எங்கள் நீர்கொழும்பூரிலிருந்து ஒரே காலப்பகுதியில் நாங்கள் மூவர் கொழும்பு தமிழ்ப்பத்திரிகைகளில் பணியாற்றினோம். இம்மூவரும் விதிவசத்தால் புலம்பெயர நேர்ந்தது.
தினபதி – சிந்தாமணியில்
பணியாற்றிய துணை ஆசிரியரும் நாடாளுமன்ற நிருபருமான செல்லையா செல்வரத்தினம் பிரான்ஸுக்கும்,
தினகரின் பணியாற்றிய அதன் உதவி ஆசிரியர் ஈ
. கே. ராஜகோபால் லண்டனுக்கும், இவர்களைத் தொடர்ந்து
நானும் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கும் வந்துவிட்டோம்.
நாட்டைவிட்டு வெளியேறியபின்னரும்
ஊடகத்துறையுடன் எமது உறவு நெருக்கமாகவே தொடருகின்றது.
நண்பர் செல்வரத்தினம் எனது பால்யகால நண்பர். அவரது
தந்தையார் செல்லையா, நீர்கொழும்பில் பிரபல சுருட்டுக்கம்பனி வைத்து பலருடைய குடும்பங்களுக்கும் வாழ்வாதாரம் வழங்கியவர். அத்துடன் அன்றைய நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர். அவரும் மற்றும் பலரும் இணைந்தே அன்றைய நகரபிதா எஸ்.கே. விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் அங்கு வசித்த இந்து தமிழ்க்குழந்தைகளுக்காக 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின்போது விவேகானந்தா வித்தியாலயத்தை ஸ்தாபித்தார்கள். அன்று 32 மாணவக்குழந்தைகளுக்கு ஏடு துவக்கப்பட்டு வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்டது.
அச்சமயம் அந்தப் பாடசாலையின் முதல் மாணவனாக எனது பெயர் ( சேர்விலக்கம் -01 ) இணைத்துக்கொள்ளப்பட்டது. அப்பாடசாலையிலிருந்தே நானும் எனது தாய்மாமனார் சுப்பையாவின் மகன் முருகானந்தனும் 1963 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ். ஸ்ரான்லி கல்லூரிக்குச்சென்றோம்.
அதுவரையில் நாமிருவரும்
யாழ்ப்பாணத்தையோ பனைமரங்களையோ பார்த்திருக்கவில்லை.
செல்வரத்தினத்தின் தந்தையார்
யாழ்ப்பாணத்திலிருந்து தொழில் நிமித்தம் நீர்கொழும்புக்கு இடம்பெயர்ந்து அங்கே மிகுந்த
செல்வாக்குடன் வாழ்ந்தவர். ஶ்ரீ சித்திவிநாயகர்
ஆலய பரிபாலன சபையிலும் முக்கிய பங்காற்றியவர்.
அங்கு நடைபெறும் வருடாந்த உற்சவத்தில் நான்காவது திருவிழா செல்வரத்தினத்தின்
தந்தையார் செல்லையாவின் தலைமையில்தான் வெகு
கோலாகலமாக நடக்கும். அவர்தான் எங்கள் ஊருக்கு யாழ்ப்பாணத்திலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும்
பிரபல நாதஸ்வர – தவில் வித்துவான்களை அழைத்துவந்து விடிய விடிய கச்சேரிகள் நடத்தி அறிமுப்படுத்தியவர்.
அவர்தான் எங்கள் ஊருக்கு சின்னமேளம் நடன தாரகைளையும் அறிமுகப்படுத்தினார்.
ஒரு தடவை பெங்களுர் ரமணி அம்மாவையும் அழைத்து நிகழ்ச்சி நடத்தினார்.
வித்தியாலயத்தினை தரமுயர்த்தும் பணிகளிலும் வர்த்தகப்பிரமுகர்
செல்லையா, பெற்றோர் ஆசிரியர் சங்கத்திலும் இணைந்து செயல்பட்டவர்.
அவர் மறைந்தபோது ஊரே
துக்கம் அனுட்டித்தது. அப்போது நண்பர் செல்வரத்தினம்
தினபதி – சிந்தாமணியில் பணியிலிருந்தார்.
அங்கிருந்து சிரேஷ்ட
ஊடகவியலாளர்கள் தில்லைநாதன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் அந்த இறுதி நிகழ்விற்கு வருகை
தந்திருந்தனர்.
தந்தையிடமிருந்த சமூகப்பற்றுணர்வு செல்வரத்தினம் மற்றும்
அவரது அண்ணன் நவரத்தினம் ஆகியோரிடமும் இருந்தது. நவரத்தினம் என்னுடன் ஆறாம் வகுப்பு வரையில் கற்றவர். நாமனைவரும் இணைந்துதான் விஜயரத்தினம் கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தை 1972 ஆம் ஆண்டு ஸ்தாபித்தோம்.
அக்காலப்பகுதியில் நான்
வீரகேசரி நீர்கொழும்பு பிரதேச நிருபராகியிருந்தேன். நண்பர் செல்வரத்தினம் கொழும்பில்
ஒரு தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.
எதிர்பாராதவகையில் எனக்கு
கொழும்பு காலிமுகத்திடலில் வீதி அகலமாக்கும் திட்டத்தில் தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் பணி கிடைத்தது.
அதற்காக தினமும் நான் காலையிலேயே கொழும்புக்குச்செல்லவேண்டும்.
அச்சமயம் ஒரு பிரபல இரட்டைக்கொலை
வழக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு வந்தது.
தென்னிலங்கையில் ஹக்மனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. டீ. சமரநாயக்கா
சம்பந்தப்பட்ட 1971 ஆம் ஆண்டில் நடந்த இரட்டைக்கொலை வழக்கு.
அப்போது எமது பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் என்னை
அழைத்து, அந்த வழக்கு பற்றிய செய்திகளை உடனுக்குடன் எழுதி அனுப்பச்சொன்னார்.
எதிர்பாராமல் எனக்கு
கொழும்பில் கிடைத்திருக்கும் வேலை பற்றிச்சொன்னதும், “ அவ்வாறெனின், உமது ஊரிலேயே ஒருவரை இந்த நிருபர்
வேலைக்குத் தெரிவுசெய்து தாரும் “ என்றார்.
ஒருநாள் நண்பர் செல்வரத்தினத்தை எமது பழைய மாணவர் மன்றத்தின் காப்பாளர்களில் ஒருவரான மருத்துவர் சோ. பாலசுப்பிரமணியத்தின்
( இவர் அமைச்சர் செல்லையா குமாரசூரியரின் நெருங்கிய உறவினர் ) கிளினிக்கிற்கு அழைத்துசென்று, அங்கிருந்து ஆசிரியர் சிவப்பிரகாசத்தை தொலைபேசியில்
தொடர்புகொண்டு செல்வரத்தினத்தை அறிமுகப்படுத்தினேன்.
அதன்பின்னர் செல்வரத்தினம் நீர்கொழும்பு நிருபரானார். அவர் எழுதிய குறிப்பிட்ட வழக்கின் செய்திகள் வீரகேசரியின் முன்பக்கங்களில் வெளிவந்தன. இதுபற்றி எனது சொல்லமறந்த கதைகள் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன்.
எதிர்பாராத வேளையில்
எனக்கு உதவமுன்வந்த செல்வரத்தினம், பின்னர்
தனது முயற்சியினால் தினபதி – சிந்தாமணி பத்திரிகையில்
இணைந்தார்.
நண்பர் செல்வரத்தினம்
இலக்கிய ஈடுபாடுமிக்கவர். நாம் மல்லிகை நீர்கொழும்பு
பிரதேச சிறப்பிதழ் வெளியிட்டபோது அதிலும் எழுதியவர். அத்துடன் எமது வளர்மதி கையெழுத்து
சஞ்சிகையிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. அக்காலப்பகுதியில் சாகித்திய மண்டலம்
நடத்திய கட்டுரைப்போட்டியிலும் வெள்ளிக்கிண்ணம் பரிசுபெற்றவர்.
நாம் இணைந்து செயற்பட்ட வளர்மதி நூலகம், நீர்கொழும்பு
இலக்கிய வட்டம், பழைய மாணவர் மன்றம், இந்து இளைஞர் மன்றம் ஆகியனவற்றிலிருந்து பல ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தோம்.
எனது முதலாவது கதைத்தொகுதி
சுமையின் பங்காளிகள் நூல் தேசிய சாகித்திய
விருதுக்கு ( 1975 இல் ) தெரிவாகியிருக்கும் செய்தியை வானொலியில்
கேட்டுவிட்டு ஓடோடி வந்து சொன்னவரும் நண்பர் செல்வரத்தினம்தான். பின்னர் எங்கள் ஊரில்
எனக்காக நடத்தப்பட்ட பாராட்டுவிழாக்களுக்கும் செல்வரத்தினம் காரணமாகவிருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த
எமது ஆசான் பண்டிதர் க. மயில்வாகனன் நூற்றாண்டு விழாவுக்கு நான் சென்றிருந்தபோது செல்வரத்தினம்
அவர்களின் வீட்டில் தங்கியிருந்தே எனது நிகழ்ச்சிகளில் பங்குபற்றினேன்.
இவரைப்போன்று நீர்கொழும்பிலிருந்து 1974 காலப்பகுதியில் கொழும்பிற்கு ( தினகரனுக்கு ) வேலைக்கு வந்துகொண்டிருந்தவர்தான் நண்பர் ராஜகோபால். முன்னர் யாழ். ஈழநாடுவில் பணியாற்றியவர். புகழ் பெற்ற நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரே தடவையில் பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும்போது அருகே நகர்ந்த படகுகளில் சென்ற பத்திரிகையாளர்களில் ஒருவர்தான் இந்த ராஜகோபால். இவருடன் பயணித்த எனக்குத் தெரிந்த மற்றும் ஒரு பத்திரிகையாளர் மூர்த்தி தற்போது கனடாவில் வசிக்கிறார்.
ராஜகோபால், வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவுக்கு அன்னபூரணி
என்ற கப்பலை ஓட்டி சாதனை புரிந்த ஈழத் தமிழர்கள் பற்றியும் ஒரு தொடரை
எழுதி, பின்னர் அதனை நூலுருவாக்கியவர்.
அதுமட்டுமல்ல, அமரர் பண்டாரநாயக்கா பற்றியும் ஒரு சிறிய நூலை எழுதி,
அன்னாரின் துணைவியார் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவிடம்
சேர்ப்பித்தவர். இரண்டு நூல்களும் ஒரு பத்திரிகையாளனின்
பார்வையில் எழுதப்பட்டவை.
ராஜகோபால் வல்வெட்டித்துறையைச்சேர்ந்தவர். இவர்
மானிப்பாயைச்சேர்ந்த குடும்பத்தில் பெண் எடுத்தவர். இவர்களது திருமணத்திற்கு யாழ். குடாநாட்டைச்சேர்ந்த எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அதற்கு இவர் யாழ். ஈழநாடுவில் பணியாற்றியதும் எழுத்தாளராகவிருந்து சாதனையாளர்கள் பற்றி எழுதியதும் முக்கிய காரணமாகும்.
ராஜகோபாலின் மனைவி ராகினியும்
அவரது சகோதரி ( இரட்டைச்
சகோதரிகள் ) விநோதினியும் தமிழ்நாட்டில் நடனம் பயின்றவர்கள்.
இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில்
நடந்த நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடன நிகழ்ச்சி நடத்தும்போது அவர்களின்
வயது பதினைந்து.
திருமணத்தின் பின்னர் ராஜகோபால் - ராகினி தம்பதியர் கொழும்பில் பம்பலப்பிட்டியில் தங்கியிருந்தனர். ராஜகோபாலின் எழுத்துக்களை யாழ். ஈழநாடுவில் படித்திருக்கின்றேன். அத்துடன் எழுத்தாளர்கள் கே. டானியல், மல்லிகை ஜீவா, மற்றும் தோழர் பொன்னம்பலம், தங்கவடிவேல் மாஸ்டர் ஆகியோரினதும் நல்ல நண்பர் என்பதையும் அறிந்திருந்தேன்.
