நீதியற்ற ஊரில் நாதியற்றவள் பிள்ளை பெற்றால் என்ன நடக்கும் !? அவதானி

 “  இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி


எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே… “ இந்தப் பாடல் வரிகளை கேட்டிருப்பீர்கள்.  1967 ஆம் ஆண்டு வெளிவந்த திருவருட்செல்வர் திரைப்படத்தில் இப்பாடல்  ஒலிக்கிறது.

அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்ரி அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய உரைகளை கேட்டதையடுத்து மேற்குறித்த பாடல்தான் நினைவுக்கு வந்தது.

அவர் சொன்னார்:   “ வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள், இங்குள்ள இளைஞர், யுவதிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்.  கிடைக்காது எனத் தெரிந்துகொண்டும், அதனைப்பெற முயற்சிக்கின்றோம் எனச் சொல்லிக்கொண்டு இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள்.  “

அவர் சுட்டிக்காட்டியிருப்பது, வடபகுதியிலிருந்து


நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருக்கும் உறுப்பினர்களைத்தான் என்பது தெளிவானது.

அவ்வாறாயின்,  இன்றைய அரசு குறிப்பிட்ட இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளதா..? போர்க்காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த சில வருடங்களாக அறப்போராட்டம் நடத்திவருகிறார்களே..!? அவர்களுக்கு என்ன நீதி கிடைத்திருக்கிறது?

இவர்கள் நீதிஅமைச்சர் குறிப்பிடும் தமிழ் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லவில்லையே !

காணாமல் போனவர்கள் பற்றி நீதி கேட்டு அறப்போராட்டம் ஒருபுறம் நடக்கின்றது. அத்துடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற குரலும் பல காலமாக ஒலிக்கிறது.  இந்த இரண்டு விவகாரங்களுமே நீதியமைச்சரின் கவனத்திற்குட்பட்ட விடயங்கள்.

எனினும்,  யாழ். சிறையிலிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை வேறு திசைக்கு திருப்புகிறார் நீதியமைச்சர்.

  தென்னிலங்கை சிறைகளிலும் ஏனைய பிரதேசங்களிலும் போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் இல்லையா..?

வடக்கிற்கு எவ்வாறு போதை வஸ்து வந்துகொண்டிருக்கிறது…? கடல் மார்க்கமாக வருமாயின், கடலில் கண்காணிப்பில் ஈடுபடும் – ரோந்து செல்லும் கடற்படையினர் என்ன செய்கிறார்கள்..? 

தென்னிலங்கையிலிருந்து தரைமார்க்கமாக போதை வஸ்து வடக்கிற்கு வருமாயின் வீதிகளில் கடமையிலிருக்கும் காவல்துறை  என்ன செய்கிறது..?

அவ்வாறாயின்  போதைவஸ்து பரிமாற்றத்திற்குள் ஏதோ மர்மம்


இருப்பதாகத்தானே அர்த்தம்.  தென்னிலங்கையில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்திகளின் பின்னணி குறித்து நீதியமைச்சர் ஏதும் அறிவாரா..?

அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளைத்தான் அவர் சுட்டிக்காண்பித்து பேசுகிறார் என்பது தெளிவானது.

அதேசமயம் அரசை ஆதரித்துக்கொண்டு, அரசில் அங்கம் வகிக்கும்  தமிழ்  அரசியல்வாதிகள் சிலர் இருக்கிறார்களே.  இவர்களில் இருவர் முன்னாள்  ஈழவிடுதலைப் போராளிகள்.  இவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய ஏராளமான தமிழ் வாக்காளர்கள்  வடக்கிலும் கிழக்கிலும் இருக்கிறார்களே.  அவர்களின் அபிலாஷைகள் குறித்து யார்தான் பேசுவது..?

மைத்திரி – ரணில் நல்லிணக்க ஆட்சிக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.  இவர்களது தேன்நிலவு  காலத்திலாவது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைத்திருக்கவேண்டும். அரசியல் கைதிகள் விடுதலையாகியிருக்கவேண்டும்.

ஆனால், அதுவும் நடக்கவில்லையே..?

இலங்கை சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த நீதியமைச்சர் அலி சப்ரி அவர்களும்,  மற்றும் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன்,  சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயகமூர்த்தி முரளிதரன், வியாழேந்திரன் ஆகியோரெல்லாம் இணைந்திருக்கும் இன்றைய அரசில், காணாமலாக்கப்பட்டவர்களுடைய உறவினர்களுக்கும்  நீதி கிடைக்காதமையினாலும், அரசியல் கைதிகள் விடுதலை என்பது தொடர்ந்தும் பேசும் பொருளாகவே இருப்பதனாலும்தானே,  நீதி அமைச்சர் சொல்லும் தமிழ் இளைஞர் , யுவதிகளும்  நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களும்   குறைந்தபட்சம் தங்களது கோரிக்கைகளுக்காக தங்களால் தெரிவுசெய்யப்பட்ட  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னால் செல்ல நேரிட்டுள்ளது.

அரசுடன் ஐக்கியமாகியிருக்கும் மேற்குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகள் இதுவரையில்  காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்தும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாகவும் ஏதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்திருக்கலாம்தானே..?

தென்னிலங்கையில் பத்து வருடங்களுக்கு முன்னர்  காணாமலாக்கப்பட்ட  ஊடகவியலாளர் பிரகீத்  எக்னலிய கொடவின் மனைவி சந்தியா இன்றும் நீதிகோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவருகிறார். இவர் எந்த அரசியல்வாதிக்குப் பின்னால் சென்றார்..?

இறுதியில் கொழும்பு  முகத்துவாரம் காளிகோயிலில் நேர்த்திவைத்து தனது தலையை மொட்டை அடித்து இன்றும் போராடிக்கொண்டிருக்கிறாரே அந்தப்பெண்மணி. இது தென்னிலங்கையில் நடக்கிறது.

அரசு சார்பு அமைச்சர்கள் சிலர்,  அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை எனவும்,  காணாமலாகிய பலர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் எனவும் சொல்லிவந்திருப்பதை ஊடகங்களில் படித்திருக்கின்றோம்.  

அதேசமயம்  இன்றைய அரசின் பிரதிநிதிகளான சிலர் கடந்த தேர்தல் காலத்தில் கிளிநொச்சி பிரதேசத்தைச்சேர்ந்த ஒரு அரசியல் கைதியின் உறவினர்களையும் குழந்தைகளையும் சந்தித்து,  தாம் பதவிக்கு வந்ததும், குறிப்பிட்ட அரசியல் கைதியின் விடுதலைக்கு ஆவன செய்வதாக கூறினரே..? ஆனால், அது வெறும் தேர்தல் கால பொய் வாக்குறுதி என நிரூபணமாகிவிட்டதே!

நீதி அமைச்சர் யாழ்ப்பாணத்தை விட்டு விடைபெறுமுன்னர் ஒரு உறுதிமொழியையும் கூறிவிட்டுச்சென்றுள்ளார்.

அதாவது இனிவரும் காலங்களில் தானும் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும்போது,  தமிழ்பேசும் அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்துப்பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பாராம்.

இச்செய்தி, செய்தியாகவே இருக்குமா..? நடைமுறைப்படுத்தப்படுமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னர்,  நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டிருந்த விவாதங்களை பக்கத்து அறையிலிருந்து செவிமடுத்துக்கொண்டிருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ, மும்மொழியிலும் சிறப்பாக பேசிய இளம் தமிழ் அரசியல்வாதி கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்து,  “  நீங்கள் வாதிடும் விடயங்களையெல்லாம் என்னுடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்  “ என்று நல்லெண்ண சமிக்ஞை விடுத்தாரோ..?

அதன்பின்னர் ஏதாவது நடந்ததா..?

இப்போது வடக்கிற்கு வந்து திரும்பியிருக்கும் நீதியமைச்சர் மற்றும் ஒரு கண்துடைப்பு காரியத்தை சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

விடாக்கண்டர்களும் கொடாக்கண்டர்களும் இருக்கும்வரையில்,   பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான போராட்டம் தொடர்ந்துகொண்டுதானிருக்கும். 


No comments: