நிச்சயத் தாம்பூலம் - ஸ்வீட் சிக்ஸ்டி 2 - ச சுந்தரதாஸ்

 .


தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் படங்களை தயாரித்து டைரக்ட் செய்தவர் பி எஸ் ரங்கா.ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக திரைக்கு அறிமுகமான இவர் தமிழ்,தெலுங்கில் உருவான தேவதாஸ் படத்தை ஒளிப்பதிவு செய்து பிரபலமானார்.தொடர்ந்து சில படங்களை ஒளிப்பதிவு செய்த இவர் விக்ரம் புரோடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி தான் நிறுவிய விக்ரம் ஸ்டுடியோவில் படங்களை தயாரித்து,இயக்கி வெளியிடத் தொடங்கினார் .பக்த மார்க்கண்டேயா, ஜெயகோபி ,ராஜா மலையசிம்மன் என்று படங்களை எடுத்தவர் சிவாஜி,என் டி ராமராவ் ,பானுமதி நடிப்பில் தெனாலிராமன் என்ற படத்த்தை இயக்கி அது வெற்றி கண்டது.அப்போதுதான் இசையமைப்பாளராக அறிமுகமாகி வளர்ந்து கொண்டிருந்த விஸ்வநாதன்,ராமமூர்த்தி இருவரையும் தான் தயாரித்த அனைத்துப் படங்களிலும் இசையமைக்க வாய்ப்பளித்த ரங்கா 1962ம் வருடம் எடுத்த நிச்சயத் தாம்பூலம் படத்திற்கும் இசையமைக்க வாய்ப்பளித்தார்.

கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு விஸ்வநாதன் ,ராமமூர்த்தி வழங்கிய இசை சௌந்தராஜன் ,சுசிலா,ஈஸ்வரி குரலில் ரசிகர்களை அப்படியே கட்டிப் போட்டது எனலாம்.படத்தின் கதாநாயகன் சிவாஜிக்கு நான்கு வாழ்க்கை நிலைகளில் பாடல்களை கவிஞர் இயற்றி இருந்தார்.ஆரம்பத்தில் கவலை இல்லாத ஜாலி வாழ்க்கை வாழும் இளைஞன் பாடுவதாக ‘ ஆண்டவன் படைத்தான் என்கிட்டே கொடுத்தான் அனுபவி ராஜன்னு அனுப்பி வச்சான் ” என்றும்,திருமணமானவுடன் முதலிரவில் ‘ பாவாடைதாவணியில் பார்த்த உருவமா “ என்று மனைவியை வர்ணிப்பதாகட்டும், குடும்ப பிரச்சனையால் குடிகாரனாகி ‘ இதுவேர் உலகம் தனி உலகம்” என்று கிளப்பில் பாடுவதாகட்டும்,பின்னர் எல்லாம் இழந்து ‘ படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்தானே என்று பாடுவதாகட்டும் கண்ணதாசனின் வரிகள் ஒரே படத்தில் பல்வேறுபட்ட மனித வாழ்வை சித்தரித்துக் காட்டியிருந்தது.


இது தவிர சுசிலாவின் குரலில் மாலை சூடும் மணநாள் இளம் மங்கையின் வாழ்வில் திருநாள் என்ற பாடல் இன்றும் ஒலிக்கிறது.படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஜமுனா நடித்திருந்தார்.காதல்,துன்பம்,தவிப்பு என்று கலவையான பாத்திரம் மிகை இல்லாமல் செய்திருந்தார்.இவர்களுடன் எஸ் விரங்காராவ் , நாகையா, கே மாலதி , கண்ணாம்பா, நம்பியார் ,எஸ் ராமராவ் ஆகியோரும் நடித்தனர்.இந்தப் படத்தில் ராமராவுக்கு ஜோடியாக நகைச்சுவை வேடத்தில் நடித்த ராஜஸ்ரீ இரண்டு ஆண்டுகள் கழித்து கதாநாயகியாக காதலிக்க நேரமில்லையில் நடித்து நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றார்.படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் பழம் பெரும் நடிகர் டீ எஸ் துரைராஜ். இவருடடைய வசனம் பேசும் பாங்கும் விழிகளை திருப்பும் ஸ்டைலும் அடிக்கடி இதுதன் பரம்பரை பழக்கம் என்று சொல்வதும் அவரின் நடிப்புக்கு மெருகூட்டியது.படத்தின் வசனங்களை விருதை ராமசாமி எழுதியிருந்தார்.படத்தை ரங்கா ஒளிப்பதிவு செய்திருந்தார்.சிறு வயது முதல் எவ்வித கண்டிப்பும் இல்லாமல் வளரும் ஒரு பணக்கார இளைஞன் பிற் காலத்தில் எத்தனை இன்னல்களை அடைவான் என்பதை படத்தின் கதை உணர்த்தியது.அனால் படத்திற்கு கதையை எழுதியவர் யார் என்று தெரியவில்லை.

தொடர்ந்து குடும்பக்கதைகளில் நடித்து வந்த சிவாஜிக்கு தனது வழமையான இயக்குனர்களிடம் இருந்து விடுபட்டு அரிய இயக்குனரான பி எஸ் ரங்காவின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நிச்சயத் தாம்பூலம் பெற்றுத் தந்தது.அதே போல் படமும் 100நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.No comments: