இலங்கையில் ஊடகவியலாளருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுமா..? அவதானி


கடந்த காலங்களில் இலங்கை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த 250 பேருக்கும் மேற்பட்ட முன்னாள் எம். பி. க்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இச்செய்தியானது,  உயிரோடு இருக்கும் முன்னாள் எம். பி.க்கள், மற்றும் மறைந்துவிட்ட எம். பி. க்களின் மனைவிமாருக்கு இனிப்பான செய்திதான். சந்தேகமில்லை !

ஒரு பாராளுமன்ற பிரதிநிதி பெறும் மாதாந்த ஊதியம், ஒவ்வொரு


பாராளுமன்ற அமர்வுக்கும் அவர் பெறும் வேதனம், போக்குவரத்துக்காக பிரத்தியேக  வாகனம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு,  கொழும்பில் தங்குமிட இல்லம், இவை தவிர வருடாந்தம்  பன்முக வரவு – செலவுத்திட்டத்தின்போது  அவருடைய தொகுதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதி… தனது பதவி  சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சிடல், மற்றும் பிரதியெடுத்தல் முதலான செலவீனங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி என்பன எவ்வளவு என்பது பற்றிய முழுமையான விபரங்களை, அவரை தமது பொன்னான வாக்குகளினால், பாராளுமன்றம் அனுப்பும் வாக்காளர் பெருமக்கள் தெரிந்துகொள்வதில்லை.

அதேபோன்று அரசில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பெறும் வருமானம் பற்றியும் மக்கள் தெரிந்துகொள்வதில்லை.

ஆனால்,  அந்த வருமானங்கள் அனைத்தும் மக்களிடமிருந்து


பெறப்படும் வரியிலிருந்தும் வர்த்தக நிறுவனங்கள் செலுத்தும் வரியிலிருந்தும்,  சர்வதேச நாணய நிதியம், மற்றும் வெளிநாட்டு கடன் உதவிகளிலுமிருந்துமே  வழங்கப்படுகின்றன.

ஒருவர், பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் வைத்திருந்த சொத்து மதிப்பு, அவர் அங்கே சென்றபின்னர் எவ்வாறு உயர்கிறது..? என்பது பற்றியும் மக்கள் அறிந்துகொள்வதில்லை.

ஆனால், அவர்கள் மக்களின் பிரதிநிதிகள் எனத்தான் காலம் காலமாக அழைக்கப்படுகிறார்கள்.

இந்தப்பின்னணிகளுடன்தான் பாராளுன்ற முன்னாள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியமும் கிடைக்கவிருக்கிறது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

இவர்கள் பற்றிய செய்திகளை பக்கம் பக்கமாக எழுதி இவர்களிள் இருப்பை வெளியுலகிற்கு,  குறிப்பாக மக்களுக்கு தெரிவித்துவரும் ஊடகவியலாளர்கள் பற்றி, என்றைக்காவது இந்தப் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தியிருக்கிறார்களா..?

இலங்கையில் இதுவரையில் எத்தனை ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ?  எத்தனை பேர் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றனர்? எத்தனைபேர்  காணாமலாக்கப்பட்டுள்ளனர்..? எத்தனைபேர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டே வெளியே சென்றுவிட்டனர்..? என்பதாவது அவர்களுக்குத்  தெரியுமா..?

எமது தாயகத்தில்  பெரும்பாலான பெரிய பத்திரிகை நிறுவனங்கள்  செல்வந்தர்களின் வசம் இருக்கிறது.  இரவு பகலாக உழைத்து தாங்கள் பணியாற்றும் பத்திரிகைகளுக்கு எழுதித்தள்ளும் ஊடகவியாலளர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறிருக்கிறது?

இன்றைய செய்தி, நாளைய வரலாறு எனச்சொல்லிக்கொள்வோம்.  இன்று இலங்கையில் அடிக்கடி வேலை நிறுத்தங்கள் நடக்கின்றன.  அத்தியாவசிய வேலைகளில் ஈடுபடும் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால்,  அவர்களின் பதவி பறிக்கப்படும் என்றுதான் ஆளும் அதிகார வர்க்கம் சொல்லிவருகிறது.

அவ்வாறாயின் அத்தியாவசிய ஊடகத் தொழிலில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் ஒரு நாள் முழுமையாக  தங்கள் தொழிலை செய்யாமல் விட்டால் என்ன  நடக்கும்?

ஊடகம் என்பது பத்திரிகை மட்டுமல்ல, வானொலி, தொலைக்காட்சி, இணைய இதழ்கள் அனைத்தும் இதில் அடக்கம்.

இங்கு பணியாற்றுபவர்கள் வயது முதிர்வினால், வீட்டுக்கு அனுப்பப்படும்போது அவர்களின் சேமலாப நிதி மாத்திரமே               ( அதுவும் இருந்தால்தான்-  இலங்கையில் சில பத்திரிகை நிறுவனங்கள் முன்னர் இந்த சேமலாப நிதியை சரியாக நிருவகிக்கவில்லை என்ற செய்தியும் உண்டு  ) சிறிது காலத்திற்கு அவர்களின் குடும்பத்திற்கு உதவும்.

பணிமுடிந்து வெளியேறியவர்கள், அல்லது வெளியேற்றப்பட்டவர்களின் வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது.

முன்னர் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் சில சலுகைகளையும் வசதிகளையும் செய்து கொடுத்தார் என்பதை மறந்துவிட முடியாது.

அவர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகவுமிருந்தவர்.  அதனால் மாளிகாவத்தை மற்றும் பம்பலப்பிட்டி தொடர் மாடிக்குடியிருப்புகளில் சில ஊடகவியலாளர்களுக்கு வீட்டு வசதியை வழங்கினார்.

அத்துடன் மருதானையில் அமைந்திருந்த டவர் சினிமா அரங்கினை சுவீகரித்து, டவர் பவுண்டேசன் என்ற நிருவாகக் கட்டமைப்புக்குள் அதனை  கொண்டு வந்ததுடன் இசை, நாடக கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து கொடுத்தார்.

அவர் பிரதமராக பதவி வகித்த காலத்தில்,  பிரபல சிங்கள சினிமா நடிகையான ருக்மணி தேவி ஒரு வாகன விபத்தில் கொல்லப்பட்டதையடுத்து அவரது நினைவாக ஒரு இல்லத்தையும் நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைத்தார்.  அதனை அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா திறந்து வைத்தார்.

இவ்வாறு கலைஞர்களின் குரலுக்கு செவிசாய்த்து வந்திருக்கும் ரணசிங்க பிரேமதாசவும் ஒரு எழுத்தாளர்தான். சில  நூல்களையும் எழுதியிருக்கிறார்.

தற்போது ஜனாதிபதி பதவியிலிருக்கும் ரணில் விக்கிரமசிங்காவின் தந்தையார் எஸ்மண்ட் விக்கிரமசிங்காவும் இலங்கையில் பிரபல பத்திரிகையாளர்தான்.  இவர் ஏரிக்கரை (Lake House) பத்திரிகை நிறுவனத்தில் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர். அத்துடன் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்திலும் சிறிது காலம் நிருவாகப்பணிப்பாளராக விளங்கியவர்.

எனவே அவரது செல்வப்புத்திரன் இன்றைய ஜனாதிபதி அவர்களுக்கு ஊடகவியாலாளர்களின் கடின உழைப்பு – அவர்கள் சந்தித்துவரும் சவால்கள், வலிகள் என்பன நன்கு தெரிந்திருக்கும்.

மக்களின் வாக்குகளினாலும், அதே மக்களின் வரிப்பணத்தினாலும் பாராளுமன்ற எம்.பி.க்கள் என்னும் அடையாளத்தை பெற்றுக்கொள்ளும் பிரதிநிதிகள், இந்தப் பதிவில் மேற்சொல்லப்பட்ட  சகல வசதி வாய்ப்புகளையும் சலுகைகளையும் பெற்று உல்லாசமாக வாழ்ந்துவிட்டு, தேர்தலில் தோல்வி கண்டோ, அல்லது வேறு ஏதும் காரணத்தினாலோ இளைப்பாறும்போது  ஓய்வூதியம் பெறுகிறார்கள்.

ஆனால், இவர்களின் இருப்பை உலகத்திற்கு காண்பித்து வந்த ஊடகவியலாளர்கள் தமது பதவியிலிருந்து விலகும்போது வெறுங்கையுடன் வெளியேறுகிறார்கள்.

இலங்கையில் சில  உழைக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள் இருக்கின்றன. அத்துடன் தற்பொழுது உயர் தரப்பாடசாலைகளிலும் , கல்லூரிகள், பல்கலைக்கழங்களிலும் ஊடக கற்கை நெறி நடக்கிறது.

இங்கிருந்து பல  ஆற்றல் மிக்க ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் வருவார்கள்.  அவர்களும் இந்த பாராளுமன்ற பிரதிநிதிகளின் இருப்பினை ஊடகங்களில் பதிவேற்றுவார்கள்.

தங்களுக்காகவும் தேசத்திற்காகவும் உழைத்துவரும் ஊடகவியலாளர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அரசு முன்வரல் வேண்டும்.

நீண்ட காலம் அதாவது  சுமார் கால் நூற்றாண்டு காலமாவது தொடர்ந்து ஊடகத்துறையில் பணியாற்றிய செய்தியாளர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக ஆராய்தல் வேண்டும். உழைக்கும் பத்திரிகையாளர் சங்கங்களும் இதுவிடயத்தில், ஜனாதிபதியுடனும் ஊடகத்துறை அமைச்சருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடல் வேண்டும்.

---0--

 

 

 

No comments: