எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 58 எழுத்தாளர் – ஊடகம் – பதிப்பகம் - உறவும் ஊடலும் ! புத்திக்கொள்முதலைப் பெறும் படைப்பாளிகள் ! முருகபூபதி

 

எழுத்தாளர்களுக்கும்  ஊடகங்களுக்கும் பதிப்பகங்களுக்கும்


மத்தியில் ஊடலும் கூடலும் சர்வசாதாரணமாக நடக்கும்.

ஒரு எழுத்தாளர் எழுதி அனுப்புவதையெல்லாம் ஊடகங்கள்              ( பத்திரிகைகள் – இதழ்கள் ) வெளியிடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதே அவற்றின் ஆசிரியர்களின் நிலைப்பாடு.

நான் இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கிய காலத்தில் ( 1970 களில் ) எழுதிய எத்தனையோ சிறுகதைகள், கட்டுரைகள் வீரகேசரியிலோ, தினகரனிலோ, சிந்தாமணியிலோ வெளியாகவில்லை. அதற்காக அந்த ஆசிரியர்களுடன் நான் கோபிக்கவும் இல்லை. முரண்படவும் இல்லை.

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு நான் அனுப்பிய நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன என்ற எனது  ஐந்தாவது சிறுகதையை வீரகேசரி வாரவெளியீட்டு ஆசிரியர் பொன். ராஜகோபால் பிரசுரிக்கவில்லை.

அதே சிறுகதையை மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா மல்லிகையில் பிரசுரித்தார். அச்சிறுகதையை வானொலி நாடகமாக நான் எழுதியபோது,  அதனை தனது சங்கநாதம் வானொலி நிகழ்ச்சியில் வி. என். மதியழகன் ஒலிபரப்பினார்.

இச்சிறுகதையும் இடம்பெற்ற எனது சுமையின் பங்காளிகள் கதைத் தொகுதிக்கு தேசிய சாகித்திய விருது கிடைத்தபோது எனது படத்துடன் வீரகேசரியில் முகப்பில் செய்தி வந்தது.

ஆசிரியர் பொன். ராஜகோபால் எனது கைபற்றிக்குலுக்கி வாழ்த்தும் தெரிவித்தார்.  எனது சிறுகதையை பிரசுரிக்காத தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன்,  விருது கிடைத்ததையறிந்து செய்தி வெளியிட்டதுடன், பிறிதொரு சந்தர்ப்பத்தில் தோளைத்தட்டி வாழ்த்துக்கூறினார்.

வீரகேசரியுடன் எனக்கு நெருக்கமான உறவு 1972 இல் ஏற்பட்டபின்னரும் எனது சிறுகதைகள் அதில் வெளியாகவில்லை. எனினும்,  1985 ஆம் ஆண்டு நான் அங்கே ஆசிரிய பீடத்தில் பணியாற்றியபோது சோவியத் நாட்டுக்கு சென்றிருந்தவேளையில்தான் எனது தேர்முட்டி என்ற சிறுகதை வாரவெளியீட்டில் பிரசுரமானது.

அச்சிறுகதை வெளியான  வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதியை மாஸ்கோவிலிருக்கும் இலங்கை தூதரகத்தின் நூலகத்தில்தான் காணநேர்ந்தது.

அதன்பின்னர் 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்


அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னர்,  நான் எழுதி அனுப்பிய சிறுகதைகளையும் கட்டுரைகளையும் தொடர் கட்டுரைகளையும்  வீரகேசரியும் தினகரனும் வௌியிட்டன. காலப்போக்கில் கொழும்பு  தினக்குரலும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஊடகங்களும் உட்பட வேறு சில இணைய இதழ்களும் வெளியிட்டு வருகின்றன.

தொடக்க காலத்தில் எனது படைப்புகளை சில  ஊடகங்கள் வெளியிடவில்லை என நான் கோபித்திருந்தால் என்ன நடந்திருக்கும்…?  நான் காணாமல்போயிருப்பேன் !

தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்கள்  எந்தவொரு அச்சு ஊடகங்களையும் நம்பியிருக்கவில்லை.  அனுப்பியும்


வெளிவராதுபோனால், ஏதாவது ஒரு இணைய இதழுக்கு அனுப்புவார்கள். அல்லது தங்கள் முகநூலில் பதிவேற்றி பகிர்ந்துகொள்வார்கள்.

இதுவரையில் நான் இங்கே தெரிவித்தது, எழுத்தாளர்களுக்கும் ஊடங்களுக்குமிடையிலிருக்கும் உறவு பற்றித்தான்.

இந்தப்பின்னணியில் நூல்களை வெளியிடும் பதிப்பகங்களுக்கும் எழுத்தாளர்களுக்குமிடையே உறவு எவ்வாறிருக்கிறது..?  என்பதையும் பார்ப்போம்.

முன்னர் அதாவது,  இந்த டிஜிட்டல் யுகம் வருவதற்கு முன்பு,  தமிழ்நாட்டில் கல்கி, ஜெயகாந்தன் , தி. ஜானகிராமன், கண்ணதாசன் முதலான எழுத்தாளர்களுக்கு அவர்களது நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் ரோயல்டி கொடுத்தன.


ஜெயகாந்தனின் சில நூல்கள் ருஷ்யமொழியில் பெயர்க்கப்பட்டு அங்கே வெளியானபோது அவருக்கு மாஸ்கோ ரோயல்டி வழங்கியிருக்கிறது.

1950 – 1980 களில் சென்னையில் சில பதிப்பகங்கள் இயங்கின.  அவற்றில் வானதி, தமிழ்ப்புத்தகாலயம், பாரி நிலையம், சரஸ்வதி, மீனாட்சி புத்தக நிலையம்,  நர்மதா,  அன்னம், கண்ணதாசன், அகரம், நியூ செஞ்சுரி புக் வுஸ்  என்பன குறிப்பிடத்தகுந்தன.  

இவற்றில் சில,  ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டன.

இலங்கையிலும் சில பதிப்பகங்கள் இயங்கின.  அவற்றுள் கொழும்பில் அரசு வெளியீடு, குமரன் பதிப்பகம், பூபாலசிங்கம் பதிப்பகம், யாழ்ப்பாணத்தில் வரதர் வெளியீடு, றஜனி  என்பன நூல்களை வெளியிட்டன.

காலப்போக்கில் சில சிற்றிதழ்களே நூல்களை வெளியிடத்தொடங்கின.  லண்டனில் தற்போது வதியும் எழுத்தாளர் பேராசிரியர் மு. நித்தியானந்தன் இல்லையென்றால்,  அவரது வைகறை வெளியீடுகளை நாம் பார்த்திருக்கமுடியாது.

பத்மநாப ஐயர் பல நூல்களின் பதிப்பாசிரியராக


இயங்கிவந்திருப்பவர். மல்லிகை ஜீவா தமது மல்லிகைப்பந்தல் ஊடாகவும் பல நூல்களை வெளிக்கொணர்ந்தவர்.

ஈழப்போர் தொடங்கியதும்  நூல் பதிப்புத்துறையில் மாற்றங்கள் நேர்ந்தன.  இந்த நீடித்தபோர்,  ஆயுத வியாபாரிகளுக்கும் அதன் விற்பனைத்  தரகர்களுக்கும் நிகர லாபத்தை தந்தது.

அதேபோன்று எழுத்தாளர்களிடமிருந்து நிகர லாபம் பெற முனைந்த பதிப்பகங்களும் உருவாகின.

ஈழத்து எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து செல்லநேர்ந்தபோது, தமது நூல்களை வெளிக்கொணருவதற்கு தமிழகத்தை நம்பியிருந்தனர்.

சென்னையிலிருந்த ஈழத்தின்  மூத்த எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், எஸ். பொன்னுத்துரை ஆகியோர் தங்கள் குமரன் பதிப்பகம், மித்ர பதிப்பகம் ஊடாக ஈழத்தில் வசித்துக்கொண்டிருந்த எழுத்தாளர்களினதும்,  புலம்பெயர்ந்து சென்றும் எழுதிக்கொண்டிருந்தவர்களின் படைப்புகளையும் தங்கள் பதிப்பகங்கள் ஊடாக வெளிக்கொணர்ந்தனர்.

தமிழ்நாட்டில் கலைஞரின் ஆட்சி மலர்ந்ததும், அவரும் எழுத்தாளராக இருந்தமையால், அங்கிருக்கும் நூலகங்கள் மூலம் நூல்கள் பெறுவதற்கு வழிவகைசெய்தார்.


சென்னை நூலக அபிவிருத்திச்சபையின் பார்வைக்கு ஒரு சில பிரதிகளை அனுப்பினால், அங்கிருக்கும் மதிப்பீட்டாளரின் கவனத்தை குறிப்பிட்ட நூல் ஈர்க்கும் பட்சத்தில் பதிப்பகங்களிடமிருந்து சுமார் 700 பிரதிகளை கொள்வனவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

இத்திட்டம் சென்னையில் புதிய  பதிப்பகங்களின் உருவாக்கத்திற்கு காரணமாகியிருந்ததுடன், நூல் வெளியீடு என்பது  லாபமீட்டும் மற்றும் ஒரு தொழிலாகவும் மாறியது.

