இலங்கைச் செய்திகள்

 IMF வழங்கிய 330 மில்லியனில் 121 மில்லியன் டொலர் இந்திய கடன் தவணைக்கு செலுத்தப்பட்டது

IMF எதிர்பார்க்கும் காலத்துக்கு முன்னர் கடன் பேண்தகு இலக்கு

ஏற்றுமதி வருமானம் 12.5 பில்லியன் டொலராக அதிகரிப்பு

வடக்கில் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடிய நிலையில்

மார்ச் 28 - 31, ஏப்ரல் 03 இடம்பெறவிருந்த தபால் வாக்களிப்பும் ஒத்திவைப்பு


 IMF வழங்கிய 330 மில்லியனில் 121 மில்லியன் டொலர் இந்திய கடன் தவணைக்கு செலுத்தப்பட்டது

- நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட 330 மில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட கடன் தொகையில், இந்திய கடன் திட்டத்தின் முதல் தவணையை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக, நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய அதற்கான தவணைக் கொடுப்பனவான 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வியாழக்கிழமை (23) செலுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் இவ்வாறான கடன் நிதியானது மத்திய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவது வழக்கமாகும். ஆயினும் இம்முறை, திறைசேரி பிரதிச் செயலாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளதால், அந்நிதியை கடன் இறுத்தலுக்கு பயன்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.   நன்றி தினகரன் 





IMF எதிர்பார்க்கும் காலத்துக்கு முன்னர் கடன் பேண்தகு இலக்கு

அடைய முடியுமென்பதில் இலங்கை நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் காலத்துக்கு முன்னர் இலங்கையால் கடன்பேண்தகு தன்மையை அடையமுடியுமென, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை புதிய யுகத்துக்குள் நுழைந்துள்ளதாக நான் கருதுகின்றேன் எனவும், அவர் தெரிவித்தார். சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்காக இலங்கை மக்களின் ஆதரவை பெறாத சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாலேயே, இலங்கை புதிய யுகத்துக்குள் நுழைந்துள்ளளதாகக் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.   நன்றி தினகரன்  




ஏற்றுமதி வருமானம் 12.5 பில்லியன் டொலராக அதிகரிப்பு

ரமேஷ் பத்திரண தெரிவிப்பு

நாட்டின் வருடாந்த ஏற்றுமதி வருமானம் தற்போது அதிகரித்து வருவதையடுத்து 10 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்தில் 12.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டுக்கு நேரடி முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டில் நிலவிய கொரோனா சூழ்நிலையினால் சுற்றுலாத் துறையிலும் பெரும் வீழ்ச்சி காணப்பட்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையரிடமிருந்து கிடைக்கும் வருமானம் குறைவடைந்தமை, கடன் பெறுவதில்லையென்ற தீர்மானம் காரணமாகவும் நாடு பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.லோரன்ஸ் செல்வநாயகம்   நன்றி தினகரன்  






வடக்கில் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடிய நிலையில்

மாணவர்கள் இன்மையே காரணம்

வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் காலப்பகுதியில் மாணவர்கள் இன்மையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 49 பாடசாலைகளும், கிளிநொச்சியில் 8 பாட சாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 10 பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பாடசாலைகளும் வவுனியா மாவட்டத்தில் 34 பாடசாலைகளுமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வவுனியாவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்திலேயே இந்த எண்ணிக்கை உயர்வாகப் பதிவாகியுள்ளது என்றார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் அ.உமாமகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கில் எந்தவொரு பாடசாலையும் நிரந்தரமாக மூடப்படவில்லை. வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கூறிய 103 பாடசாலைகளும் தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளன. மாணவர் பற்றாக்குறை காரணமாகவே இவை மூடப்பட்டுள்ளன. இதற்கு இடப்பெயர்வுகள், நகர்ப்புற பாடசாலைகளின் வளர்ச்சி, நகரமயமாக்கல், சனத் தொகைப் பற்றாக்குறை எனப் பல காரணங்கள் காணப்படுகின்றன.

மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் இன்று சில பாடசாலைகளில் புதிதாகக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. மறுபுறம் சில பாடசாலைகள் மூடப்படுகின்றன. நகர்ப்புற பாடசாலைகளின் வளர்ச்சியும் இதற்குக் காரணம். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு சில இடங்களில் மக்கள் இல்லை.

சில இடங்களில் நகரமயமாக்கல் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. இது குறித்து நாம் அவதானம் செலுத்துகின்றோம். முறைப்படியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எமது தரப்பில் நாமும் முன்னெடுப்பதற்குத் தயாராக உள்ளோம். தற்காலிகமாகப் பாடசாலைகளை மூடுவது எமது விருப்பு அல்ல.

போதிய எண்ணிக்கையான மாணவர்கள் வருகை தருவார்களாயின் நிச்சயமாக பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என்றார்.   நன்றி தினகரன் 





மார்ச் 28 - 31, ஏப்ரல் 03 இடம்பெறவிருந்த தபால் வாக்களிப்பும் ஒத்திவைப்பு

- தேர்தல் நடைபெறும் திகதி பின்னர் தீர்மானிக்கப்படும்
- அரசியல் கட்சிகளின் செயலாளர்களால் 4 யோசனைகள்

மார்ச் 28 - 31 மற்றும் ஏப்ரல் 03ஆம் திகதி இடம்பெறவிருந்த தபால் வாக்களிப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இன்றையதினம் (23) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இன்றையதினம் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல் ஆணைக்குழு நீண்ட நேரம் கலந்துரையாடியதற்கு அமைய குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த கூட்டத்தில் பின்வரும் யோசனைகள் அரசியல் கட்சிகளின் செயலாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

  1. தற்போதுள்ள நிலைமைகளுக்கமைய 25.04.2023 அன்று உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாததால், அத்தேர்தலை எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட திகதிக்கு ஒத்திவைத்தல்;
  2. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான உரிய திகதியை குறிப்பிடாமல், தேர்தலுக்கு அவசியமான வசதிகள் மற்றும் பின்புலங்களை உறுதி செய்த பின்னர் தேர்தல் திகதியை நிர்ணயித்தல்;
  3. உரிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் தற்போது நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுகளின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் சட்டச் சிக்கல்கள் காணப்படுவதால், தேர்தலை எந்த வகையிலும் ஒத்திவைக்காதிருத்தல்;
  4. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் ஏனைய தரப்பினருடன் கலந்தாலோசித்து, தேர்தலுக்கான எதிர்காலத் திகதியை தீர்மானித்தல்;

இந்த அனைத்து விடயங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான சட்டங்களை ஆராய்ந்து பிறகே தேர்தலுக்கான நாள் குறித்து தேர்தல் ஆணைக்குழு முடிவெடுக்கவுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்தப்படவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் வாக்களிப்பை 2023 மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 03 ஆம் திகதிகளில் நடத்தாதிருக்க, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

நன்றி தினகரன் 




No comments: