யாழில் பிறந்த யுவதி நோர்வே MP ஆனார்
முறைப்பாடு கிடைத்தால் லொஹான் மீது நடவடிக்கை
அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் தொடர்பான விசாரணை விரைவில்
பதவி விலகல் மட்டும் போதாது; லொஹான் ரத்வத்த கைதுசெய்யப்பட வேண்டும்
கும்பாபிசேகத்தில் விதி மீறல்; ஆலய குருக்கள் உட்பட 6 பேருக்கு கொவிட் தொற்று
நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி
யாழில் பிறந்த யுவதி நோர்வே MP ஆனார்
இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஹம்சாயினி குணரட்ணம் நோர்வேயில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
ஹம்சாயினி இலங்கையிலிருந்து நோர்வே நாட்டுக்குக் தனது மூன்று வயதில் குடிபெயர்ந்துள்ளார். 19 வயதில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த அவர், 27 வயதில் ஒஸ்லோவின் துணை மேயராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 2019 ஆண்டும் அதே பதவிக்கு மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 வயதான ஹம்சாயினி, நோர்வேயில் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில் தொழிற்கட்சி சார்பாக இரண்டாம் நிலையில் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
முறைப்பாடு கிடைத்தால் லொஹான் மீது நடவடிக்கை
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டால் 'சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு' முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரத்வத்த நேற்று தனது பதவியில் இருந்து விலகினார். அவர் மதுபோதையில் தனது நண்பர்கள் குழுவுடன் சிறை வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் அவர் அனுராதபுரம் சிறையில் இரண்டு கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இது தொடர்பாக முறைப்பாடு அளித்தால், சம்பவங்கள் குறித்து அவருக்கு எதிராக தனது அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என கூறினார். பொலிஸ் திணைக்களம் தனது அமைச்சகத்தின் கீழ் வருவதாகக் கூறிய அவர், சிறை வளாகங்களுக்குள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
"அவர் பயன்படுத்திய துப்பாக்கி, உரிமம் பெற்றதாக நான் நினைக்கிறேன். எவ்வாறாயினும், இந்த சம்பவங்கள் தொடர்பாக யாராவது முறைப்பாடு அளித்தால், சட்டப்படி நாங்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும், ”என்று அமைச்சர் வீரசேகர மேலும் குறிப்பிட்டார். வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்ற லொஹான் ரத்வத்த நேற்றுமுன்தினம் தனது 'சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் பதவியை துறந்தார். நன்றி தினகரன்
அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் தொடர்பான விசாரணை விரைவில்
அமைச்சர் சரத் வீரசேகர IGPக்கு உத்தரவு
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியொருவரை, துப்பாக்கி முனையில் முழந்தாளிடச் செய்து அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் நேற்று (16) முறைபாடொன்றை பதிவு செய்திருந்தது.
சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரான இராஜாங்க அமைச்சரை, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு முறைபாட்டாளர் தரப்பு கோரியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றால், விசாரணைகளை முன்னெடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்டுள்ள முறைபாடு குறித்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன் - நன்றி தினகரன்
பதவி விலகல் மட்டும் போதாது; லொஹான் ரத்வத்த கைதுசெய்யப்பட வேண்டும்
சுமந்திரன் எம்.பி கோரிக்கை
சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த பதவி விலகியமை மாத்திரம் போதுமானது கிடையாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சுமந்திரன் எம்.பி இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டு, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார். நன்றி தினகரன்
கும்பாபிசேகத்தில் விதி மீறல்; ஆலய குருக்கள் உட்பட 6 பேருக்கு கொவிட் தொற்று
- 9 பேருக்கே அனுமதி; 20 பேருக்கு அதிகமானோர் பங்குபற்றல்
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி கும்பாபிசேகம் இடம்பெற்ற நிலையில், சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டவர்களிடம் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஆலய குருக்கள் 6 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாவிசேகம் நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரப் பிரிவினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. தற்போதைய கொவிட் பரவல் நிலையை அடிப்படையாக கொண்டு ஆலய நிர்வாகத்தினர், உபயகாரர் என 9 பேருக்கே சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
ஆனால், குறித்த ஆலயத்தில் 20 பேருக்கு மேல் நிற்பதாகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து அங்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி ஆலயத்தில் நின்ற 20 பேரிடமும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் ஆலய குருக்கள் உட்பட 6 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொற்றாளர்களும், அவர்களுடன் தொடர்புடையவர்களும் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்) - நன்றி தினகரன்
நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி
- ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் வரவேற்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நியூயோர்க் நகரை அடைந்துள்ளார்.
அந்நாட்டு நேரப்படி, 18ஆம் திகதி பி.ப 2.30 மணியளவில், நியூயோர்க் ஜோன் எஃப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினரை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் வரவேற்றார்.
'கொவிட்-19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி' என்ற தொனிப்பொருளில், 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது.
இதனையொட்டிய வெளிநாட்டு அமைச்சுகள் ரீதியிலான கூட்டத்தொடர், நாளை முற்பகல் ஆரம்பிக்கவுள்ளதோடு, இந்தக் கூட்டத்தொடர்களில் பங்கேற்பதற்காக, அரச தலைவர்கள் பலரும், நியூயோர்க் நகரைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றனர்.
அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாவது நாள் முற்பகல் வேளையில், ஜனாதிபதி தனதுரையை ஆற்றவுள்ளார்.
அத்துடன், 23ஆம் திகதி இடம்பெறவுள்ள உணவுக் கட்டமைப்புக் கூட்டத்தொடரிலும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள எரிசக்தி தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலின் போதும், ஜனாதிபதி தனது கருத்துகளை முன்வைக்க எதிர்பார்த்திருக்கிறார்.
இதற்கிடையே, கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடன், இரு தரப்புக் கலந்துரையாடல்களையும் ஜனாதிபதி அவர்கள் மேற்கொள்ளவுள்ளார்.
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும், ஜனாதிபதியுடன் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment