மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
காணுகின்ற கனவானாலும் கண்ணியமா யமையவேண்டும்
கருத்திருத்தும் அத்தனையும் கசடின்றி யிருக்கவேண்டும்
வாழுகின்ற நாளையெல்லாம் மலரவைக்கும் வகையினிலே
மற்றவர்கள் மெச்சும்படி வாழ்வதுதான் வாழ்வாகும்
வீழ்த்துகின்ற எண்ணமதை வீழ்த்தியே விடவேண்டும்
வெறிகொள்ளும் கோபமதை வெந்துவிடச் செய்யவேண்டும்
குழிபறிக்கும் புத்தியினைக் குழிக்குள்ளே தள்ளவேண்டும்
நனிசிறந்த பாதைதேர்ந்து நடப்பதற்கு முயலவேண்டும்
அறமில்லா அத்தனையும் அகழ்ந்தெறிந்து விடவேண்டும்
ஆணவத்தின் நிழல்கூட அணுகாமல் ஆக்கவேண்டும்
தரமறியா நட்புகளைத் தகர்தெறிந்து விடவேண்டும்
கற்றுணரா திருக்காமல் கற்பவற்றைக் கற்கவேண்டும்
கற்பவற்றைக் கருத்திருத்தி கச்சிதமாய் வாழவேண்டும்
அற்புதமாம் அத்தனையும் ஆசையுடன் தேடவேண்டும்
அனைவருமே வியந்துவிட அழகாக வாழவேண்டும்
அல்லல்வரும் தொல்லைவரும் அதிரடியாய் அநேகம்வரும்
ஆறுதலும் தேறுதலும் நாடியோடும் நிலையும்வரும்
ஆன்மீகம் தனையணைக்க அத்தனையும் அகன்றுவிடும்
ஆண்டவனை அகங்கொண்டால் அல்லலின்றி வாழ்ந்திடலாம்
No comments:
Post a Comment