நூற்றாண்டுக்கு அப்பால் டி எம் எஸ் ! March 24 1923 - ச. சுந்தரதாஸ்

 .

படத்தில் நடிகர்களே தங்கள் சொந்தக் குரலில் பாடி, நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் டீ எம் சௌந்தரராஜன். 1946ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண விஜயம் படம் மூலம் திரையுலக விஜயத்தை   ஆரம்பித்தவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் 1954ல் வெளியான தூக்கு தூக்கி . இதில் சிவாஜிக்கு அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே அவரை புகழின் உச்சிக்கே தூக்கி விட்டன. தொடர்ந்து எம் ஜி ஆருக்கு அவர் மலைக்கள்ளன் படத்தில் பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் அவரின் இருப்பிடத்தை திரையுலகில் உறுதி செய்தது. அன்று புகழ் பெற்ற பின்னணிப் பாடகர்களா திகழ்ந்த சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன் இருவரையுமே இந்த மதுரைக்காரர் ஓரம் கட்டி விட்டார் என்று பலரும் வியந்தார்கள்.


டி எம் எஸ்ஸுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்து அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு. மலைக்கள்ளனில் எம் ஜி ஆருக்கு பாடும் முதல் வாய்ப்பையும் அவரே வழங்கினார். இசைமேதை ஜி ராமநாதன் தனக்கு தேவையான போது மட்டும் சௌந்தர்ராஜனை பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அவர் வசம் இருந்த  இசை சாம்ராஜ்யம் மெல்ல அவரை விட்டு நழுவி கே வி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றோரிடம் வந்த போது அவர்கள் டீ எம் எஸ்ஸை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள் .


அதன் காரணமாக உச்சம் தொட்டார் டீ எம் எஸ் . வானத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் சந்திரன் ஒருவனே என்பது போல் திரையில் எம் ஜி ஆர் , சிவாஜி, ஜெமினி, ன பல நட்சத்திரங்கள் இருந்த போதும் தனி நிலவாக பிரகாசித்தார் டி எம் எஸ்.


தூக்கு தூக்கி படத்துக்கு டீ எம் எஸ் பாடுவதை ஆரம்பத்தில் வரவேற்காத சிவாஜி சில ஆண்டுகள் கழித்து டீ எம் எஸ் தான் எனக்கு பாட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதே போல் எம் ஜி ஆரினாலும் கூட தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்தார் டீ எம் எஸ். தேவர் தயாரித்த படங்களில் நடிக்க தொடங்கியது முதல் சௌந்தர்ராஜனின் குரலை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார் அவர்.

குரல் மாற்றி பாடுவது மட்டுமன்றி , சுத்தமான உச்சரிப்பு, கம்பீரமான குரல், பாத்திரமாகவே மாறிப் பாடும் தன்மை இவை எல்லாம் டீ எம் எஸ்ஸின் தனித்துவம் எனலாம். முதலில் டீ எம் எஸ் நடித்து உணர்ந்து பாடிய பாடலுக்குத் தான் பின்னர் நடிகர்கள் நடித்தார்கள். அவர்களின் அந்த நடிப்புக்கு உந்துதலாக இருந்தது அவரின் குரல் என்று சொல்லலாம். ஆனாலும் அவர்கள் டீ எம் எஸ்ஸை பின்னணியில் வைத்திருக்கவே விருப்பினார்கள். ரசிகர்களும் அதற்கு ஏற்றாற் போல் இது சிவாஜி பாடல், இது எம் ஜிஆர் பாடல் என்றே அடையாளப் படுத்தி மகிழ்ந்தார்கள். இது நாளடைவில் டீ எம் எஸ்ஸுக்கு ஒரு குறையாகவே தோன்றியது. தனக்கு கிடைக்க வேண்டிய புகழ் வேறு எங்கோ செல்வதாக கருதத் தொடங்கினார்.

ஆனாலும் 1980ம் ஆண்டின் ஆரம்பம் வரையில் அவரின் சிம்மாசனத்தை எவராலும் அசைக்க முடியவில்லை. ஆனால் இசைக்கு ராஜாவாக இருந்த அவரை கால மாற்றம் இன்னுமொரு ராஜா மூலம் அங்கிருந்து அப்புறப் படுத்தியது.

என்றாலும் சௌந்தரராஜன் பக்தி பாடல்கள் மூலம் மற்றுமொரு பரிணாமத்தைத் தொட்டார். கர்னாடக பாடகர்களிடம் இருந்த பக்தி கீர்த்தனைகளை அதற்கு பதில் மெல்லிசை மூலம் பக்திப் பாடல்கலாக்கி பட்டி தொட்டி எங்கும் பாமர மக்களிடமும் கொண்டு போய் சேர்த்த பெருமை டீ எம் எஸ்ஸை சாரும். சினிமா பாடகர் என்று அவருக்கிருந்த புகழ் இதற்கு பயன் பட்டது எனலாம். அதே சமயம் தான் ஒரு சினிமாப் பாடகன் மட்டும் அல்ல , ஒரு சங்கீத வித்துவான் என்ற பெயரையும் பக்திப் பாடல்களை பாடி நிலை நாட்டிக் கொண்டார் அவர் .தமிழ் நாட்டில் மதுரையில் 1923ம் வருடம் மார்ச் 24ம் திகதி பிறந்த சௌந்தரராஜனுக்கு இது நூற்றாண்டு.சென்னையில் மந்தைவெளியில் அவர் நீண்ட காலம் வாழ்ந்த வீதிக்கு அவரின் பெயரை சூட்டி கௌரவித்திருக்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இன்றைய தி மு க அரசு. பாராட்ட வேண்டிய விஷயம்.
50 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலினின் சகோதரர் மு க முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை பட விழாவில் கலந்து பேசிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் கருணாநிதி , அன்று மந்திரிகுமாரி படத்துக்கு பாடிய சௌந்தரராஜன் இன்று மந்திரிகுமாரனுக்கு பாடியுள்ளார் என்று குறிப்பிட்டார். இன்று முதல்மந்திரியினால் வீதிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நூற்றாண்டை நெருங்கி கொண்டிருக்கும் தமிழ் திரையுலகம் பல ஜாம்பவான்களை பார்த்துள்ளது. அந்தந்த காலத்துட ன் வாழ்ந்து மறைந்த கலைஞர்கள் மத்தியில் ஒரு சிலரே காலம் கடந்து மக்கள் மத்தியில் நிலைத்து வாழ்கிறார்கள். அதிலும் தினமும் நம் இல்லங்களில் நுழைந்து பாடி எம்மை மகிழ்விப்பவர்களுள் முதன்மை நிலையில் இருக்கும் டீ எம் சௌந்த்ரராஜனுக்கு நூற்றாண்டு என்பது ஓர் எண் தான். காரணம் அவர் காலம் கடந்தும் வாழ்பவர்!


No comments: