நார்மாலை நாராயணன் - மெல்போர்ன் அறவேந்தன்

நந்தபுரி நாராயணன் கோவிலில் பெரிய திருவிழா. ஊரெல்லாம்


கூடி ஆண்டுக்கொருமுறை கொண்டாடும் அந்த விழாவில் பக்கத்து ஊர் மக்களும் இங்கு வந்து கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு இயற்கையின் சதியால் வானம் பொய்த்தது. மழையின்றி வறண்ட விளைநிலங்கள், பல இன்னல்களைத் தந்தாலும், பூசையைக் குறையின்றிச் செவ்வனே செய்ய ஊரார் முடிவு செய்தனர்.

பூசைக்கு பூமாலையைத் தவிர எல்லாம் தயார். வறட்சியால் பூக்கள் இல்லாத நிலையில் பூமாலை வேறோர் ஊரிலிருந்து தருவிக்கப்பட்டது. அதுவும் ஒரே ஒரு மாலை. ரோசாவும், சம்பங்கியும் நெருக்கமாய்க் கட்டப்பட்டு, ஆளுயர மாலை நாரயணனை வெகுவாய் அலங்கரித்தது.

அதிகாலையே கூடிவிட்ட பக்தர்களின் கூட்டம், “அடடா!, மாலை என்ன அழகு?” என வியந்து பேசினர்.

மாலையில் கட்டப்பட்ட ரோஜாப் பூக்களும், சம்பங்கிப் பூக்களும் மிகவும் பெருமைப்பட்டன. “நம்மைப் பார்த்து பாராட்டாதவர்களே இல்லை, நம் அழகுக்கு இணை ஏது?” என்று பெருமைப்பட்டுக்கொண்டன. அவை இரண்டும் மாலை தொடுக்கப்பட்ட நாரைப் பார்த்து, “நாரே எங்களைப் பிணைத்திருக்கும் நீ எங்களால் மறைக்கப்பட்டு உள்ளே இருக்கிறாயே, எங்கள் அழகு உனக்கு வருமா?” என்று கூறி கிண்டலாய்ச் சிரித்தன. நாரும் தன் பங்கிற்கு, “என்னால் தானே நீங்கள் இருவரும் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள், அதனால் மாலையின் அழகிற்கு எனக்கும் பங்குண்டு”, என்றது.

ரோஜாவும், சம்பங்கியும், “நீ என்ன சொன்னாலும் மாலையின் அழகிற்கு நாங்கள் மட்டும்தான் காரணம், ‘ரோஜாமாலை’, ‘சம்பங்கிமாலை’ என்று சொல்கிறார்களே தவிர ‘நார்மாலை’ என்று யாராவது சொல்கிறார்களா?” என்று நாரைப் பார்த்து ஏளனமாகப் பேசின.

“கடவுளே! இவர்கள் இருவரும் கேலி செய்வது உன் காதில் விழவில்லையா?” என்று நார் கண்ணீருடன் முறையிட்டது. அதற்குக் கடவுள், “உன் கடமையைச் செய், பலன் தானாகக் கிடைக்கும்” என்றார்.

காலையில் பூசை ஆரம்பித்த பின்பு, வரிசையில் வரும் பக்தர்களுக்கு அர்ச்சகர், அர்ச்சனை முடிந்ததும் சிறிது ரோஜாவையும், சம்பங்கியையும் மாலையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். மீண்டும் ரோஜாவும், சம்பங்கியும் நாரைப் பார்த்து, “பார்த்தாயா? எங்களை எப்படி பக்தியோடு மக்கள் பெற்றுச் செல்கிறார்கள். உனக்கு என்ன மரியாதை கிடைக்கிறது?” என பரிகாசம் செய்தன.

நார் மீண்டும் கவலையோடு, “இறைவா! காலையிலேயே என்னை இவர்கள் இப்படிக் கேலி செய்கின்றனரே? உமக்குப் புரியவில்லையா? நாள் முழுதும் இவர்கள் கேலிப் பேச்சை நான் எப்படித் தாங்குவேன்?” என்றது. அதைக் கேட்ட இறைவன், “நாரே முன்பு சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். நீ உன் கடமையைச் செய், பலனை எதிர்ப்பார்க்காதே!” என்றார்.

நேரமாக ஆக உச்சி நேர பூசைக்குள் மாலையில் இருந்த மலர்கள் யாவும் பறிக்கப்பட்டு மாலை வெறும் நாராகத் தொங்கியது.

அர்ச்சகர், வெகுநேரம் தாமதமாய் வந்த புகைப்படக்காரரைப் பார்த்து, “ஏம்பா காலையிலேயே வரக் கூடாதா? மாலையிலிருந்த பூக்களெல்லாம் போன பிறகு வந்தாயே! இப்போது பார், இங்கே ‘நார்மாலை நாராயணன்’ தான் இருக்கிறார்,” என்றார்.

அப்போதுதான் நாருக்குப் புரிந்தது நாராயணின் வார்த்தைகள்.

அதற்குப் பிறகு அன்று முழுவதும் பூசையிலும் சரி, அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் சரி, நாராயணன், நார்மாலை நாராயணனாகத்தான் தரிசனம் தந்தார்.

No comments: