உலகச் செய்திகள்

தாய்வானில் சீன ஊடுருவல் உச்சம் 

ஆபாச நடிகை விவகாரம்: டிரம்ப் மீது குற்றச்சாட்டு

சூச்சியின் கட்சி கலைப்பு

அமெரிக்கா செல்லும் தாய்வான் ஜனாதிபதிக்கு சீனா எச்சரிக்கை

 இஸ்ரேலிய அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்; பதற்றம்

 பிலிப்பைன்ஸ்: கப்பல் தீப்பற்றியதில் 31 பேர் பலி


தாய்வானில் சீன ஊடுருவல் உச்சம் 

தாய்வானைச் சூழ சீன இராணுவ விமானங்களதும் கடற்படை கப்பல்களதும் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் மாத்திரம் 292 இராணுவ விமானங்களதும் 76 கடற்படைக் கப்பல்களதும் பிரசன்னம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“தாய்வானைச் சூழ சீன விமானங்களதும் கடற்படைக் கப்பல்களதும் பிரசன்னங்களை அண்மைக் காலமாக அடிக்கடி அவதானிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கூட 28 இராணுவ விமானங்களையும் 4 கடற்படை கப்பல்களையும் அவதானிக்க முடிந்தது. சில விமானங்கள் தாய்வான் வான் பரப்புக்குள்ளும் பிரவேசித்திருந்தன” என்றும் அது கூறியது.   நன்றி தினகரன் 


ஆபாச நடிகை விவகாரம்: டிரம்ப் மீது குற்றச்சாட்டு

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தகவல்களை மறைப்பதற்காக ஆபாச நடிகை ஒருவருக்கு பணம் கொடுத்தது தொடர்பில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது.

எனினும் இந்த வழக்கு தொடர்பான விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆபாச நடிகை ஸ்டோமி டானியலுடன் தமக்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படும் தொடர்பு பற்றி வெளியே கூறாமல் இருப்பதற்கு அவருக்கு டிரம்ப் 130,000 டொலர் பணம் வழங்கியது தொடர்பில் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நடுவர் குழாம் ஒன்று ஆதரவாக வாக்களித்துள்ளது.

தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று 76 வயதான டிரம்ப் மறுத்துள்ளார். இந்நிலையில் அவர் குற்றவியல் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுக்கும் முதல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக பதிவாகவுள்ளார்.

டிரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுவதால், ‘தயார் நிலையில் இருக்க வேண்டும்’ என்று நியூயோர்க் பொலிஸாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தன் மீதான புகார் குறித்து வெளியில் பேசாமல் இருப்பதற்காக முன்னாள் ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸூக்கு ட்ரம்ப் பணம் கொடுத்ததாக, ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் இந்தப் பணம் சட்டத்திற்கு புறம்பாக டிரம்பின் ஜனாதிபதி பிரசார கணக்கில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

வரும் செவ்வாய்க்கிழமை அன்று டிரம்ப் மீது விசாரணை நடக்கும் என டிரம்பின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.

டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அது குடியரசு கட்சிக்கு பின்னடைவாக அமையும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய குற்றச்சாட்டு காரணமாக, 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் டிரம்பின் கனவு தகர்ந்து போகலாம். குற்றச்சாட்டு அரசியல் ரீதியான பழிவாங்கல், தேர்தல் தலையீடு என்று கூறும் டிரம்ப் தாம் நிரபராதி என்கிறார்.   நன்றி தினகரன் 

சூச்சியின் கட்சி கலைப்பு

மியன்மாரின் தேர்தல் ஆணையம் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியின் ஜனநாயக தேசிய லீக் கட்சியைக் கலைத்துள்ளது.

ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு அந்தக் கட்சி மறுபதிவு செய்யத் தவறியதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்தன. அந்தக் கட்சியோடு மேலும் 39 கட்சிகளும் கலைக்கப்பட்டன.

தனது உறுப்பினர்கள் பலரும் சிறையில் இருப்பதால் தேர்தல் அதிகாரிகளுடன் பதிவு செய்யப்போவதில்லை என்று ஜனநாயக தேசிய லீக் கட்சி முன்னதாகக் கூறியிருந்தது.

2015, 2020ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல்களில் ஜனநாயக தேசிய லீக் கட்சி மாபெரும் வெற்றிகளைக் கண்டது.

2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் கட்சியின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டனர்.   நன்றி தினகரன் 

அமெரிக்கா செல்லும் தாய்வான் ஜனாதிபதிக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங் வென் அங்கு அமெரிக்க பிரதிநிதிகள் அவை சபாநாயகர் கெவின் மக்கர்தியை சந்தித்தால் ‘பதிலடி’ கொடுக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.

நேற்று (29) ஐக்கிய அமெரிக்காவுக்குப் புறப்பட்ட ட்சாய்், நாட்டின் இராஜதந்திர உறவை பலப்படுத்தும் வகையில் குவன்தமாலா மற்றும் பெலிஸ் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணித்தில் கலிபோர்னியாவுக்கு செல்லவிருக்கும் தாய்வான் ஜனாதிபதி, பிரதிநிதிகள் அவை சபாநாயகரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

எனினும் தாய்வானை தனது நாட்டின் ஓர் அங்கமாகக் கருதும் சீனா அதனை தனது ஆட்புலத்தில் இணைப்பதற்கு உறுதி பூண்டுள்ளது. இந்நிலையில் ஒரே சீனா கொள்கையின்படி எந்த ஒரு நாடும் சீனா மற்றும் தாய்வானுடன் ஒரே நேரத்தில் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை பேண முடியாது என்று வலுயுறுத்துகிறது.

இந்நிலையில் ட்சாய் மற்றும் மக்கார்தி இடையிலான எந்த ஒரு சந்திப்புக்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் சீனா, அது நடந்தால் பதிலடி அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

“அமெரிக்க பிரதிநிதிகள் அவை சபாநாயகர் மக்கர்தி இதில் ஈடுபட்டால், ஒரே சீனா கொள்கை, சீன இறைமையை குறைமதிப்பிடல் மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அமைதி மற்றும் தாய்வான் நீரிணையின் ஸ்திரத்தன்மையை மீறும் மற்றொரு ஆத்திரமூட்டும் செயலாக அமையும்” என்று சீனாவின் தாய்வான் விவகார அலுவலக பேச்சாளர் சூ பெங்லியன் குறிப்பிட்டுள்ளார்.

ஹொன்டுராஸ் அண்மையில் சீனாவுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியதை அடுத்து தாய்வானுடன் உறவைப் பேணும் நாடுகளின் எண்ணிக்கை 13 ஆக குறைந்திருக்கும் நிலையிலேயே தாய்வான் ஜனாதிபதி இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

“உலக அளவில் செல்வதற்காக எமது உறுதியான நிலைக்கு வெளி அழுத்தங்கள் தடையாக இருக்காது” என்று நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் ட்சாய் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.   நன்றி தினகரன் 


இஸ்ரேலிய அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்; பதற்றம்

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, தனது பாதுகாப்பு அமைச்சரை பதவி விலக்கியதை அடுத்து இஸ்ரேல் எங்கும் பாரிய ஆர்ப்பட்டங்கள் வெடித்துள்ளன.

இஸ்ரேலின் சட்ட முறையை மாற்றி அமைக்கும் அரசின் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் யோவ் களன்ஸ் எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்தே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (27) அதிகாலை நெதன்யாகுவின் வீட்டுக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும் படையினர் தண்ணீரை பீச்சியடித்தனர். இஸ்ரேலின் நிலை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் சமரசம் ஒன்றுக்கு வரும்படியும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

திட்டமிடப்பட்ட இந்த சட்டத்தை கொண்டுவருவதில் ஏற்கனவே ஒரு வார காலம் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தின்படி நீதிபதிகளை நியமிக்கும் குழு அரசின் முழு கட்டுப்பாட்டில் வரவுள்ளது.அதேபோன்று பதவி வகிக்க தகுதியற்றவர் என்று நீதிமன்றம் தீர்மானிக்கும் தலைவரை பதவி நீக்குவது இந்த சட்ட சீர்திருத்தத்தில் கடுமையாக்கப்பட்டுள்ளது. இது பதவியிலுள்ள நெதன்யாகு முகம்கொடுத்திருக்கும் வழக்கு விசாரணையில் இருந்து தப்புவதற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.

இஸ்ரேலிய கொடிகளுடன் டெல் அவிவில் திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான நெடுஞ்சாலையை முடக்கியதோடு வீதியில் தீப்பந்தங்களையும் எரித்தனர். இதனை அடுத்து பொலிஸாருடன் மோதலும் ஏற்பட்டது.

இந்நிலையில் அரச பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நெதன்யாகு நாட்டில் இருந்து வெளியே இருக்கும் சந்தர்ப்பத்தில் கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சியில் பேசியபோதே களன்ஸ் இந்த சட்ட சீர்திருத்தத்தை எதிர்த்தார். இதனை அடுத்து பாதுகாப்பு அமைச்சராக அவர் மீ   நன்றி தினகரன் 


 பிலிப்பைன்ஸ்: கப்பல் தீப்பற்றியதில் 31 பேர் பலி

தென் பிலிப்பைன்ஸில் சுமார் 250 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 31 பேர் நீரில் மூழ்கியும் தீயில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர்.

மின்டானோ தீவில் உள்ள சம்பங்கா நகரில் இருந்து ஜோலோ தீவுக்கு பயணித்துக் கொண்டிருந்த கப்பல் கடந்த புதன்கிழமை இரவு தீப்பற்றியுள்ளது. இதனை அடுத்து கப்பலில் இருந்த பயணிகள் உயிரைக் காக்க தண்ணீரில் குதித்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரியான நிக்சன் அலொன்சோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடலோரக் காவல் படையினர் மற்றும் மீன்பிடிப் படகுகள் நீரில் தத்தலித்த பெரும்பாலான பயணிகளை காப்பாற்றியுள்ளனர்.

நேற்றைய (30) தினத்திலும் தேடுதல் தொடர்ந்த நிலையில் ஏழு பயணிகள் தொடர்ந்தும் காணாமல்போன நிலையில் உள்ளனர்.

கப்பலின் வளிச்சீராக்கி அறையிலேயே தீ ஏற்பட்டிருப்பதோடு அது எவ்வாறு நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

7600க்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட நாடான பிலிப்பைன்ஸில் பயணிகள் போக்குவரத்துக்கு அதிகம் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுகின்றன. எனினும் அவ்வாறான கப்பல் அதிக பயணிகளை ஏற்றியதாக போதிய பாதுகாப்பு இன்றியே செயற்படுகின்றன.

1987 ஆம் ஆண்டு மின்டோரோ தீவுக்கு அப்பால் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய் கப்பலில் மோதிய விபத்தில் சுமார் 5,000 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 


No comments: