பண்டிட் பீம்சென் ஜோஷி 100 - கானா பிரபா

 licensed-image.jpeg

பண்டிட் பீம்சென் ஜோஷி 100

(பெப்ரவரி 4, 1922 - ஜனவரி 24, 2011)

ராஜாவின் குரு ஜி.கே.வெங்கடேஷ் அவர்களது படத்தில் ஒரே பாடலை டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவும், இன்னொரு இசை மேதை பண்டிட் பீம்சென் ஜோஷியும் பாட வந்திருக்கின்றார்கள்.
பாடல் பதிவுக்கு முன்னர் பாலமுரளி கிருஷ்ணா ப்ளாஸ்கில் இருந்து ஊற்றி ஊற்றிக் குடித்துக் கொண்டே, பீம்சென் ஜோஷிடம் வேண்டுமா என்று கேட்கிறார். அவர் வேண்டாம் என்று மறுக்கிறார்.

சரி அடுத்து மோர் வேண்டும் என்கிறார் பாலமுரளிகிருஷ்ணா.
அப்போதும் பீம்சென் ஜோஷியிடம் கேட்டால்

“வேண்டாமே பின்னர் குரல் கெட்டு விடும்
பாட முடியாது போய்விடும்”
என்கிறார்.

அப்போது பாலமுரளிகிருஷ்ணா சொன்னாராம்

“ஏய்யா ஒரு மோருக்கு நிக்காத குரல் என்ன குரல்யா அது”

என்று வேடிக்கையாக.

இந்த இடத்தில் எழுத்தை நிறுத்தி வைத்து விட்டு அப்படியே பண்டிட் பீம்சென் ஜோஷி பாடிய கன்னடப் பாடல்களில் மூழ்கினேன்.
அப்படிக் கிட்டிய அற்புதமானதொரு பாட்டு. இளையராஜாவின் வாத்தியார் ஜி.கே.வெங்கடேஷ் “Nodi Swami Naavu Irodhu Heeg” படத்தில் கொடுத்த பாட்டு

“லஷ்மி...லஷ்மி....லஷ்மி பாரம்மா, பாக்யதா லஷ்மி பாரம்மா”



என்னவொரு தெய்வீக அழைப்பு. அதுவும் ஒரு இந்துஸ்தானி மரபில் விளைந்த இந்தப் பாடகரைத் தென்னகத்தில் அழைத்துப் பாடும் அந்த மரபில் எவ்வளவு தூய்மையானதொரு நதிப் பிரவாகம் பாருங்கள்.

1966 இல் பாலமுரளிகிருஷ்ணாவையும், பீம்சென் ஜோஷியையும் இணைத்து சந்த்யா ராகா படத்தில் பாட வைத்த ஜி.கே.வெங்கடேஷ்
இத்தனை ஆண்டுகள் கழித்து 1983 இல் கொடுத்த அற்புதமானதொரு பாட்டு. கன்னடத்தின் மிக உச்ச நடிகர் சங்கர் நாக் இயக்கி நாயகனாக நடித்த படத்தில் இந்தப் பாட்டில் தோன்றி நடித்தவர் அவரின் சகோதரர் ஆனந்த் நாக்.

சந்த்யா ராகா படத்தில் பீம்சென் ஜோஷி பாடியவை

Kannadathi Thaaye Baa



Nambide Ninna



Ee Pariya Sobagaava
பாலமுரளி கிருஷ்ணாவுடன்



எப்பொழுதுமே நம் முன்னோர்கள், அதுவும் குருவின் ஸ்தானத்தில் இருந்து ஞானம் விளைவிப்பவர்களின் ஆளுமை எப்படியாவது நம்மில் புகுந்து விடும். அதனால் தான் முன்னோர்கள், தான் ரசித்த ஆளுமைகளை எல்லாம் தன் இசையில் பாட வைத்து அழகு பார்த்தார் இளையராஜா.

பண்டிட் பீம்சென் ஜோஷியின் குரலில் அளவற்ற காதல் கொண்ட இளையராஜா பின்னாளில் மகாத்மா காந்தியின்
“நம்ரதா கே சாகர்”



என்ற பாடலைப் பாட வைத்தது கூடவே (பண்டிட் அஜய் சக்ரபோர்தி இணைக்குரல்) குரு சீட மரபின் நீட்சியின் அந்தம்.


No comments: