Sunday, February 6, 2022 - 10:36am
- இந்தியாவில் 2 நாட்கள் துக்கதினம் பிரகடனம்
பிரபல் பின்னணி திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் கடந்த ஜனவரி 08ஆம் திகதி முதல் மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர், இன்று காலை 8.12 மணியளவில் காலமானார்.
கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்து வந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறியது. இதனால் கடந்த வாரம் வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது.
ஆனால், நேற்று (05) சனிக்கிழமை அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருந்ததுடன், அவர் மீண்டும் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்" என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற வைத்தியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பிரதித் சம்தானி, " லதா அவர்கள் கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 28 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் உறுப்புகள் பலவும் செயலிழந்ததால் இன்று காலை 8.12 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது", என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக , பெப்ரவரி 06 மற்றும் 07 ஆகிய 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இந்த 2 நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவுள்ளது.
இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது
லதா மங்கேஷ்கர், 1929 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தார்.
இவரது இயற்பெயர் ஹேமா. ஆனால் அவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா எனும் பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். அதனால் அனைவரும் அவரை 'லதா' என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே அவரது பெயராகவும் ஆகிப்போனது.
இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் மராத்தி மொழியில் நன்கு அறியப்பட்ட பாடகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தார். அவரது ஐந்து குழந்தைகளில் முதல் குழந்தை லதா மங்கேஷ்கர்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற லதா மங்கேஷ்கர், இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார்.
1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் தனது முதல் திரை இசை பாடலை பாடி இசை பயணத்தை தொடங்கினார்.
அதன்பின்பு பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி திரை இசையில் உச்சத்தை தொட்டார் லதா மங்கேஷ்கர்.
இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2001ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
எம்.எஸ். சுப்புலட்சுமி பிறகு பாரத ரத்னா விருது பெற்ற பாடகர் லதா மங்கேஷ்கர்.
முன்னதாக அவர் பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
லதா மங்கேஷ்கர் எட்டு இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
1999 - 2005 ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் நியமன உறுப்பினராகவும் இருந்துள்ளார் லதா மங்கேஷ்கர்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எட்டு தசாப்தங்களாக, அவர் பல்வேறு மொழிகளில் தனது மெல்லிய குரலில் பாடி ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொட்டுள்ளார் என்று குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். "நான் வார்த்தைகளில் விவரிக்க முடியாத வேதனையில் இருக்கிறேன். அன்பும், அக்கறையுள்ள லதா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். அவர் நம் நாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். இனிவரும் தலைமுறையினர் அவரை இந்திய கலாச்சாரத்தில் தலைசிறந்து விளங்கியவராக நினைவுகூர்வார்கள். அவரது மெல்லிசை குரல் மக்களை ஈர்க்கும் இணையற்ற திறனைக் கொண்டிருந்தது.", என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், லதா அவர்களின் மறைவு, தனது இதயத்தை நொறுக்குவதாகவும், அவரது சாதனைகள் ஒப்பிட முடியாதவை என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "லதா மங்கேஷ்கரின் மறைவு குறித்த சோகமான செய்தி கிடைத்தது. பல தசாப்தங்களாக இந்தியாவின் மிகவும் பிரியமான குரலாக இருந்தார். அவரது தங்கமான குரல் அழியாதது; அது அவரது ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்கள்.", என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். (+பிபிசி) - நன்றி தினகரன்
No comments:
Post a Comment