ராஜகோபாலின் மனைவி ராகினியின்
ஒரு அக்காவைத்தான் எனது மற்றும் ஒரு நண்பர்
கலைஞர் ஏ. ரகுநாதன் திருமணம் முடித்திருந்தார். ரகுநாதனுக்கு ஒருநாள் பம்பலப்பிட்டி
சரஸ்வதி மண்டபத்தில் பாராட்டுவிழா நடந்தது.
சோவியத் தூதரகத்தின்
தகவல் பிரிவில் பணியாற்றிய நண்பர் எழுத்தாளர் மு. கனகராஜனுடன் அந்த விழாவுக்குசென்றபோது,
அவர் ராஜகோபாலை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
ராஜகோபால், நான் நீர்கொழும்பு
என்பதை தெரிந்துகொண்டதும், தனது மனைவி ராகினிக்கு
எமது ஊர் விஜயரத்தினம் கல்லூரிக்கு இடமாற்றம் கிடைத்திருப்பதைச்சொல்லி, தங்களுக்கு அங்கு ஒரு வீடு வாடகைக்கு பார்த்துத்தருமாறு
கேட்டார்.
“ எள்ளென்றால் எண்ணெய் “ ஆகிவிடும் இயல்புள்ள எனக்கு,
பத்திரிகை உலகில் மற்றும் ஒரு நண்பர் கிடைத்திருக்கும் புளகாங்கிதத்தில் எங்கள் ஊரில் எமது வீட்டருகே ஒரு வீட்டை வாடகைக்குப்பார்த்து கொடுத்தேன்.
அச்சமயம் கல்லூரியின்
பழைய மாணவர் மன்றத்தில் நானும் நண்பர் செல்வரத்தினமும் இணைந்திருந்தோம். மன்றத்தின்
மற்றும் ஒரு காப்பாளரான அதிபர் வ. சண்முகராசாவும்
எமது குடும்ப நண்பர். அத்துடன் இணுவிலைச்சேர்ந்த கலைஞருமாவார்.
ராகினி – ராஜகோபாலை அவருக்கு
அறிமுகப்படுத்தினேன். அன்றிலிருந்து அவர்கள்
இருவரும் நீர்கொழும்பு வாசிகளாயினர். அத்துடன் கல்லூரியிலும் எமது இந்து இளைஞர் மன்றத்திலும் நடந்த பல விழாக்களுக்கு
ராகினியின் மாணவிகள் நடன நிகழ்ச்சிகள் வழங்கினர்.
அனைத்துலக சிறுவர் தின விழா நடந்தபோது ராகினி சில நாட்டிய நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி ஊர்
மக்களின் பாராட்டைப்பெற்றார்.
ராஜகோபால் – ராகினி தம்பதியர் எங்கள் குடும்பத்தில்
ஒருவராக நெருங்கிப்பழகினார்கள். எனது தங்கை
திருமணமானபோது ராகினிதான் மணமகளை அலங்காரம் செய்வித்தார்.
ஊரில் நடந்த விநோத உடைப்போட்டியில்
எனது மூத்த குழந்தை பாரதிக்கு, பாரதிவேடம்
புனைந்து பரிசுபெறவைத்தார்.
நானும் செல்வரத்தினமும் ராஜகோபாலும் தினமும் காலைவேளையில் பஸ்நிலையத்தில் சந்தித்து பயணிப்போம். மூவரும் மூன்று பத்திரிகைகளில் ஒரே சமயத்தில் பணியாற்றியவாறே நெருக்கமான நண்பர்களாக ஊரில் நடமாடினோம். வார விடுமுறை நாட்களில் நாம் மூவரும் எம்முடன் இணைந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து வரும் நண்பர் கனகராஜனுடன் தாக சாந்திகளும் செய்துகொள்வோம்.
எங்கெங்கே தென்னையின்
சுவையான பானம் கிடைக்கும் என்பதையும் அறிந்துவைத்திருந்தோம்.
அவரவர் பத்திரிகை உலக
அனுபவங்கள் அந்த தாகசாந்தி கச்சேரிகளில் வெளிப்படும்.
ராஜகோபால் பற்றி ஒரு
சுவாரசியமான சிறுகதையும் எழுதியிருக்கின்றேன். இக்கதை எனது நினைவுக்கோலங்கள்
தொகுதியில் வெளிவந்துள்ளது.
காலம்செய்த கோலம் எம்மூவரையும்
பரதேசிகளாக்கிவிட்டது.
ராகினி லண்டன் சென்றபின்னரும்
தனது நடனத்துறையை கைவிடவில்லை. அங்கே நடனப்பள்ளி
நடத்தி தொடர்ச்சியாக பல மாணவிகளை பயிற்றுவித்துவருகிறார்.
இலங்கையில் பிரபல நடன நர்த்தகி சாந்தா பொன்னுத்துரையின்
மாணவியாக நடனம் பயிலத்தொடங்கிய ராகினி, தனது 14 வயதில் அரங்கேற்றம் கண்டவர். அந்த அரங்கேற்றம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்தது. ராகினியின் நாட்டியாலயா நடனப்பள்ளி லண்டனில் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் கடந்த 36 வருடகாலமாக இயங்கிவருகிறது. நூற்றுக்கணக்கான மாணவிகள் இவரிடம் நடனம் பயின்றனர். இதுவரையில் முப்பதிற்கும் மேற்பட்ட அவரது மாணவிகள் அரங்கேற்றம் கண்டுவிட்டனர்.
ஒரு தடவை நாட்டியப்பேரொளி
பத்மினி, ராகினியின் மாணவி ஒருவரின் அரங்கேற்றத்திற்காக அமெரிக்காவிலிருந்து சிறப்பு
அதிதியாக வருகை தந்திருந்தார்.
பத்மினிக்கும் ராகினி
என்ற பெயரில் ஒரு தங்கை இருந்தார். அவரும் நடன நர்த்தகிதான். பத்மினியைப்போன்று பல படங்களில் நடித்தவர். திருவாங்கூர் சகோதரிகளான லலிதா – பத்மினி – ராகினி
அறியப்பட்டிருந்தாலும், இவர்களில் பத்மினி மாத்திரம் நட்சத்திரமாக ஜொலித்தவர்.
பத்மினியின் நினைவு தினம்
இம்மாதம் ( செப்டெம்பர் ) 24 ஆம் திகதி.
எதிர்பாராதவகையில் இந்தப்பதிவு பத்மினியின் நினைவு மாதத்தில் வெளியாகிறது.
மனதில் சோர்வு வரும்போது
பத்மினியின் புகழ்பெற்ற நடனங்களை நான் பார்த்து ரசிப்பதுண்டு. அவரது வஞ்சிக்கோட்டை வாலிபன், மன்னாதி மன்னன், இருவர்
மலர், திருவருட்செல்வர், தில்லானா மோகனாம்பாள் திரைப்பட நடனக்காட்சிகளை எத்தனையோ தடவை
மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்துள்ளேன்.
புகழ்பெற்ற நடன நர்த்தகி
நாட்டியப்பேரொளி எங்கள் ராகினியின் மாணவியின் நடன அரங்கேற்றத்திற்கு வந்த சமயத்தில்
தனது உடன்பிறப்பான ராகினியையும் நினைத்துக்கொண்டே எங்கள் ராகினியை அணைத்திருப்பார்.
ராஜகோபாலுக்கு பல வழிகளிலும்
உற்றதுணையாக விளங்கும் ராகினி, 1977 ஆம் ஆண்டு முதல் குழந்தை சர்மிணியை கருவில் சுமந்து
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில்தான்
ஜே.ஆர். காலத்தில் கலவரம் வந்தது.
எங்கள் ஊரும் தாக்கப்பட்டது. அதனால் ராகினி – ராஜகோபால் மிகுந்த அதிர்ச்சியோடு இருந்தனர்.
அச்சமயம் எங்கள் ஊருக்கு
அருகாமையில் கட்டான தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் புடவைக் கைத்தொழில் அமைச்சருமான
விஜயபால மெண்டிஸை தொடர்புகொண்டு எங்கள் ஊர்
தமிழ்ப்பிரமுகர்கள் விசேட விமானம் ஒழுங்கு செய்து யாழ்ப்பாணத் தமிழர்களை அனுப்பும்போது, ராகினிக்கும் முன்னுரிமை
கேட்டோம்.
ராகினியை விமானத்தில் அனுப்பிவைத்தோம்.
இன்றளவும் ராகினியும் ராஜகோபாலும் என்னுடன் லண்டனிலிருந்தும் தொடர்புகளை பேணி வருகின்றனர்.
ராஜகோபால், லண்டனிலிருந்து
சில தமிழ் ஊடகங்களை எமது ஊடகத்துறை நண்பர்களுடன் இணைந்தும் - தனித்தும் வெளியிட்டார்.
தமிழன், ஈழகேசரி, புதினம்
முதலானவற்றில் இவரும் காசிலிங்கம், மாலி மகாலிங்க
சிவம் ஆகியோரும் ஈடுபட்டிருந்தனர். நண்பர்
குகநாதன் பாரிஸ் ஈழநாடு இதழை வெளியிட்டார்.
மாலி நாழிகை என்ற இதழை ஆங்கில Time சஞ்சிகை பாணியில் வெளியிட்டார். இந்த இதழ்களில்
எனது படைப்புகள் வெளிவந்த காலப்பகுதியில் நானும் அவுஸ்திரேலியா புகலிட வாசியாகியிருந்தேன்.
குகநாதனின் பாரிஸ் ஈழநாடுவில்
எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடர் வெளியானது.
காசிலிங்கத்தின் தமிழன்
பத்திரிகையில் எனது பாட்டி சொன்ன கதைகள் தொடர் வெளியானது.
பின்னர் இவை இரண்டும் தமிழ்நாட்டில்
புத்தகமாக அச்சாகி வெளியானது.
ராஜகோபாலின் ஈழகேசரியில்
நான் எழுதிய இலக்கியப் புதினங்களும் பிரேமதாசவின்
கதை என்ற தொடரும், மாரீசம் என்ற தொடர்கதை புனைபெயரிலும்
வெளியானது.
இந்த ஊடகவியலாளர்கள் அனைவரும்
யாழ். ஈழநாடு பாசறையில் வளர்ந்தவர்கள். பின்னாளில்
புகலிடத்தில் இவர்கள் மத்தியில் நிழல்போர்கள் நடந்தபோது நான் மிகவும் வருந்தி கவலைப்பட்டேன்.
ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள்
மத்தியில் நிழல்போர்கள் வருவதை தவிர்க்கமுடியாது. எழுத்தாளர்களிடையிலான ஈகோ பிரச்சினைகள் இன்று நேற்று
தொடங்கவில்லை.
சிவபெருமான் – நக்கீரன்
முதல், கம்பர் – ஒட்டக்கூத்தர் முதல் சமகால
எழுத்தாளர்கள் வரையில் தொடரும் பிரச்சினை.
ஆனால், இணையக்கூடிய புள்ளிகள் உள்ளன. அத்தகைய புள்ளிகளிலிருந்து முரண்பாடுகளை படிப்படியாக களையமுடியும்.
நான் இலக்கியப்பிரதிகளும் செய்திகளும் எழுதத்தொடங்கிய
காலம் முதல் படைப்பாளிகளுடனும் ஊடகவியலாளர்களுடனும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு
அப்பால் நேசம் பாராட்டி வருபவன்.
முரண்பாடுகள் ஒருவரின்
மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடலாகாது என்பதில் உறுதியாக இருப்பதனால், எழுத்துலக
வாழ்வில் எனது அடையாளத்தை இந்த முகநூல் கலாசார உலகிலும் ( அந்தக் கணக்கு இல்லாமல் ) தக்கவைத்துக்கெண்டிருக்கின்றேன்.
இயல்புகள்தான் ஒருவரின்
அடிப்படை அழகு !
( தொடரும்
)
letchumananm@gmail.com
No comments:
Post a Comment