வடகொரியா 2017 இன் பின் மிகப்பெரிய ஏவுகணை வீச்சு
உக்ரைன் பதற்றம்: போலி தகவல்களை சித்தரிப்பதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தான் மீதான தடையை நீக்க ஐரோப்பா மறுப்பு
சூக்கி மீது புதிய குற்றச்சாட்டு
பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்தின் நான்கு ஊழியர்கள் இராஜினாமா
பல நாள் மீட்புப் பணிகளின் பின் மீட்கப்பட்ட 5 வயது மொராக்கோ சிறுவன் மரணம்
வடகொரியா 2017 இன் பின் மிகப்பெரிய ஏவுகணை வீச்சு
வட கொரியா 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மிகப்பெரிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
ஒரு இடைநிலை ஆயுதம் என நம்பப்படும் இந்த ஏவுகணை நேற்று ஜப்பான் கடலில் விழுவதற்கு முன்னர் 2,000 கிலோமீற்றர் பாய்ந்துள்ளது.
வட கொரியா இந்த மாதத்தில் நடத்தியுள்ள ஏழாவது ஏவுகணை சோதனையாக இது உள்ளது. இதற்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளன.
வட கொரியா பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மேற்கொள்வதற்கு ஐ.நா தடை இருப்பதோடு அந்த நாட்டின் மீது தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
உக்ரைன் பதற்றம்: போலி தகவல்களை சித்தரிப்பதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு
ரஷ்யாவைத் தாக்குவதுபோல் கொள்கைப் பிரசாரத்தைக் கொண்ட போலி வீடியோவை தயாரிக்கத் திட்டமிடுவதாக ரஷ்யா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
வீடியோவில் இடம்பெறும் இராணுவப் பொருட்கள், உக்ரைன் அல்லது அதன் நட்பு நாட்டைச் சேர்ந்ததுபோல் சித்தரிக்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஜோன் கிர்பி குறிப்பிட்டார்.
அந்த வீடியோவை வெளியிட்டு, அதற்குப் பதிலடியாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கத் திட்டமிடுவதாகவும் அவர் கூறினார்.
இதில் உக்ரைன் போர் பதற்றத்திற்கு உயிரிழப்புகளைக் காட்டும் சித்தரிக்கப்பட்ட தாக்குதல் படங்களைக் கொண்டு, ஒரு போலித் தாக்குதலை நடத்துவது மற்றும் படமாக்குவதை ரஷ்யா திட்டமிடுவதாக கூறப்படுகிறது. ரஷ்ய-உக்ரைனிய விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உளவுத் தகவல்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் தூண்டுதல்களைக் கோடிகாட்டி அதன் ஆபத்தான பிரசாரத்தைத் தொடரவிடாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.
எனினும் தாம் எந்த போலியான தகவலை வெளியிடவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகில் ரஷ்யா படைகளை குவித்திருப்பது தொடர்பிலேயே அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்புகள் கவலை அடைந்துள்ளன.
எனினும் ஆக்கிரமிப்பு தொடுப்பதான கூற்றை மறுக்கும் ரஷ்யா அங்கு இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறது. தற்போது எல்லையில் சுமார் 100,000 துருப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
உக்ரைனின் தெற்கு கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா தனது நாட்டுடன் இணைத்து எட்டு ஆண்டுகளின் பின்னரே தற்போதைய பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் ரஷ்யா ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. நன்றி தினகரன்
பாகிஸ்தான் மீதான தடையை நீக்க ஐரோப்பா மறுப்பு
பாதுகாப்பு விடயங்களைக் கவனத்தில் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு சேவையில் ஈடுபட பாகிஸ்தானின் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றிய முகவரகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
“பாகிஸ்தான் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்க முன்னர் அது தொடர்பில் மதிப்பீடு செய்யப்படுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நன்றி தினகரன்
சூக்கி மீது புதிய குற்றச்சாட்டு
மியன்மார் இராணுவ அரசாங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூக்கி மீது கையூட்டுக் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளது. தனது தாயின் பெயரில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுக்காக 550,000 டொலர் நன்கொடையை பெற்றதாகவே பொலிஸார் புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இது தொடர்பான வழக்கு ஆரம்பிக்கப்படும் விபரம் தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து அவர் எதிர்நோக்கும் 11ஆவது ஊழல் குற்றச்சாட்டு இதுவாக உள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சூக்கி குறைந்தது 150 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம்.
தற்போது இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தூண்டியது, வைரஸ் தொற்றுக் கட்டுப்பாடுகளை மீறியது, தொலைத்தொடர்புச் சட்டத்தை மீறியது ஆகியவற்றுக்காக அவருக்கு ஆறாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்துவ இரகசியச் சட்டம் உட்பட ஏனைய ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்தின் நான்கு ஊழியர்கள் இராஜினாமா
பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலகத்தைச் சேர்ந்த 4 முக்கிய ஊழியர்கள் பதவி விலகியுள்ளனர்.
கடந்த ஓராண்டாகத் தலைமை ஊழியர் பதவியை வகித்த டான் ரோசன்பில்ட் அவர்களில் ஒருவர்.
டவுனிங் ஸ்ட்ரீட்டில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தபோது, அலுவலக ஊழியர்களை வரவழைக்கும் மின்னஞ்சலை அனுப்பியிருந்த ஜோன்சனின் மூத்த பிரத்தியேக செயலாளர் மார்டின் ரேய்னால்ட்ஸும் பதவி விலகியுள்ளார்.
இணைப்பு பணிப்பாளர் ஜக் டொய்லும் கொள்கை பிரிவின் தலைவர் முனிரா மிர்ஸாவும் அவ்வாறே செய்துள்ளனர்.
மிர்ஸா, 2008இல் ஜோன்சன் லண்டன் மேயராக இருந்தது முதலே, அவருடன் பணியாற்றி வந்தவர்.
அவரது பதவி விலகல் அரசாங்கம் சீர்குலைவதற்கான அறிகுறி என்று, ஜோன்சனின் முன்னாள் மூத்த அதிகாரி டொமினிக் கம்மிங்ஸ் சாடினார்.
பிரிட்டனில் முடக்கநிலையின்போது டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதற்காகத் ஜோன்சன் பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்துவருகிறது. நன்றி தினகரன்
பல நாள் மீட்புப் பணிகளின் பின் மீட்கப்பட்ட 5 வயது மொராக்கோ சிறுவன் மரணம்
- என்னை தூக்குங்கள் என கூறிய ரயன், 100 அடி ஆழ் துளை கிணற்றில் 4 நாட்களின் பின் முழு உலகையும் ஏமாற்றியவாறு விடை பெற்றான்
மொராக்கோவில் கடந்த நான்கு நாட்களாக 32 மீற்றர் ஆழ (100 அடி) கிணற்றில் நிலத்தடியில் சிக்கியிருந்த 5 வயது சிறுவன் ரயன் அவ்ரம் (Rayan Awram), நீண்ட மீட்பு முயற்சியைத் தொடர்ந்து முழு உலகையும் ஏமாற்றியவாறு உயிரிழந்துள்ளான்.
நேற்றையதினம் (05) சனிக்கிழமை சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவன் மரணமடைந்த செய்தியையே வைத்தியசாலை அறிவித்துள்ளது.
அந்த வகையில் 4 நாட்களாக ஆழ் துளை கிணற்றில் சிக்கிய ரயன் உயிரிழந்துவிட்டதாக மொராக்கோ மன்னரின் அரண்மனை உறுதி செய்துள்ளது.
மொராக்கோ மன்னர் ஆறாம் மொஹம்மட், சிறுவனின் பெற்றோர்களான கலீத் அவ்ரம் மற்றும் வசிமா கெர்ஷீஷ் ஆகியோருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து சிறுவனின் சோகமான மரணம் குறித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளதாக, அரண்மனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வலிமிகுந்த சந்தர்ப்பத்தில் முழு உலகின் கவனத்தை ஈர்த்த ஆபத்தான பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினரின் அயராத முயற்சிகள், கூட்டுச் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு மொராக்கோ குழுக்கள் மற்றும் குடும்பங்களின் வலுவான ஆதரவிற்காக மன்னர் மொஹம்மத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (01) Chefchaouen அருகே உள்ள மலைப்பாங்கான பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனான ரயன் குறித்த ஆழ் துளைக் கிணற்றில் திடீரென வீழ்ந்துள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணாத நிலையில், சிறிய அழு குரல் சத்தமொன்று கேட்ட இடத்தை நோக்கி பார்த்த போது அது குறித்த துளையிலிருந்து வருவதை அவதானித்த சிறுவனின் உறவினர் ஒருவர், அவரது கையடக்கத் தொலைபேசியின் ஒளியை பயன்படுத்தி அதனை உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரயனை மீட்க 24 மணி நேரமும் இரவு பகலாக மீட்புப் பணிகள் தொடர்ந்தவாறு இருந்தன.
குறித்த கிணற்றில் வீழ்ந்தவுடன் தன்னை தூக்குமாறு குறித்த சிறுவன் அழுததாக, அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாறைகள் மற்றும் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக மீட்பு பணி தொடர்ந்து தாமதமாகி வந்தது.
முன்னதாக, இது தொடர்பான முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியதாக மன்னர் அறிவித்திருந்தார்.
இதேவேளை ரயன் அவ்ரமை மீட்ட மீட்பாளர்களும், மருத்துவக் குழுவும் சுரங்கப்பாதையில் இருந்து வெளிவரும்போது, அதை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நேரடியாக வீடியோ காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறுவன் மீட்புக்காகத் தோண்டப்பட்ட சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்த பிறகு மஞ்சள் போர்வையால் போர்த்தப்பட்டான், உடனடியாக அம்புலன்ஸ் மூலம் ஹெலிகொப்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதன் பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வெறும் 45 சென்டிமீட்டர்கள் (18 அங்குலம்) விட்டத்தைக் கொண்ட இந்த கிணற்றிலிருந்து ரயனை அடைவது மிக கடினமாக இருந்தது. அதை விரிபபடுத்துவது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது. எனவே அதற்கு அருகில் ஒரு பரந்த சரிவான வடிவில் தோண்டி அதற்கு அருகில் அடைந்து தோண்டி ரயனை மீட்பதே முழுப் பணியுமாக அமைந்திருந்தது.
இப்பிரதேசதம் பாறை மற்றும் மணல் பாங்கான கலவையால் மிகவும் சிக்கலான இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் பொறியாளர்கள், நில அளவையாளர்கள் என பல்வேறு தரப்பினர் பங்குபற்றியிருந்தனர்.
ஆரம்பத்தில் மீட்புக் குழுவினர் சிறுவனுக்கு ஒட்சிசன் மற்றும் தண்ணீர், அவரை கண்காணிக்க கெமரா ஆகியவற்றை கயிற்றின் ஆதாரத்துடன் கீழே அனுப்பியிருந்தனர். சிறுவன் நீரை அருந்துவது, சுவாசிப்பது உள்ளிட்ட விடயங்கள் வீடியோ காட்சிகள் மூலம் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை காலை, மீட்புக் குழுவின் தலைவர் அப்தெல்ஹாடி தம்ராணி தெரிவிக்கையில், “இந்நேரத்தில் குழந்தையின் நிலை தொடர்பில் தீர்மானிக்க முடியாதுள்ளது. ஆனால் குழந்தை உயிருடன் இருப்பதாக நாம் கடவுளிடம் நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் உடல்நிலையை கண்டறிவது கடினம் என்று தம்ராணி கூறினார், ஏனெனில் கிணற்றின் கீழே இறக்கப்பட்ட கெமராவில் அவர் பக்கவாட்டில் கிடப்பதைக் காணக்கூடியதாக இருந்தது, ஆனால் நாம் அவரை உயிருடன் மீட்போம் என்று நாம் நம்புகிறோம்" என்று கூறினார்.
இதேவேளை, செவ்வாய்கிழமை மாலையில் இருந்து சிறுவனுக்கு தொடர்ந்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதை செஞ்சிலுவைச் சங்கம் உறுதி செய்திருந்தது.
மீட்புக் குழுவினர், புல்டோசர்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் சிறுவன் சிக்கியிருக்கும் ஆழத்திற்கு அதனைச் சூழவிருந்த பிரதேசத்தை தோண்டி அகற்றிய பின்னர், சிறுவன் இருக்கும் இடத்தை நோக்கி கைகளால் கிடையாக தோண்டியே அவனை அடைந்துள்ளனர்.
இதன்போது அவர்கள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்கொண்டிருந்ததோடு, நேற்றையதினம் அவர்களின் வழியைத் தடுத்திருந்த ஒரு பெரிய பாறையைச் சுற்றியும் அவர்கள் அகழ வேண்டியிருந்தமையம் குறிப்பிடத்தக்கது
"என் குழந்தை உயிருடன் கிணற்றில் இருந்து வெளியேறும் என்று நான் நம்புகிறேன்," என்று ரயனின் தந்தை கடந்த வெள்ளிக்கிழமை மாலை 2M எனும் தொலைக்காட்சிக்கு அறிவித்திருந்தார். "சம்பந்தப்பட்ட அனைவருக்கும், மொராக்கோ மற்றும் ஏனைய அனைத்து இடங்களிலும் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்." என அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குறித்த கிணறை சரிசெய்து கொண்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இச்செய்தியை அறிந்ததிலிருந்து முழு உலகிலுமுள்ள சமூக வலைத்தள ஆர்வலர்களும் #SaveRayan எனும் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களது பிரார்த்தனைகளையும், ஆதரவையும் வெளியிட்டு வந்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த பகுதியல் கூடி, அந்த இடத்தைச் சுற்றி முகாமிட்டு, மீட்புப் பணியாளர்களை ஊக்குவிப்பதற்காக கைதட்டி, மதப் பாடல்களைப் பாடி வந்ததோடு, பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment