மெல்பன் 3 C R வானொலி தமிழ்க்குரல் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
நண்பர் சண்முகம் சபேசன் ஒருநாள் தங்கள் வானொலிக்கு கலை , இலக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு தொடர் உரை நிகழ்த்த முடியுமா..? எனக்கேட்டார்.
அவரது நிகழ்ச்சி பிரதி
செவ்வாய்க்கிழமைகளில் மெல்பனில் Fitzroy என்ற இடத்தில் இயங்கிய வானொலி கலையகத்திலிருந்து ஒலிபரப்பாகியது.
அவர் தமது கடமை முடிந்து
அங்குசென்று, நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்பார்.
மிகுந்த அர்ப்பணிப்புணர்வோடு அதனை சுமார் இருபத்தியைந்து வருட காலமாக செய்துவந்தவர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடத்தில் அபரிமிதமான நம்பிக்கையும், நேசமும் கொண்டிருந்தவர். வன்னிக்குச்செல்லும்போதெல்லாம் அவரைச் சந்தித்து மீண்டிருக்கும் சபேசன், 3 C R வானொலி தமிழ்க்குரல் நிகழ்ச்சியை புலிகளின் குரலாகவே
நடத்தியிருந்தாலும், இடைக்கிடை கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம்
தந்தவர்.
அத்துடன் நாம் நடத்திவரும்
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் செய்திகளையும் சமூகஅறிவித்தலாக வெளியிட்டவர். இந்தத்
தன்னார்வத்தொண்டு நிறுவனம் 1988
இல் தொடங்கப்பட்ட காலத்தில் பாரதியின் கருத்தையே
அதன் அறைகூவலாக விடுத்திருந்தோம்.
இதனைத்தெரிந்துகொண்ட சபேசன், ஒருநாள் என்னை கலையகத்திற்கு அழைத்து அவரது நண்பர் ரவிகிருஷ்ணாவிடம் சொல்லி என்னை நேர்காணல் செய்து ஒலிபரப்பினார்.
இலங்கை மாணவர் கல்வி நிதியம் பற்றிய அந்த நேர்காணல் பின்னர் நண்பர் குகநாதன் பிரான்ஸிலிருந்து நடத்திய பாரிஸ்
ஈழநாடு இதழிலும் ரவிகிருஷ்ணாவின் பெயரோடு வெளியானது.
அதனையடுத்தே சபேசன், என்னை கலை, இலக்கியம் சார்ந்த தொடரை
எழுதச்சொன்னார். அத்துடன் என்னையே கலையகத்திற்கு வந்து எனது பிரதியை வாசிக்குமாறும்
கேட்டுக்கொண்டார்.
அக்காலப்பகுதியில் எனக்கு இரவுநேர வேலை. 3 C R
கலையகத்திற்கு செல்வதும் சாத்தியமில்லை. எனது
நிலையை சபேசனுக்குச்சொன்னேன்.
“ அதனால் என்ன….. பூபதி …தொடரை எழுதி அனுப்புங்கள்.
நானே வாசித்து ஒலிபரப்புவேன் “ என்றார். அவ்வாறு
எழுதப்பட்ட தொடரும் மகாகவி பாரதியிலிருந்தே
ஆரம்பமானது.
மகாகவியின் கவிதைகளையோ, கட்டுரைகளையோ, கதைகளையோ, ஏனையோர்
எழுதிய பாரதி சம்பந்தப்பட்ட ஆய்வுகளையோ முன்வைத்து அதனை எழுதாமல், பாரதியின் மற்றும்
ஒரு தனிப்பட்ட வாழ்வின் பக்கத்தையே ஆதரத்துடன் எழுதினேன்.
பெண்விடுதலை பற்றி எழுதியிருக்கும் பாரதி, ஒரு சந்தர்ப்பத்தில்
தனது மனைவி செல்லம்மாவை கோபத்தில் கைநீட்டி அடிக்கத்தயாரான சந்தர்ப்பம் அது. இதனைக் கேட்டால் எமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
பாரதி மகாகவிதான் ! சந்தேகம் இல்லை ! ஆனால், அவரும் ஒரு
சாதாரண மனிதர்தான். அவருக்குள்ளும் கோபவுணர்ச்சி இருக்கும். அதனைத்தான் அவர் ரௌத்ரம்
பழகு என்றும் சொல்லியிருப்பார். நாம் அதனை
தர்மாவேசம் என்று புரிந்துகொண்டிருக்கின்றோம்.
இனி அந்த குறிப்பிட்ட
மறுபக்கக் கட்டுரைக்கு வருகின்றேன்.
ஐந்து பக்கங்களில் அக்கட்டுரை அமைந்திருந்தது. விரிவஞ்சி
இங்கே சுருக்கமாகத்தருகின்றேன். இதில் தவிர்க்கப்பட்ட
பகுதிகளை மற்றும் ஒரு பாரதி தரிசனம் ஆக்கத்தில் பதிவுசெய்வேன்.
அற்பாயுளில் மறைந்தாலும், தமிழ் வாழும்வரையில் தன் நாமமும்
வாழத்தக்கதாய் - ‘அமரகவியாக ‘ வாழ்பவர் மகாகவி பாரதி.
சோதனையிலும் வேதனையிலும் வாழ்ந்து, சாதனை படைத்த இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞன், சிந்தனையாளர்.
‘ புரட்சி ‘ என்ற சொல்லை தமிழுக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்தினார்.
பூமிப்பந்தெங்கும் அவரது சிந்தனையின் தாக்கம் ஆழமாக வேரூன்றியுள்ளது. அவரின் பாடல்கள் உலகெங்கும் செவிக்கினிய இசையுடன் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன.
இந்த மகாகவியின்
வாழ்வில் பல பக்கங்களை அறிவோம். அவருடன் வாழ்ந்தவர்களினால் அறியப்பட்ட பக்கங்கள்
அநேகம்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிர வாதிகளின் பக்கம்
நின்ற பாரதி – சுவாமி விவேகானந்தரின் சீடரான நிவேதிதாதேவியை சந்தித்தபின்னர் மனம் குழம்பியிருந்த
கணங்களும் உண்டு.
சுதந்திர போராட்ட காலத்தில் திருநெல்வேலியில் மணியாச்சி
ரயில் நிலையத்தில் தீவிரவாதி வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட சப் – கலெக்டர் ஆஷ்துரையின் படுகொலையின் பின்னணியில் பாரதியும் இருந்ததாக
ஆதரங்கள் கூறப்படுவதுண்டு.
மரத்தினாலான ஒரு அம்பாள் சிலையின் உள்ளே குறிப்பிட்ட ரிவால்வர்
வைக்கப்பட்டு, அது வாஞ்சிநாதனிடம் சேர்ப்பிக்கப்பட்டதாகவும்,
இந்த யோசனைக்கு துணை நின்றவர் பாரதி எனவும்
கூறப்பட்டதாக, இலங்கையில் பாரதி நூற்றாண்டு கொண்டாடப்பட்ட வேளையில் ( 1982
இறுதிப்பகுதியில்
) கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில்
உரையாற்றிய தமிழ்நாடு முன்னாள் ஜனசக்தி ஆசிரியரும்
இடதுசாரி அரசியல் பிரமுகருமான தா. பாண்டியன் பேசுகையில் குறிப்பிட்டார்.
எனினும் பாரதிக்கும் புரட்சி இயக்கத்திற்கும் மத்தியில்
நிகழ்ந்த பல உண்மைகளை – சந்தேகங்களை தமிழகத்தின் பிரபல பாரதி இயல் ஆய்வாளர் ரகுநாதன்,
தமது “பாரதியும் புரட்சி இயக்கமும் “ என்ற நூலில் விளக்கியுள்ளார்.
பாரதியும் கஞ்சாவும்
பாரதி கஞ்சா புகைக்கும்
பழக்கம் உள்ளவர். கஞ்சா, அவருக்கு அளித்த பரிசு – அவரது கால் பாதங்களில் ஆணி ( சதை
) வளர்ந்தது.
பாரதி நடக்கும்போது கெந்துவாராம்.
கஞ்சாவுக்கு அவர் அடிமைப்பட்டுத்தான் இருந்தார்.
அவருடன் நெருங்கிப்பழகிய
சுத்தானந்த பாரதி, தமது கவிக்குயில் பாரதியார்
என்ற நூலில் பல சுவாரசியமான சம்பவங்களை விபரிக்கிறார்.
“ மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்
“என்று பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் – பெண் விடுதலைக்கு ஆதரவாகவும் குரல்கொடுத்தும்
பாடியவர் பாரதி.
அத்தகைய பாரதியும் கூட
தமது மனைவி செல்லம்மாவை ஆத்திரத்தில் கைநீட்டி அடிக்கப்போனாராம்.
பாரதியும் மனிதன்தானே
!?
இச்சம்பவத்தை பாருங்கள்:
சுத்தானந்த பாரதி சொல்கிறார்:
“ ஒரு மதியம் சாப்பிடச்சென்றோம். அப்பாத்துரை வீட்டில்
சமபந்தி நடக்கவில்லை. நெல்லையப்பர் வெளியில்
உட்கார்ந்திருந்தார். அப்பாத்துரை மாமியார் வைதீகம். அவரைக்கண்டால் பாரதியார் அடங்கிப்போவார். நாங்கள் சாப்பிட்ட பிறகே பரலிக்கு ( நெல்லையப்பர்
) இலைபோட்டார்கள். பாரதியார் வெற்றிலைப்பெட்டியைக்
காலி பண்ணினார். நான் முதலில் இருப்பிடம் சென்றேன். அங்கே தங்கம் ( பாரதியாரின் மகள்
தங்கம்மாள் ) என்னை வரவேற்றாள். ஆர்மோனியம்
சுருதி கூட்டிப்பாடினாள்.
அதற்குள் பாரதியார் வந்துவிட்டார். உடனே “ அது கொண்டா
“என்றார்.
மனைவி மக்கள் “ வேண்டாம்
“ என்று தடுத்தனர்.
தங்கம் அவர் முன் நகர்ந்துசென்று “கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல், பஞ்சாமிர்தம்
பருகுவது எக்காலம் “ என்று பாடி, “அப்பா, அது வேண்டாம் என்கிறார் சித்தர் “ என்றாள்.
பாரதி: அவன் துறவி சொன்னான்.
நான் துறவியா..? எனக்கு வேண்டும்.
தங்கம் : இல்லறத்திலிருந்து
துறவறத்துக்குப்போக வேண்டாமோ ?
பாரதி: எனக்கு வேண்டும்.
தங்கம்: அன்று துறவு
வேண்டும் என்றாயே…?!
பாரதி மனைவி செல்லம்மா:
“ அப்படிக்கேளம்மா “
மனைவி இப்படிச்சொன்னதும்,
ஆத்திரமுற்ற பாரதி செல்லம்மாளை கைநீட்டி அடிக்க எழுந்தார்.
தங்கம் : “ இதுதானோ.. பெண் விடுதலை..? இதுவா உன் விடுதலை.
பெண்மை வாழ்கவெனப் பாடினாயே..?
உடனே பாரதியார் திகைத்து
நின்றார். சட்டென்று தங்கத்தின் காலைப்பிடித்துக்கொண்டு, “ நீ… சொல்வது சரி… உண்மை. என்னை மன்னிக்கவேண்டும்.
தேவி… ஓம் பராசக்தி – ஓம் பராசக்தி “ என்று
ஏழெட்டுத்தரம் சொல்லி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தங்கம் : “எழுந்திரு அப்பா. மன்னித்தேன் “
பிறகே பாரதியார் அமைதியுடன்
அமர்ந்தார்.
மறுநாள், எழுத்துப்பணம் நாற்பது ரூபாய் வந்தது. சினப்புயலும்
வந்தது. பணத்தை தெருவில் வீசி எறிந்து கூச்சலிட்டார். மீண்டும் பொறுக்கினார். தம்பி
நெல்லையப்பருடன் குற்றாலம் சென்றார். அங்கே பாடினார் – களித்தார். ஒரு தனிவீட்டில்
உறங்கிப்போனார்.
இப்படி எழுதுகிறார் சுத்தானந்த
பாரதியார்.
இக்கட்டுரையை நண்பர்
சண்முகம் சபேசன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் தானே வாசித்து ஒலிபரப்பிவிட்டு, அந்த ஆக்கத்திற்கு வரவேற்பிருந்ததாகவும், அதுபோன்று
முக்கிய இலக்கிய ஆளுமைகளின் மறுபக்க சம்பவங்களை எழுதித்தருமாறு சொன்னார்.
அதனையடுத்து, கவியரசு
கண்ணதாசன், ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், தி. ஜானகிராமன், அகிலன், இந்திரா பார்த்தசாரதி
மற்றும் ஈழத்து எழுத்தாளர்கள் கே. டானியல்,
டொமினிக் ஜீவா, இரசிகமணி கனகசெந்தி நாதன், கவிஞர் அம்பி, எஸ். பொன்னுத்துரை ஆகியோரின்
சில சுவாரசியமான மறுபக்கச் சம்பவங்களை எழுதிக்கொடுத்தேன்.
மகாகவி பாரதியிலிருந்து
தொடங்கி, மொத்தம் பன்னிரண்டு ஆக்கங்கள் அவ்வாறு
ஒலிபரப்பாகின.
அந்தத் தொடரை பின்னர்
கொழும்பு தினக்குரல் வார இதழ் ஆசிரியர் இராஜநாயகம் பாரதிக்கு தபாலில் அனுப்பினேன்.
அவரும் அதனை வெளியிட்டார்.
இவ்வாறு பாரதி தரிசனம்
எனக்குள் தொடர்ந்து ஊற்றெடுத்து வந்திருக்கிறது.
ஆண்டு 2000 இற்கு முன்னர் நடந்த இச்சம்பவங்களை
21 ஆண்டுகளுக்குப்பின்னர், பாரதி நினைவு
நூற்றாண்டு காலத்தில் நினைத்துப் பார்க்கின்றேன்.
( தொடரும்
)
No comments:
Post a Comment