   கல்கண்டு இதழ் ஆசிரியரும்  மர்மக்கதை எழுத்தாளருமான  தமிழ்வாணன்,  பற்பொடி முதல் பத்திரிகை வரையில் வியாபாரம் செய்வார்  “ என்று ஜெயகாந்தன் ஒரு தடவை சொன்னார். தமிழ்வாணன் பல வியாபாரங்களை செய்தவர். தென்னிந்திய இதர மொழித்திரைபடங்களை தமிழுக்கு டப் செய்தும் வெளியிட்டார்.  துணிவே துணை என்று சொல்லிக்கொண்டு, அவர் பல வர்த்தக முயற்சிகளில் துணிந்து இறங்கினார்.

அவரது துணைவியார் மணிமேகலையின் பெயரில் பதிப்பகமும் தொடங்கினார்.

மாரடைப்பு வராமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் புத்தகம் எழுதிய அவர்,  மாடைப்பு வந்துதான் மரணம் அடைந்தார்.

அவரது வாரிசுகளான லேனா தமிழ்வாணனும், ரவி தமிழ்வாணனும் தந்தையின் மறைவுக்குப்பின்னர், அவர் விட்டுச்சென்ற தொழில் துறைகளை கவனிக்கத் தொடங்கினர்.

லேனா தமிழ்வாணன் கல்கண்டு ஆசிரியராகவும் ரவி தமிழ்வாணன் மணிமேகலை பிரசுரகர்த்தாவாகவும் மாறினர்.

ஈழத்து எழுத்தாளர்களையும் புலம்பெயர்ந்து சென்ற பின்னரும் எழுதிக்கொண்டிருப்பவர்களையும் கவருவதற்காக ரவி தமிழ்வாணன் சில கவர்ச்சிகரமான திட்டங்களை வகுத்து வெளியிட்டார்.

அதனைக்கண்ட எமது எழுத்தாளர்கள் மணிமேகலை பிரசுரத்தை நாடினர்.

அலை இதழை வெளியிட்ட யேசுராசா மற்றும் அவரது நண்பர் பத்மநாப ஐயரின் முயற்சியினால், லண்டனில் வதியும் ராஜேஸ்வரி பால சுப்பிரமணியம் அவர்களின் ஒரு கோடை விடுமுறை நாவல் 1981 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அலை வெளியீடாக வெளிவந்தது.

இதன் வெளியீட்டு விழா பாம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்தபோது நிர்மலா, செ. கணேசலிங்கன் ஆகியோர் உரையாற்றினர்.  நானும் அந்த நிகழ்ச்சிக்குச்சென்று ஒரு பிரதியை வாங்கினேன். அக்காலப்பகுதியில் அந்த நாவல் மிகவும் கவனிப்புக்குள்ளானது.

இந்த நாவல் மீண்டும் 17 வருடங்களின் பின்னர் 1998 ஆம் ஆண்டு மணிமேகலை பிரசுரத்தினால் மறுபிரசுரம் கண்டது. அவ்வாறு வெளியிடும்போது இரண்டாவது பதிப்பு என பதிவு செய்யவேண்டும்.  ஆனால்,  முதல் பதிப்பு 1998  என பதிவாகியிருந்தது.

06-03-2005 இல்  கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் மணிமேகலை பிரசுரத்தின் 26 நூல்களின் வெளியீட்டு விழா நடந்தது. ஏற்கனவே வெளியான தி. ஞானசேகரனின் குருதி மலை                              ( வீரகேசரி பிரசுரம் )  புதிய சுவடுகள்  என்பன மீண்டும் முதல் பதிப்பு என்ற குறிப்புடன் மணிமேகலை பிரசுரமாக வெளியாகிறது.

1999 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் வெளியான திருமதி ஞானம் ஞானசேகரன் எழுதிய இந்து மதம் என்ன சொல்கிறது? என்ற நூல்  2005 ஆம் ஆண்டு மீண்டும் முதல் பதிப்பு என்ற விபரத்துடன் வெளியாகிறது.

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வெளியிட்ட உயிர்ப்பு கதைத் தொகுப்பில் 20 எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்திருந்தேன்.

இந்நூல் பற்றி  எஸ்.  கார்த்திகாயினி தினக்குரல் வார இதழில் எழுதியிருந்த விமர்சனக்குறிப்பின்  நறுக்கின் 20 பிரதிகளை ரவி தமிழ்வாணன் எனக்கு தபாலில் அனுப்பியதுமே நான் புரிந்துகொண்டேன்.

குறிப்பிட்ட 20 எழுத்தாளர்களையும் தூண்டில்போட்டு பிடிப்பதற்கு அவர் தாயராகிவிட்டார் என்பதுதான் எனது புரிதல். அவ்வாறு அவர் வீசிய தூண்டிலில் சிலர் சிக்கினர்.

அவர்களுக்கு தங்கள் நூல்கள் வெளிவரவேண்டும் என்பதில் இருக்கும் விருப்பம் நியாயமானது. அதனை புரிந்துகொண்ட அதே சமயம் மணிமேகலை பிரசுரத்தின் வியாபார தந்திரத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது.

2006 ஆம் ஆண்டு ( பெப்பரவரி – மார்ச் ) உதயம்  இதழில் முழுப்பக்கத்தில் ஒரு விரிவான கட்டுரையை எழுதினேன்.

அதனை இங்கே காணலாம்.

மணிமேகலை பிரசுரகர்த்தா ரவி தமிழ்வாணன், ஐரோப்பிய நாடுகளின் பயணத்தை தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கும் வருகை தந்தார்.  தனது நிகழ்ச்சி நிரலையும் அச்சிட்டு வெளியிட்டார். அவர் வீசிய வலையில் சிக்கியவர்களின் அனுபவங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு இருக்கவில்லை.

ஈழத்து எழுத்தாளர்களும், புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களும் தமது படைப்புகளை நூலுருவில் வெளிக்கொணர்வதற்கு மேற்கொள்ளும் பிரயத்தனங்களில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்துள்ளனர். தமது புத்திக்கொள்முதல் பற்றி வெளியே சொல்பவர்கள் சிலர். சொல்லாமல் மறைப்பவர்கள் வேறு சிலர்.

தமிழக எழுத்தாளர்கள் – பதிப்பாளர்களின் உறவிலும்  இதுதான் நிலைமை.

பதிப்பாளர்களினால் ஏமாற்றப்பட்ட பல எழுத்தாளர்களின் புலம்பல்களையும், அதே சமயம் எழுத்தாளர்களினால் வஞ்சிக்கப்பட்ட பதிப்பாளர்களையும் அறிவேன்.

இலக்கிய பதிப்புலகம் ஆரோக்கியமாக இல்லை என்பது மாத்திரம் உண்மை.

தமிழ்நாடு உயிர்மை பதிப்பகத்தின் மூலம் தனது நூல்களை வெளிக்கொணர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், காலப்போக்கில் தேசாந்தரி பதிப்பகம் என்ற பெயரில்,  தானே புதிய பதிப்பகம் தொடங்கியதற்கும் காரணங்கள் இருக்கின்றன.

இவ்வாறு பல செய்திகளை சொல்லிக்கொண்டே செல்லலாம்.

நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,  எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம் என்ற அமைப்பினை உருவாக்கி சில நூல்களை வெளியிட்டது. இந்த அமைப்பும் பின்னர் மறைந்தது.

மல்லிகைப்பந்தல் பதிப்பகம், மல்லிகை ஜீவாவுடன் முடிவுக்கு வந்தது.

சென்னையில் எஸ். பொ. வின் மித்ர பதிப்பகம் எஸ்.பொ. வின் மறைவுடன் முடிவு கண்டது.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தற்போது தமிழகத்திலும் இலங்கையிலும் புதிய புதிய பதிப்பகங்களை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தப்பின்னணிகளுடன் சென்னையில் ஆண்டுதோறும் புத்தக சந்தை நடந்துவருகிறது.

இணையம் வந்தபின்னர் ஈ புக் நடைமுறைக்கு வந்துவிட்டது.

நானும் எனது நூல்கள் சிலவற்றை சமகாலத்தில் ஈ புக் வடிவத்தில் வெளியிட்டுவிட்டேன்.

அவை: யாதுமாகி, வாழும் வரலாறு மல்லிகை ஜீவா,  பாரதி தரிசனம்,  நடந்தாய் வாழி களனி கங்கை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Mystique of Kelani River என்பன. இவற்றை அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்கமுடியும்.

இவ்வாறு ஈ புக்கில் படிக்கும் வாசகர்களின் அனுபவங்களையும் கேட்டு பதிவுசெய்யவேண்டும் என்ற விருப்பமும் எனக்குண்டு. இதுபற்றி இனிவரும் அங்கங்களில் பேசலாம்.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: