம்பி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் நாமும் தொடர்ந்து பயணிக்கலாம்.

94 ஆவது அகவைத்திருநாள் கொண்டாடும் கவிஞர் அம்பி அவர்களை வாழ்த்த எனக்கு வயதில்லை எனினும் வணங்கிக் கொள்கின்றேன்.

---0----

 

 

 

No comments: