இசைக் குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் காலமாகிவிட்டார் - செ பாஸ்கரன்

 .

லதா மங்கேஷ்கர் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி மனதை ஆழமாக பாதித்திருக்கிறது. அற்புதமான குரல் வளம் நிறைந்த ஒரு பாடகி கொரோனா நோய் தாக்கத்தினால் இன்று அவரது 92வது வயதில் 06.02.2022 உயிரிழந்திருக்கிறார். லதா மங்கேஷ்கர் அவர்கள் 28 செப்டம்பர் 1929ஆம் ஆண்டு பிறந்தவர், ஒரு புகழ் பெற்ற பாடகியாக , மாநிலங்களவை உறுப்பினராகவும் இந்தியாவின் இசைக்குயில் என்றும் பல பரிமாணங்களை பெற்றவர்.

இந்திய நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற ஒருவர். 60 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பாடியவர். இவருடைய பாடல்களைக் கேட்கும்போது காற்றில் மிதந்து செல்வது போல் இருக்கும். நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலே பல இந்தி பாடல்கள் அறிமுகமானதே லதா மங்கேஷ்கர் உடைய அந்த அற்புதமான மயக்கும் குரல் என்றால் அது மிகையாகாது. அபிமான் என்ற திரைப்படத்தில் பாடிய "பியா பீனா பியா பீனா" என்ற ஒரு பாடல் ஆண், பெண், இளைஞர்கள் , யுவதிகள் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோர் மனதையும் கட்டிப்போட்ட ஒரு பாடல். அந்த பாடலை கேட்ட எத்தனையோ பேர் அந்த பாடலை கேட்ட பின் லதா மங்கேஷ்கர் உடைய பாடல்கள் எல்லாம் தேடித்தேடி அலைந்த காலங்கள் எங்கள் நாட்டிலே இருந்தது.அவர் முதன்முதலாக பாடியது ஒரு மராட்டிய பாடல் ,அதன்பின்பு ஹிந்தி தமிழ் என்று எல்லா மொழிகளிலுமே பாடி இருக்கின்றார். பாரத ரத்னா விருது 2007 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்ட்து . குறிப்பிட்ட சிலருக்கு கிடைத்த இந்த விருது இவருக்கு கிடைத்தது. அதைவிட பத்மபூஷன், பத்மவிபூஷன் இப்படி பல பட்டங்கள். இவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டது, 1974-ஆம் ஆண்டு உலக அளவிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இவர் இடம் பிடித்துக்கொண்டார்.

இந்த அற்புதமான பாடகியினுடைய இறப்பு உண்மையிலேயே தாங்க முடியாத ஒரு ஒன்றாகத்தான் இருக்கின்றது. சிறந்த பாடகர்கள் சிறந்த நடிகர்கள் என்று தொடர்ந்து இந்த கொரோனா பலரை காவு கொண்டு செல்கின்றது. அந்த வகையிலே இந்த தங்கக் குரல் லதா மங்கேஷ்கர் அதற்குள் அடங்கி விட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்


No comments: