மவுண்ட் றூயிட் கல்வி நிலையத்தின் மாதிரிப் பொங்கல் பரமபுத்திரன்மவுண்ட் றூயிட் கல்விநிலையம் 2022 ம் ஆண்டிற்கான தமிழ்மொழிக் கல்வி கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளுக்காக மாதிரிப்பொங்கல் நிகழ்வுடன் பள்ளியைத் தொடக்கியிருந்தனர். தைத்திங்கள் முதல் நாளில் அதிகாலையில் கொண்டாடப்படும் திருநாள் பொங்கல் எனினும் மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வான பொங்கலை கொண்டாடி மகிழவேண்டும் என்கின்ற நோக்கத்துடன் மாதிரிப்பொங்கல் நிகழ்வினை ஒவ்வோர் ஆண்டும் நிகழ்த்துகின்றனர். இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர், நிர்வாக உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் விருப்புடன் கலந்துகொள்ள மாதிரிப்பொங்கல் சிறப்புற நடைபெற்றது. பள்ளியின் கலைக்குழு உறுப்பினர்கள் பொங்கலுக்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தனர். 

 


பொங்கல் மண்டபம் வாழை, கரும்பு, தோரணம் என்பன கட்டி அலங்கரிக்கப்பட்டு, நடுவில் கோலம் இடப்பட்டு, அங்கு பொங்கல் பானை வைக்கப்பட்டிருந்தது. நெருப்பினை உருவாக்கி பொங்கலை செய்வதற்கு சற்று சிரமமாக அமைவதால் முன்பே மண்பானையில் பொங்கல் செய்துவந்து அதனை மாதிரியாக அடுப்பில் வைத்திருந்தனர். சரியாக இரண்டு மணிக்குப் பள்ளியின் நிர்வாகக் குழுத்தலைவர் சசிசுதன் சுந்தரலிங்கம் அவர்கள் பொங்கல் நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பொங்கல் நிகழ்வினைத் தொடக்கிவைத்தார். பாடசாலை ஆசிரியர்கள் தீபங்களைக் கையில் ஏந்தி நிற்க, பள்ளியின் நிர்வாகக்குழுச் செயலர் குலசேகரம் முரளீதரன், அவர்தம் பாரியார் ஆசிரியர் தயாளினி முரளிதரன், இவர்களுடன் அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து பொங்கல் சூரியனுக்குப் படைத்து சூரிய வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்தவேளையில் நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் சூரிய வழிபாடு செய்தனர். இத்துடன் பொங்கல் வழிபாடு நிறைவுற அரங்க  நிகழ்வுகள் தொடங்கின.

 

அரங்க நிகழ்வாக முதலில் ஆசிரியர் அனிதா சிவசங்கர் அவர்கள் பொங்கல் தொடர்பான சிறப்புரையினை வழங்கினார். மாணவர்களை மையப்படுத்தி அவர் வழங்கிய உரையில் பொங்கல் தமிழர் எல்லோருக்குமான பொதுவிழா என்றும், நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும்  இணைத்து தை முதல் நாளில் சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாடு பொங்கல் என்பதை தெளிவாக விளக்கினார். தொடர்ந்து ஆண்டு 5 மாணவர்களின் பொங்கல் தொடர்பான சிறிய கவிதைகளும், ஆண்டு 6, 7, 8 மாணவர்களின் பொங்கல் பற்றிய உரைச்சித்திரமும் இடம்பெற்றன. இதனை அடுத்து பாடசாலை சார்ந்த செய்திகள் வெளியிடப்பட்டன.

 


பள்ளியின் நடப்பாண்டின் செயற்பாடுகளுக்காக புதிதாக மேலும் ஐந்து ஆசிரியர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு அவர்களை அறிமுகப்படுத்தினர். இத்துடன் செயலாளர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிது நிறைவு பெற்றன. பொங்கல் நிகழ்வுகள் நிறைவு பெற்றதும், மாணவர்களுக்கான வகுப்பறைகள் திறக்கப்பட்டு கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் தொடங்கின.

No comments: