யாழ். பலாலி விமான நிலையம் விரைவில் திறப்பு
குருந்தூர் மலையில் தொல்லியல் சட்டத்திற்கு கொடுக்கப்படாத அதிகாரத்தை செயற்படுத்துகின்றார்கள்
புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்ய வேண்டும்
அம்பிகா சற்குணநாதனது கருத்துகளை வெளிநாட்டு அமைச்சு மறுப்பு
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து வடக்கில் தொடரும் போராட்டங்கள்
கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலை தொழிநுட்ப பீடத்திற்கு வியாழேந்திரன் அடிக்கல்
யாழ். பலாலி விமான நிலையம் விரைவில் திறப்பு
யாழ். ஊடக மாநாட்டில் ஜீ.எல். பீரிஸ்
இலங்கையில் கொரோனா தலைவிரித்தாடிய நிலையிலேயே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதாகவும் விரைவில் அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு எந்தவித அரசியல் நோக்கங்களும் இல்லை. “நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. அதேபோல், யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.தற்பொழுது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதேபோல பலாலி விமான நிலையமும் திறக்கப்படும். தற்போது பலாலி விமான நிலையத்தில் சில திருத்த வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக ஓடுபாதை விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.
மேலும் பல விமான சேவைகளுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் காரணமாக சற்று தாமதநிலை காணப்படுகின்றது. எனினும் அந்த வேலைகள் முடிந்த பின்னர் விரைவாக பலாலி விமான நிலையம் திறக்கப்படும் என்றார். நன்றி தினகரன்
குருந்தூர் மலையில் தொல்லியல் சட்டத்திற்கு கொடுக்கப்படாத அதிகாரத்தை செயற்படுத்துகின்றார்கள்
தொல்லியல் திணைக்களம் தொல்லியல் அடையாளங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட திணைக்களம் எதையும் கட்டுவதற்கான அனுமதி கிடையாது கன்னியா வழக்கிலும் நாங்கள் இதனை நிறைவேற்றியுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (04) முல்லைத்தீவு மாவட்ட குருந்தூர் மலைக்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வழிபாட்டு உரிமைகள் தொடர்பில் குருந்தூர் மலைக்கு சென்றுவிட்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில்.
இன்று நாங்கள் குருந்தூர்மலையில் இந்துக்களின் வழிபாட்டு தலத்திற்கு அவர்கள் செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது நீதிமன்றில் து.ரவிகரன்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிறீதரன் ஆகியேர் மனுதாரர்களாக உச்சநீதிமன்றில் வழக்கு தாக்கதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசாங்கம் அவ்வாறு இல்லை யாரும் வரலாம் போகலாம் என்று தொல்லியல் திணைக்களத்தின் சத்தியக்கடதாசியினையும் கொடுத்து சொல்லியுள்ளார்கள்.
வழிபாட்டு சுதந்திரம் மறுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்திற்கு நாங்கள் வருகை தந்துள்ளோம் இங்கே எங்களை தடுக்கவில்லை ஆனால் அதேவேளையில் இடையில் உள்ள தொல்லியல் அடையாளம் என்று வழக்கில் குறித்து சொல்லப்பட்டிருக்கின்ற முன்னர் தாதுகோபுரம் அமைந்துள்ளளதாக சொல்கின்ற இடத்தில் இப்போது கட்டுமானப்பணிகள் நடைபெறுவதை எங்களால் அவதானிக்க முடிந்துள்ளது.
அவர்களால் கொடுக்கப்பட்ட வழக்கில் கூட இவ்வாறு கட்டுமானப்பணிகள் நடைபெற்றதாக சொல்லவில்லை அதற்கு முன்னர் ரவிகரன், சிறீதரன் ஆகியோர் வந்தபோது இக்கட்டடம் அடிமட்டத்தில்தான் இருந்ததாக சொல்லியுள்ளார்கள்.
தொல்லியல் திணைக்களம் தொல்லியல் அடையாளங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட திணைக்களமாகும். எதையும் நிர்மாணிப்பதற்கான அனுமதி அதற்கு கிடையாது. கன்னியா வழக்கிலும் நாங்கள் இதனை அறிவித்துள்ளோம்.
ஆகையில் குருந்தூர்மலையில் சட்டம் கொடுக்காத ஒரு அதிகாரத்தினை தொல்லியல் திணைக்களம் கையில் எடுத்து புதிதாக ஒரு தாதுகோபுரம் கட்டுவதை இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது. வரும் நாட்களில் மனுதாரர்களின் மறுப்பு சத்தியக்கடதாசியில் நாங்கள் இந்த விடையத்தினை குறித்து சொல்கின்றோம். இன்று அந்த இடத்தில் சென்று வழிபடக்கூடியதாக இருந்திருக்கின்றது.
ஆனால் கிராமமாக இந்த இடத்தில் வந்து வழிபடுபவர்கள் வந்து போகக்கூடியவாறு இருக்கவேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. அங்கு வழிபடுவதற்கு அடையாளமாக வைத்திருந்த சூலம் உடைக்கப்பட்டு ஒரு குழிக்குள் போடப்பட்டுள்ளதை து.ரவிகரன் கண்டு ஒரு ஆண்டிற்கு முன்னர் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய நாள் அதுதொடர்பில் பொலீஸ் அதிகாரி து. ரவிகரன் அவர்களுடன் பேசியுள்ளார்கள்.
அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அந்த சூலம் திரும்ப நிறுவப்படவேண்டும் அதில் வந்து வழிபடுகின்ற சுதந்திரம் மக்களுக்கு தொடர்ச்சியாக இருக்கவேண்டும்.
இதேவேளையில் இந்த குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் நாங்கள் ஒரு இடைக்கால தடையினை கோரியுள்ளோம். அந்த தடை இன்னும் கொடுக்கப்படவில்லை. அந்த தடை கொடுக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் தங்களின் எதிர்ப்பு பத்திரங்களை கொடுத்துள்ளார்கள். ஏன்தடை உத்தரவு தேவையில்லை என்று சொல்வதற்காக ஆகவேதான் இன்று சுதந்திரமாக வரவிட்டுள்ளார்கள்.
அந்த தடை உத்தரவில் தொல்லியல் திணைக்களத்திற்கு சட்டத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரம் தொல்லியல் அடையங்களை பாதுகாப்பது மட்டும் தான் தொடர்ச்சியாக கட்டிடங்கள் எதுவும் அமைக்கக்கூடாது என்றும் நாங்கள் கேட்டுள்ளோம் நீதிமன்றம் அதனை விசாரித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் அவர்கள் சீக்கிரமாக இதனை கட்டி முடிக்கவேண்டும் என்ற தோரணையில் உடனடியாக இதனை கட்டுகின்றார்கள் போல் தென்படுகின்றது இதனை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவருவோம்
தொல்லியல் திணைக்களத்திற்கு சட்டத்தினால் கொடுக்கப்படாத அதிகாரத்தினை செயற்படுத்தப்படுகின்றார்கள் மட்டுமல்ல இப்படியான கட்டிட வேலை நடக்கக்கூடாது என்று நாங்கள் மன்றில் கோரியுள்ளோம் இடைக்கால உத்தரவு சம்மந்தமனா விசாரணை வெகுவிரைவில் வருகின்றது அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இதனை செய்து முடிக்க முனைகின்றார்கள் இந்த விடையத்தினையும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வருவோம்.
குருந்தூர் மலையினை சுற்றியுள்ள 436 ஏக்கர் வயல் நிலங்கள் தமிழ் விவசாயிகள் காலாகலமாக செய்கைபண்ணிவந்த இடத்தினை இப்போது அதனை தடுத்து சுவீகரிப்பதாகவும், இந்தவிகாரைக்கு தேவையான வளங்களை கொடுப்பதற்காக அந்த வயல் நிலங்களை தாங்கள் சுவீகரிப்பதாகவும் சொல்லியுள்ளார்கள்.
இது மிகவும் மோசமான செயற்பாடு இதற்கு அனுமதியளிக்க முடியாது அதற்கும் சட்டபூர்வமாக செய்யும் அனைத்து விடையங்களையும் நாங்கள் செய்வோம் சட்டபூர்வமாக செய்து சரிவராத நேரங்களில் நாங்கள் நேரடியாக சில விடையங்களை செய்யவேண்டிய ந்pலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் அந்த வயல் நிலங்கள் தமிழ் விவசாயிகளிடம் இருந்து எடுப்பதற்கு நாங்கள் இடம்கொடுக்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(சண்முகம் தவசீலன், புதுக்குடியிருப்பு விசேட நிருபர்) - நன்றி தினகரன்
புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்ய வேண்டும்
ஞானசார தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளதால், கடந்த கால காயங்களை
குணப்படுத்த புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் நான் சிறையில் இருக்கும் போது என்னை சந்தித்தனர்.
அவர்கள் என்னை தேடி வந்து அவர்களின் வாழ்க்கை கதைகளை கூறினர். அவர்களுக்கு நடந்தது என்ன, ஏன் இந்த நிலைமைக்கு ஆளாகினர் போன்ற விடயங்களை கூறினர்.
போர் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காயங்களை மேலும் காயப்படுத்திக்கொண்டிருக்காது, விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது முக்கியமானது என ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினரிடம் எடுத்துரைத்தோம்.
இல்லை என்றால், இதனை அடிப்படையாகவும் ஒரு காரணமாகவும் கொண்டு, மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் பிரிவினைவாத சக்திகள் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வார்கள்.
ஒரு நாடு – ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணிக்குழு என்ற வகையில் நாங்கள் வடபகுதிக்கு விஜயம் செய்தோம். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் சிறையில் இருக்கும் பலரது பெற்றோர் எம்மை சந்தித்தனர்.
சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே இவர்களில் கோரிக்கையாக இருந்தது.
கடந்த 25 ஆம் திகதி ஒரு கலந்துரையாடல் நடந்தது, அப்போது நாங்கள் ஜனாதிபதிக்கு இதனை நினைவூட்டினோம்.
இந்த கைதிகள் விடுதலை செய்யப்படுவது முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டினோம். இதனை செய்தால், பிரிவினைவாத கரு நிழல் மீண்டும் ஒருங்கிணைய இருக்கும் சந்தர்ப்பை இல்லாமல் செய்யலாம்.
அந்த காலத்தில் எமது இளைஞர் ஒருவர் அங்கிருந்தாலும் அவரும் புலி உறுப்பினர்தான். இதுதான் உண்மை நிலை என தேரர் குறிப்பிட்டுள்ளார். நன்றி தினகரன்
அம்பிகா சற்குணநாதனது கருத்துகளை வெளிநாட்டு அமைச்சு மறுப்பு
2022 ஜனவரி 27ஆந் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி திருமதி. அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல தவறான அறிக்கைகள் கவலையளிப்பதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
இலங்கை அரசாங்கம் பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை திருமதி. சற்குணநாதனின் சாட்சியம் முற்றாகப் புறக்கணிக்கும் அதே வேளையில், குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வழங்கும் நேரத்தில், அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் நேர்மை குறித்த சந்தேகங்களை உருவாக்குகின்றது.
மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என திருமதி. சற்குணநாதன் வழங்கிய பரிந்துரைகளில் அமைச்சு ஏமாற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்வாதாரம் ஏற்கனவே கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கை இழந்தால், அதனால் ஏற்படும் இழப்புக்கள் வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை அதிகரிக்கும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முக்கிய தொழில்களில் மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அவரது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இன ரீதியாக சமூகங்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு காலத்தில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தை நினைவூட்டுவதாக அமைச்சு குறிப்பிடுகின்றது. இலங்கை போன்ற பல்லின மற்றும் பல மதங்கள் கொண்ட மக்கள் வாழும் நாட்டில், சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு, சர்வதேச சமூகத்தில் இலங்கை குறித்த ஆபத்தான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படல் வேண்டும்.
'தண்டனை விதிக்கப்படாத ஒரு கலாச்சாரம்' குறித்த திருமதி. சற்குணநாதனின் கூற்றுக்களை அமைச்சு மறுக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் அரசாங்கம் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளது என்பதை அமைச்சு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை வழங்கி வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலாந்தர மீளாய்வு மற்றும் எழுப்பப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக, விஷேட நடைமுறைகள் உட்பட சர்வதேச சமூகத்துடன் அரசாங்கம் தீவிரமாக ஈடுபடுட்டு வருகின்றது. முறையான சித்திரவதை சார்ந்த குற்றச்சாட்டுக்களும் இதில் உள்ளடங்கும். சட்டத்தின் ஆட்சி, நீதிக்கான அணுகல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த மேலதிகமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. பரிந்துரைகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்த ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்காக இது திறந்திருக்கும்.
'சிங்கள பௌத்த தேசியவாதம்' மற்றும் 'இராணுவமயமாக்கல்' போன்றவற்றை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உந்துதலாக திருமதி. சற்குணநாதன் குறிப்பிடுவதாக அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது. சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்த உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், இனம் குறித்த தெளிவற்ற கூற்றுக்களை அவர் முன்வைத்துள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையும், அனைத்து குடிமக்களும் அவர்களது மதம் அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல் அரசியலமைப்பின் கீழ் ஒரே அடிப்படை உரிமைகளைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் என்பதையும் அமைச்சு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. மேலும், இலங்கை இனம் அல்லது மத அடிப்படையில் எந்தவித பாகுபாடுமின்றி இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார வசதிகள் போன்ற பொதுச் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்கின்றது. உண்மையில், ஆயுத மோதலின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும் பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் கூட, முக்கிய இனத்தவர்களாக அப்பகுதிகளில் வாழ்ந்த பொதுமக்களான தமிழ் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசாங்கம் அப்பகுதிகளுக்கு பொதுச் சேவைகளைத் தொடர்ந்தும் வழங்கி வந்தது.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நில அபகரிப்புக்களை மேற்கொள்ளுதல் மற்றும் மக்கள் தொகையை மாற்றுதல் ஆகியவற்றுக்கான கருவியாக செயற்படுவதாக தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியையும், இன வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டுவதாக 'ஒரு நாடு ஒரு சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியையும் திருமதி. சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே இடம்பெயர்ந்திருந்த மக்கள் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குத் திரும்பியதன் காரணமாக வனப் பகுதிகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதால், தவிர்க்க முடியாத வகையில் தொல்பொருள் தலங்கள் அழிக்கப்படுகின்றன. எனவே, இந்தத் தலங்களைப் பாதுகாப்பதற்காக உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியானது காணிகளை அபகரிப்பதற்கும் சிங்களவர்களை இந்தப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்குமான ஒரு கருவியாகும் எனக் கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. இந்த செயலணியில் அனைத்து இன சமூகங்களினதும் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 'ஒரு நாடு ஒரு சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியைப் பொறுத்தமட்டில், அது ஒரு ஆலோசனைப் பாத்திரத்தை மட்டுமே வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். செயலணியின் பரிந்துரைகள் முதலில் நீதி அமைச்சாலும், பின்னர் அமைச்சரவையாலும், இறுதியாக நாடாளுமன்றத்தாலும் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றி ஆய்வு செய்யப்படும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், 2009ஆம் ஆண்டு மோதலின் முடிவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளில் பெரும்பான்மையானவை (92% க்கும் அதிகமானவை) ஏற்கனவே காணிக்கு சொந்தமான பொதுமக்களுக்கு முறையாக விடுவிக்கப்பட்டுள்ளன என்பது சுட்டிக்காட்டத்தக்கது. எஞ்சியுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கான பொறிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
குறிப்பாக சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு முறைசாரா மற்றும் சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகள் பயன்படுத்தப்படுவதாகவும், 'சிவில் இடம்' சுருங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள திருமதி. சற்குணநாதனின் குற்றச்சாட்டுகளைப் பார்ப்பது ஏமாற்றமளிக்கின்றது. அரசு சாரா அமைப்புக்களை அரசாங்கம் பங்காளிகளாக அன்றி, எதிரிகளாகப் பார்க்கவில்லை என அமைச்சு வலியுறுத்துகின்றது. இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி சபைக்கான அலுவலகத்தின் பணிகளில் சிவில் சமூக அமைப்புக்கள் ஆற்றிய ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை அரசாங்கம் அங்கீகரிக்கின்றது. அரசு சாரா அமைப்புக்களின் பணியை எளிதாக்கும் வகையில், அரசு சாரா அமைப்பின் செயலகத்தை வெளிநாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வருவது போன்ற சில கொள்கை மாற்றங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக வழக்கமான பாதுகாப்பு வலையமைப்புக்களை இயக்குவதைத் தவிர, பாதுகாப்புப் படைகளும் புலனாய்வு அமைப்புக்களும் நாட்டிலுள்ள எந்தவொரு குறிப்பிட்ட மக்களையும் கண்காணிப்பதில் அல்லது குறிவைப்பதில் ஈடுபடவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.
'போர் மற்றும் போதைப்பொருள்' என்ற கட்டமைப்பின் கீழ் நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் கைதுகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ள திருமதி. சற்குணநாதனின் கூற்றுக்களை அமைச்சு மறுக்கின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில், அரசாங்கம் தற்போது அந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், அந்தச் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 'மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் கோரும் அரசுகளின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக' சீனாவுடனான தனது நட்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாக திருமதி. சற்குணநாதன் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். மாறாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் மூலோபாயப் போட்டியைக் கவனத்தில் கொண்டு, சுதந்திரத்திற்குப் பின்னர் நாங்கள் ஏற்றுக்கொண்ட அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப நடுநிலைமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எமது முக்கிய வெளியுறவுக் கொள்கை சார்ந்த நோக்காகும். தேசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக சீனாவைத் தவிர, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகளுடன் இலங்கை கூட்டுறவை மேற்கொண்டுள்ளது என்பதை அமைச்சு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பில் இத்தகைய கூட்டாண்மைகள் எந்தவித தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. நன்றி தினகரன்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து வடக்கில் தொடரும் போராட்டங்கள்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து வடக்கில் பல இடங்களிலும் போராட்டங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அந்தவகையில் யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடல் தொழிலுக்கு சென்ற நிலையில் இந்திய இழுவைப் படகுகளினால் மோதி உயிரிழந்ததாக கூறப்படும் இரண்டு மீனவர்களின் மரணத்திற்கும் நீதிகோரி மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டும், மருதங்கேணி- தாளையடி பிரதான வீதியை மறித்தும் மீனவர்கள் பாரிய கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டனர். நேற்று செவ்வாய்க்கிழமை(01) காலை இப்போராட்டம் இடம்பெற்றது.
கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை கடலுக்கு சென்ற வத்திராயன் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் தணிகைமாறன் ஆகிய இரண்டு மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(31) அவர்களது சடலங்கள் ஆழியவளை கடற்கரையில் கரை ஒதுங்கின.
அவர்கள் இருவரும் இந்திய இழுவைப் படகுகளினால் மோதி உயிரிழந்ததாக தெரிவித்து வடமராட்சி கிழக்கு மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை(01) மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர். பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகள் செல்லாதவாறு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டதுடன், மருதங்கேணி- தாளையடி பிரதான வீதியையும் மறித்து நடுவீதியில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியதுடன் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை சந்தித்த மருதங்கேணி பிரதேச செயலர் மேலதிகாரிகளிடம் கலந்துரையாடி தீர்வு பெற்றுத் தருவதாக தெரிவித்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த போராட்டக்காரர்கள் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரோ அமைச்சரோ இதற்கு வாக்குறுதி தந்தால் மட்டுமே இப்போராட்டத்தை நிறுத்துவதாகவும் இல்லாவிடில் இப்போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்நிலையில் நண்பகல் அளவில் அப்பகுதிக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தார். அவர் மீனவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது தான் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் பேசி இருப்பதாகவும் நேற்றையதினம் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டமொன்றிலும் அத்துமீறும் படகுகளை பிடிக்குமாறு கடற்படையினருக்கு தான் கட்டளை பிறப்பிப்பதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக கடற்தொழில் அமைச்சர் மீனவர்களிடம் தெரிவித்தார்.
எனினும் 'இழுவைப்படகுகள் வராது. வந்தால் நானும் இங்கு வாறேன் போய் பிடிப்போம்' எனக்கூறினார்.
உயிரிழந்த மீனவர்களின் இறுதி கிரியைகளை செய்து முடிப்பதற்காக இப்போராட்டம் நண்பகல் நிறுத்திக் கொள்ளப்பட்டது.
மேலும் அவர்களது இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்றதும் கடற் தொழிற்சங்கங்களுடனும், விளையாட்டு கழகங்களுடனும் கலந்துரையாடி பெரிய அளவில் கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்படும் என கடற்தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில்
யாழ்ப்பாணம் - பலாலி, வலளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பருத்தித்துறை -பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் வீதிகளின் குறுக்கே படகுகள் மற்றும் வலைகளை போட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவில் விஷேட நிருபர் , பருத்தித்துறை விசேட, யாழ். நிருபர் - நன்றி தினகரன்
கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலை தொழிநுட்ப பீடத்திற்கு வியாழேந்திரன் அடிக்கல்
மட்டக்களப்பு கல்குடா கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் புதிய தொழிநுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (05) கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின்பால் நாட்டை கட்டியெழுப்பும் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்ப கற்கைகள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்க படவேண்டும் எனும் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிற்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்ப பீடம் கட்டட தொகுதி அமைக்கப்படுகின்றது.
அந்த வகையில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் முன்மொழிவிற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலைக்கு 53.30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்ப பீடத்திற்கான கட்டட தொகுதியினை அமைப்பதற்கு கல்வியமைச்சர் டினேஸ் குணவர்த்தன அனுமதியளித்தமைக்கு அமைவாக குறித்த உயர் தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கலை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்ட அதிதிகளினால் நடப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டிருந்தார்.
மேலும் குறித்த நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக கல்வி அமைச்சின் ஊடகச் செயலாளர் லலித் ரோஹன லியனகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன், வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட கோட்டக்கல்லி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மாணவர்களின் பேற்றோர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
மாணவர்களின் கல்வி உயர்வை நோக்காகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் வருடாந்தம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சையில் 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்கு செல்லும்போது அந்த தேர்வில் 3 இலட்சம் மாணவர்கள் மாத்திரமே உயர்தர வகுப்புகளுக்கு தெரிவாகின்றனர்.
ஏனையோர் கல்வி நிலையை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதும் அவை சிறந்த கொள்கை திட்டத்தின் கீழ்பின்தங்கிய பிரதேசங்களை விஸ்தரிக்க படவில்லை எதிர்காலத்தில் அனைத்து மாணவரும் ஏதேனும் ஒரு துறையில் அரசாங்கத்தின் உதவியோடு பட்டப்படிப்பு வரை கல்வியை தொடர வழி வகுக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த உயர் தொழில்நுட்ப பீடம் நாடலாவிய ரீதியில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அமைக்கப்படுகின்றது.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வழிகாட்டலுடன் மாணவர் சமுதாயத்தினருக்கு தொழிற்கல்வி மற்றும் உயர் தொழில்நுட்ப ஆர்வமுள்ளவர்களுக்கும், மின்னியல் இலத்திரனியல் பொருளியல் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை மேம்படுத்த கல்வி அமைச்சின் உயரிய நோக்கத்துடன் உயர் தொழில்நுட்ப பீட கட்டிட தொகுதி அமைக்கப்பட உள்ளதுடன், இந்தக் கற்கை நெறிகள் ஊடாக எதிர்காலத்தில் மாணவ சமுதாயத்தினருக்கு சர்வதேச ரீதியிலான உயர் தொழில்நுட்ப தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வித் தகைமை உடைய சமுதாயமாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கல்லடி குறூப், பாசிக்குடா நிருபர்கள்) - நன்றி தினகரன்
No comments:
Post a Comment