குலமகள் ராதை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 சென்ற நூற்றாண்டில் ஏராளமான நாவலாசிரியர்கள் பிரபலமாக


திகழ்ந்தார்கள்.அவர்கள் எழுதும் நாவல்கள் வாரா வாரம் சஞ்சிகைகளில் வெளியாகி பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்தன . அவ்வாறு வாசகர்களை கவர்ந்த எழுத்தாளர்களில் அகிலன் என்ற நாவலாசிரியரும் ஒருவர் .இவர் எழுதிய பல நாவல்களை வாசித்து மெய்மறந்த பலர் தங்கள் பிள்ளைகளுக்கு அகிலன் என்ற பெயரிட்டு மகிழ்ந்தார்கள் . இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் என்ற பெயரில் ஒரு படம் வந்துள்ளது. இவ்வளவு கீர்த்திக்கு உள்ளான அகிலன் எழுதிய வாழ்வு எங்கே என்ற நாவலை ஸ்பைடர் பிலிம்ஸ் பட நிறுவனம் 1963ம் ஆண்டு படமாக தயாரித்தனர்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே அகிலனின் பாவை விளக்கு

நாவல் படமாகி வெற்றியை பெறாத போதும் அதே படத்துக்கு வசனம் எழுதிய ஏ பி நாகராஜன் அகிலனின் வாழ்வு எங்கே நாவலுக்கு திரை கதை வசனம் எழுதி டைரக்ட் செய்ய முன் வந்தார். படத்துக்கு குலமகள் ராதை என்ற பெயர் சூட்டப்பட்டது.

சந்திரன்,ராதை இருவரும் மனமொத்த காதலர்கள். ஆனால் ராதையின் அண்ணனும்,அண்ணியும் ஊர் பெரியவரான சம்பந்தமூர்த்தியுடன் சேர்ந்து அவர்களின் காதலை எதிர்க்கிறார்கள். சந்திரன் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவன் என்பது அவர்களின் வெறுப்புக்கு காரணம். இதனால் காதலர்கள் பழனிக்கு சென்று இரகசியமாக திருமணம் செய்து புது வாழ்வு தொடங்க தீர்மானிக்கிறார்கள். பயண ஏற்பாடுகளை செய்து விட்டு சந்திரன் காத்திருக்க வீட்டை விட்டு வெளியேற முடியாத வண்ணம் ராதை, அண்ணி அண்ணனால் தடுக்கப்படுகிறாள். இதனால் திருமண திட்டம் தடைப்படுகிறது.

ராதை வரவில்லை என்பதை அறிந்து சந்திரன் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைகிறான். அவளை அழைத்து வர அவள் வீட்டுக்கே செல்கிறான். ஆனால் ராதையோ சம்பந்தமூர்த்தியின் மிரட்டலுக்கு பயந்து அவனை அவமானப்படுத்தி விரட்டி விடுகிறாள். இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படுகிறது. சந்திரன் ராதையை மறக்க எண்ணி சென்னைக்கு செல்கிறான். ராதையோ நிர்கதியாகி வாழ்வு எங்கே என்று ஏங்குகிறாள்!

படத்தில் சந்திரனாக சிவாஜியும், ராதையாக சரோஜாதேவியும் நடித்தார்கள். இவர்களுடன் தேவிகாவும் நடித்திருந்தார். இவர்கள் மூவரும் பெரும்பாலான காட்சிகளில் உணர்ச்சிகரமாகவே நடித்திருந்தார்கள். அதிலும் சரோஜாதேவி சோக ரசத்தை பிழிய சிவாஜி வெறுப்பை உமிழ்ப்பவராக நடித்திருந்தார். படத்தில் வில்லனாக வருபவர் பழம் பெரும் நடிகர் கே சாரங்கபாணி. நகைச்சுவை நடிகராக பார்த்து பழகிய அவரை வில்லனாக பார்ப்பது சங்கடமாக இருந்தது. மனைவிக்கு அடங்கிய கணவனாக டீ கே பகவதி நடிக்க, சோகமயமாக தாயாக கண்ணம்பா நடித்தார். சந்தியாவுக்கு வழக்கமான அடங்காபிடாரி வேடம். இவர்களுடன் ஏ பி நாகராஜன் குழாமை சேர்ந்த வி கே ராமசாமி, டீ என் சிவதாணு , பி டி சம்பந்தம்,மனோரமா,குண்டு கருப்பையா ஆகியோரும் நடித்திருந்தார்கள். நல்லவனாக நடிக்கும் வாய்ப்பு ஆர் எஸ் மனோகருக்கு கிட்டியது.


பாவைவிளக்கு படத்தில் சிவாஜிக்காக பாடல்களை பாடியவர் இசைசித்தர் சி எஸ் ஜெயராமன். பாடல்கள் பிரபலமான போதும் படம் வெற்றி பெறவில்லை. ஜெயராமனுக்கு பதில் டீ எம் சௌந்தரராஜன் பாடியிருந்தால் படத்தின் வெற்றிக்கு அது உதவி இருக்கும் என்று அகிலன் ஏ பி நகராஜனிடம் கூறி வருத்தப்பட்டார். இந்தப் படத்தில் அவரின் அந்த குறை நிவர்த்தி செய்யப்பட்டது. படத்திற்கான பாடல்களை சௌந்தர்ராஜனும்,சுசீலாவும் பாடியிருந்தார்கள்.

படத்துக்கான பாடல்களை கண்ணதாசன்,மருதகாசி இருவரும்

இயற்ற திரை இசை திலகம் கே வி இசையமைத்திருந்தார். உன்னை சொல்லி குற்றமில்லை, சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா,ராதே உனக்கு கோபம் ஆகாதடி ஆகிய பாடல்கள் பிரபலமாகின. பகலிலே சந்திரனை பார்க்க போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள் பாடல் சுசிலாவின் குரலில் கவிநயத்துடன் ஒலித்தது.


படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் டபிள்யு ஆர் சுப்பா ராவ் . படத்தில் இடம் பெற்ற சார்க்கஸ் காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருந்தார்.

நாவலில் இருந்த ஜீவன்,வர்ணனை,உணர்ச்சி என்பன அது படமான போது காணவில்லை என்று ரசிகர்கள் எண்ணினார்கள் . இதனால் ஏ பி நாகராஜன் போன்ற திறமை மிக்கவர் டைரக்ட் செய்தும் குலமகள் ராதை ரசிகர்களின் மனதில் இடம் பெறாமல் போய் விட்டாள்!
No comments: