உலகச் செய்திகள்

 இம்ரானின் பிடியாணை ரத்து

அமெரிக்க வான் தாக்குதலில் ஈரானிய ஆதரவாளர்கள் பலி

வெளியேற்றிய குடியேறிகள் மீள் திரும்ப இஸ்ரேல் அனுமதி

சிரியாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

வட கொரியா கடலுக்கடியில் ஆளில்லா ட்ரோன் சோதனை

ஜப்பானும் தென் கொரியாவும் 12 வருடங்களின் பின் மாநாடு

சிரியா–சவூதி இடையே தூதரக செயற்பாடுகள்


 இம்ரானின் பிடியாணை ரத்து

Monday, March 20, 2023 - 6:00am

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான பிடியாணையை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று இரத்துச் செய்துள்ளது.

அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸாருக்கும் ஆதரவாளர்களுக்கு மிடையே தொடர்ந்து மோதல் இடம்பெற்று வந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபத் உயர் நீதிமன்றத்திற்கு அருகிலும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து அவர்கள் மீத கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கான் கைதாவதை தவிர்க்க லாஹூரில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களின் பாதுகாப்புடன் இருந்து வருகிறார். இந்நிலையில் வரும் 30ஆம் திகதி இடம்பெறும் விசாரணைக்கு ஆஜராகும்படி இம்ரான் கானுக்கு உத்தரவிட்டு இஸ்லாமாபாத் நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை (18) இடம்பெற்ற வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

பிரதமர் பதவியில் இருந்தபோது கிடைத்த அன்பளிப்புகளை விற்றதாகவே இம்ரான் கான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.   நன்றி தினகரன்  






அமெரிக்க வான் தாக்குதலில் ஈரானிய ஆதரவாளர்கள் பலி

கிழக்கு சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் ஈரான் ஆதரவு போராளிகள் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் அமெரிக்க ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்டு ஐந்து அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததை அடுத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு சிரியாவில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படையுடன் தொடர்புபட்ட குழு ஒன்றினால் பயன்படுத்தப்படும் தளம் ஒன்றின் மீது துல்லியமான விமானத் தாக்குதல் நடத்த ஜனாதிபதி ஜோ பைடனின் வழிகாட்டலில் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய புரட்சிப் படை ஈரான் இராணுவத்தில் ஓர் அங்கம் என்பதோடு அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் உள்ளது.

ஈரான் புரட்சிப் படையுடன் தொடர்புபட்ட குழுக்களால் சிரியாவில் கூட்டுப்படைக்கு எதிராக அண்மையில் நடத்தப்பட்ட தீவிர தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒஸ்டிக் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சியுள்ள இஸ்லாமிய அரசுக்கு குழுவுடன் போராடுவதற்காக நூற்றுக்கணக்கான அமெரிக்க துருப்புகள் தொடர்ந்தும் சிரியாவில் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





வெளியேற்றிய குடியேறிகள் மீள் திரும்ப இஸ்ரேல் அனுமதி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 2005 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட நான்கு சட்டவிரோத குடியேற்றங்களுக்கு இஸ்ரேலிய பிரஜைகள் மீண்டும் திரும்புவதை அனுமதிப்பதற்கு இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த குடியேற்றங்கள் பலஸ்தீனர்களின் தனிப்பட்ட காணியில் கட்டப்பட்டவை என்று இஸ்ரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டமூலத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் வெளியாகியுள்ளது.

இதனை செயற்படுத்துவதற்கு இஸ்ரேலிய இராணுவத் தளபதி கையெழுத்திட வேண்டி உள்ளது.

இது முஸ்லிம்களின் ரமழான் மாதத்தில் பலஸ்தீனர்களுடனான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ஒன்றாக உள்ளது.   நன்றி தினகரன் 





சிரியாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக அலெப்போ விமானநிலையத்தின் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பொருட்சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக சிரிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

லடக்கியா நகரக் கடற்கரையின் மேற்காக மத்தியதரைக் கடலில் இருந்து நேற்று (22) அதிகாலை 3.55 மணி அளவில் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசியதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மத்தியதரைக் கடலுக்கு மேலால் பறந்தபோதே சிரியாவின் மிகப்பெரிய நகரும் முன்னர் வர்த்தக மையமாகவும் இருந்த அலெப்போ மீது ஏவுகணைகளை வீசி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த புதிய தாக்குதல் பற்றி கருத்துக் கூற இஸ்ரேல் மறுத்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவிகள் வரும் பிரதான வழியாக அலெப்போ சர்வதேச விமானநிலையம் உள்ளது. கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி இடம்பெற்ற பூகம்பத்தில் துருக்கியுடன் சிரியாவும் மோசமாக பாதிக்கப்பட்டது.

சிரியா மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதல்களை நடத்திபோதும் மிக அரிதாகவே அதற்கு பொறுப்புக் கோருகிறது. ஈரான் ஆதரவு ஆயுதங்கள் குவிக்கப்படுவது மற்றும் தரப்புகளை இலக்கு வைத்தே தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஈரான் ஆதரவு தரப்பினர் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






வட கொரியா கடலுக்கடியில் ஆளில்லா ட்ரோன் சோதனை

கடலுக்கடியில் தாக்குதல் நடத்தக்கூடிய ஆளில்லா ட்ரோனை சோதித்துப் பார்த்திருப்பதாக வட கொரியா கூறியுள்ளது. அந்த ஆளில்லா ட்ரோன் அணுவாயுத ஆற்றல் கொண்டதாகும்.

எதிரி நாட்டுக் கப்பல்கள் அல்லது துறைமுகங்களைக் குறிவைத்து நீருக்கு அடியிலிருந்தவாறு புதிய ஆயுதத்தால் தாக்க முடியும்.

வட கொரிய அரசாங்க ஊடகமான கே.சி.என்.ஏ புதிய ஆயுதம் சோதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. அதன் அணுவாற்றல் எத்தகைய தன்மைகொண்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எனினும் கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீற்றர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன் அணுசக்தி போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.

வட கொரியா போர் கப்பல் ஏவுகணைகளையும் கடந்த புதன்கிழமை பாய்ச்சியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பியோங்யாங்கைக் குறிவைத்து நடத்தப்படும் இராணுவப் பயிற்சிகளை எதிரி நாடுகள் நிறுத்த வேண்டும் என்று அது கூறியது.

அத்தகைய பயிற்சிகளை எச்சரிக்கும் விதமாகவே ஆயுதங்கள் சோதிக்கப்படுவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கூறினார்.

ஏவுகணையின் முனையில் பொருத்துவதற்கு ஏற்ப மிகப் பெரிய அணுவாயுதங்களைச் சிறியதாக உருவாக்குவதில் வட கொரியா முன்னேறிவருவதாகத் தென் கொரியா குறிப்பிட்டது.   நன்றி தினகரன் 





ஜப்பானும் தென் கொரியாவும் 12 வருடங்களின் பின் மாநாடு

உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் வேகமான இராஜதந்திர நகர்வுகளின் பின்புலத்தில் ஜப்பானும் தென் கொரியாவும் 12 வருடங்களின் பின்னர் முதன் முறையாக உச்சி மாநாடொன்றை நடத்தியுள்ளன.

இம்மாநாட்டின் போது இராஜாந்திர நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தங்களது உறவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.

இம்மாநாட்டைத் தொடர்ந்து தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்–யோல் கூறுகையில், “கொரியா–ஜப்பான் உறவுகளை கவனிக்காமல் நேரத்தை வீணடிக்க முடியாது” என்றுள்ளார்.

மேலும், உயர் தொழில்நுட்ப பொருட்கள் தொடர்பில் சுமார் நான்கு ஆண்டுகாலம் நீடித்த சர்ச்சையை கைவிட ஜப்பானிய பிரதமரும் தென் கொரிய ஜனாதிபதியும் ஒப்புக்கொண்டுள்ளதோடு ஆழமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படவும் உறுதியளித்துள்ளனர். ஜப்பானும் தென்கொரியாவும் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இம்மாநாட்டை நடாத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 







சிரியா–சவூதி இடையே தூதரக செயற்பாடுகள்

சவூதி அரேபியாவும் சிரியாவும் அவற்றின் தூதரகங்களை மீண்டும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளன.

பதினொரு ஆண்டுகளாக இரு நாடுகளின் உறவில் விரிசல் நீடித்தது.

நோன்பு மாதத்துக்குப் பின் தூதரகங்களை மீண்டும் திறக்க அவை திட்டமிட்டுள்ளதாய் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இரு நாடுகளின் துணைத் தூதரகச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதை சவூதி அரேபிய அரசாங்கத் தொலைகாட்சி உறுதிப்படுத்தியது.

சவூதி அரேபியாவும் ஈரானும் அவற்றின் உறவைச் சீர்ப்படுத்தும் முக்கிய உடன்பாட்டில் 2 வாரங்களுக்கு முன்னர் கையெழுத்திட்டன. பரந்த அரபு வட்டாரத்துக்குச் சிரியா மீண்டும் திரும்பத் தூதரகச் செயல்பாடுகள் வழியமைத்துத்தரும்.

உள்நாட்டுப் போருக்கு இடையே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அஸாத் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதைக் கண்டித்து 2011ஆம் ஆண்டு அரபு லீக், சிரியாவைத் தற்காலிகமாக விலக்கி வைத்தது.   நன்றி தினகரன் 






No comments: