புலம்பெயர்ந்தோரின் அடையாளங்கள் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .

எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் பிறந்து, வளர்ந்தோம். ஆம், நாம் சுவாசித்த அந்தக் காற்று, ஓடி விளையாடிய நிலம், படித்த பள்ளிக் கூடம், பேசிப்பழகிய உறவுகள் அத்தனையும் இன்று எம்மிடம் இல்லை. எமது பாரம்பரியம் என்பது; நமது பண்பாடு என்பது; நாம் வாழ்ந்த நாட்டு பழக்க வழக்கங்களே. அந்தப் பேசிய மொழி, உண்ட உணவு, அந்த உறவுகள் அத்தனையும் எம்மை உருவாக்கியுள்ளன.


ஆம், நாம் இத்தனைக்கும் வாரிசுகள். பலநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த தொடர்பு அறுந்து போகாது எம்முடன் வாழ்ந்த ஒன்று. நாம் மண்வீடுகட்டி விளையாடிய அந்த மண்ணினை உதறி விட்டு, இன்று புதிய சூழலில் வந்து நிற்கிறோம்.

பொருளாதார முன்னேற்றத்தால் ஏற்பட்ட சொகுசுகள் அத்தனையும் எம்மை முற்றாக மாற்றி விடவில்லை. நாம் விட்டு வந்த நிலத்தின் பாரம்பரியம் அத்தனையும் எமது பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் நாம் ஆர்வம் காட்டுகிறோம். அதை முற்றாக நாம் இங்கு நம்மால் கொண்டுவரமுடியாவிட்டாலும் எம்மால் முடிந்த அளவுக்கு அதை நாம் செய்து வருகிறோம். தமிழ் பாடசாலைகள், இந்துக் கோயில்கள், இவையாவும் நமது பாரம்பரியத்தில் நாம் கொண்ட பற்றின் வெளிப்பாடு.

எமது பிள்ளைகளுக்கு நாம் எமது பாரம்பரியத்தைக் காட்டும் திறவுகோலாக இவற்றை ஆக்கி உள்ளோம். Multicultural சமுதாயத்தில் வாழும் எமது வாரிசுகளுக்கு, நாமும் ஒரு சிறந்த பண்பாட்டின் வாரிசுகள் என்ற எண்ணத்தை; அதனால் ஏற்படும் சுயமரியாதையை; இது வளர்க்கும் என நம்புகிறோம்.

பல இன மக்கள் வாழும் சமுதாயத்திலே, உனக்கான ஓர் அடையாளம் இல்லாவிட்டால் நீ மதிக்கப்பட மாட்டாய். ஆனாலும் நாம் மாறிக் கொண்டும் இருக்கிறோம். இதை மறுக்க முடியாது. இந்த நிலையிலே இங்கு வாழும் எமது வாரிசுகள் ; இவர்கள் எமது வாரிசுகள் தான். ஆனால் எமது பாரம்பரியம் பண்பாடு இத்தனைக்கும் வாரிசுகளா? என்ரு கேட்டால்  கவலையுடன் இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு நாட்டின் பண்பாடு, பாரம்பரியம் என்பது அந்த மண்ணுடன் ஒட்டி உறவாடும் போது வருவது.



எமது பிள்ளைகள் நாம் வாழும் இந்தப் புதிய பண்பாட்டின் வாரிசுகளா? சந்தேகமில்லை; அவர்கள் வாழ்ந்து அனுபவிப்பது தான் அவர்களை உருவாக்குகிறது. அப்படியானால் அந்தப் புதிய பண்பாடுதான் என்ன? வீட்டிலே தமிழர். இன்னும் சரியாகச் சொல்வதானால் மாறிவரும் தமிழ் கலாசாரம், வெளியிலே பல்லினக்கலாசாரத்துக்குரிய பாடசாலை. இவைகள் எல்லாம் கலந்த இப் புதிய சமுதாயம் உருவாக்குவது தான் எமது வாரிசுகள்.

அண்மையில் எனது தம்பி - லண்டனில் வாழ்பவர் - அவர் ஒருதடவை, ‘எனது பிள்ளை Robinhood ஐப் படிப்பதை விட, ராஜராஜ சோழனைப் பற்றிப் படிப்பதை நான் விரும்புகிறேன்என்றார். காரணம், இது அவனுக்கு தனது முன்னோரும் பெரும் அரசுகளை அமைத்து ஆண்டவர்கள்; பெருமைக்குரிய சமுதாயம் ஒன்றின் வாரிசுகள் தான் நாம் என்ற தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று மேலும் அவர் கூறினார்.

இந்தப் புதிய சமுதாயத்தில் பிறந்து வளரும் வாரிசுகள் சிலருக்கு அந்த சமுதாயத்தில் இயற்கையாக வாழ்ந்து வந்தவருக்கு ஏற்படாத பற்றும் பாசமும் ஏற்படுவதும் இயற்கை. இலங்கைத் தமிழ் தந்தைக்கும் French தாயாருக்கும்  பிறந்த கலாயோகி. ஆனந்த குமாரசாமி தனது பாரம்பரியத்தை அறியத், தந்தையின் தேசத்துக்குள் புகுந்தார். அங்கு அவர் கண்டடைந்து உலகுக்கு கொண்டு வந்து சேர்த்த நாட்டின் கலைப் பொக்கிஷங்களும் தொண்டுகளும் அளப்பரியது. அதன் மூலம் அவர் ஐரோப்பியர்களின் மத்தியிலே எமது பண்பாட்டின் சிறப்பைப் பெருமைப்படுத்தினார் அல்லவா?

அண்மையில் Geography Channel இல் ஒரு நிகழ்ச்சி, லண்டனில் சீக்கியத் தாயாருக்கும் இந்து பஞ்சாபி தந்தைக்கும் பிறந்த ஒரு பெண், லண்டனிலேயே பிறந்து வளர்ந்தவர். பெற்றோரின் பாரம்பரியத்தை அறிய விரும்பி, அவர்கள் பிறந்த கிராமத்தை நோக்கிச் செல்கிறாள். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஓரளவு அறிகிறாள். தாயார் அந்த அறையில் தான் பிறந்தார் என ஒரு மூதாட்டி காட்டுகிறாள். தாயாரின் தந்தை, தாய்வழிப்பாட்டன்; சீக்கியர், சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்தவர், அவர்கள் நடத்திய போராட்ட விபரங்கள் மற்றும் அது குறித்த படங்கள் யாவும் சீக்கியரின் அமர்ததசரஸில் உள்ள பொற்கோயிலின் ஆவணங்களில் காணப்பட்டன. ஷேஷ்திர யாத்திரை செல்பவல் போல் இந்தப் பெண் அங்கு சென்று, பார்வையிட்டு, பின் இறுதியாகத் தன் அம்மா வாழ்ந்த வீட்டின் நிலத்தில் இருந்து ஒரு கல்லை ஞாபகார்த்தத்துக்கு எடுத்துக் கொண்டு தன் தேசம் திரும்புகிறாள். அத்துடன் பாட்டனாரின் சுதந்திரப் போராட்ட படங்கள் மற்றும் எவ்வளவு காலம் சிறைவாசம் அனுபவித்தார் என்ற விபரங்கள் யாவும் பார்ப்பதற்கு நெஞ்சைத் தொடுவனவாக இருந்தன. எமது பிள்ளைகளும் இவர்களில் ஒருவர் தான்.

எமது பண்பாடு என எமக்கு எமது முன்னோர் விட்டுச் சென்றவை எவை? வானளாவ உயர்ந்து நிற்கும் கோயில்கள்,எமது இலக்கியச் செல்வம், இவையே எமது பாரம்பரியத்தின் வரலாறு. சங்க நூல்களான அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம், சிலப்பதிகாரம் இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். ஏன் எமது தேவாரங்கள், பிற்பட்ட காலத்திலே ஆறுமுகநவலர் தந்த சைவவினாவிடை, மற்றும் ஒரு சுதந்திரப்போராட்டத்தின்  எழுச்சியும் வீழ்ச்சியும் இவைகள் எல்லாமும் தான் நமது வரலாற்றுப் பாரம்பரியச் செல்வங்கள்.

இன்றய உலகக் கிராமத்தில் எம்மைப் போல பல சமுதாயங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றன. பாரதி அன்று, ’தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கனும் காணோம்எனத் தமிழுக்கு ஆக்கம் தேடினான். அதே தீர்க்கதரசி சுதந்திர மண்டலத்தைக் கண்டு களிப்போம் என்றும் பாடினான். இன்று அவன் உயிரோடு இருந்திருந்தால்  பூலோகக் கிராமமாகி விட்ட இன்றய சமுதாயம் ஒன்றாக வாழ்வதைப் பார்த்து என்ன பாடி இருப்பானோ?

ஆனால் இன்று நாம் இலங்கையர் என்றதும் cricket team முத்தையா முரளிதரன் கண்முன்னே வருகிறார் என்கிறார்கள். ஆமாம், சாதனை படைத்தால் எம்மை மதிப்பார்கள். நாம் யார் என்பதும் உலகுக்குத் தெரிய வரும். கணித மேதை சீ. வி. ராமன் தமிழ் மண்ணில் பிறந்தவர். Astronomar சந்திரசேகர் பாரதி வாழ்ந்த திருவல்லிக்கேணி வாசி. இவர்கள் Nobel பரிசை வெல்லவில்லையா? எம்மவர் சாதனை புரியும் போது அவர் எந்த நாட்டின் வாரிசு என்பதை உலகம் அறியும்

இவை மூலமாக நாம் அறிவது என்ன? எமது மூதாதையர் எவ்வாறு வாழ்ந்தார்கள்; அவர்கள் எத்தகைய பண்பாட்டுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் என்பதே. எம்மவரை எமக்கு அறியத்தரும் காலக்கண்ணாடி இது.

இன்றய எழுத்துக்களும் வாழ்வும் நாளைய சமுதாயத்திற்கு நமது வாழ்க்கையைக் காட்டி நிற்கும்.



 


No comments: