.
பெருங்கவிஞன் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார். பல்லாண்டுகளாக மிகவும் தீவிரமான தளத்தில் இயங்கிய கிருபாவின் மரணம் மிகவும் துயரம் தருவதாக அமைந்துவிட்டது. உடல் உபாதைகளும், தேடிக்கொண்ட விட்டொழிக்க முடியாத போதையும் அவரை வாழ்வதற்கு வேறு நோக்கங்களே இல்லாத துயரமான தனிமைக்குள் தள்ளிவிட்டது.
மிகக் காத்திரமான கவிதைகளையும் யாராலும் பிரதியெடுக்க முடியாத 'கன்னி'யையும் தந்தார். சிற்றிதழ்களில் தொடங்கியவர், திரைப்படங்களில் பாடல்கள் எழுத முனைப்புக் காட்டினார். எழுத்தின்மீது ஆர்வம் கொண்டவர். கவிஞனாக, இருந்ததை விற்று காசாக்கியவர் இல்லை. சில வெற்றி பெற்ற கவிஞர்களைப் போல தன்னையோ தன் படைப்புகளையோ முன்னிறுத்தாதவர். உலக சாதூர்யங்களைத் துறந்தவர். தடுமாற்றங்கள், தத்தளிப்புகள், நிகாகரிப்புகளால் ஆனது அவரது வாழ்க்கை. இருப்பினும் ஆழ்ந்த பிரியத்தின் சுடரை இடைவிடாமல் தன் கவிதைகளில், நாவலில் எரியச் செய்தவர் அவர். அதனால் அவர் படைப்புகளில் வன்முறையில்லை. முளைத்தெழும் குரூரம் இல்லை.
கிருபாவுக்கு சினிமாவின்மீது பெரும் விருப்பம் இருந்தது. படிப்பில் பெரிய ஆர்வமில்லாமல் பிளஸ்டூ முடித்துவிட்டு சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்டார். தொடக்கத்தில் சினிமாவுக்கான முயற்சிகளில் இருந்தவர், சோர்வுற்ற தருணங்களில் போதைக்கு மாறினார். மொழியில் விளையாடி நுட்பமான விவரணைகளில் மெருகூட்டியதால் சுசீந்திரன் போன்ற இயக்குநர்கள் அவரைப் பயன்படுத்த எத்தனிக்கும்போது கிருபா தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்.
கன்னி நாவலுக்குப் பிறகு அவர் சில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத வாய்ப்புப்பெற்றார். அதுவும் பாதியளவில் நின்றுவிட்டது. தொடர்ந்து அவரது பிரான்சிஸ் கிருபா மொத்தக் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்தது. கவிஞர் தேவதேவனின் கவிதைகள் குறித்து மருதம் என்ற பெயரில் ஒரு தீர்க்கமான ஆவணப்படம் எடுத்தார். அதனால் அவரால் நல்ல திரைப்படங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது.
கடைசியாக அவர் எழுதிய 'ஏறக்குறைய இறைவன்' என்ற நாவல் இறுதி நிலையை எட்டியிருந்தது. அதேபோல் 'நட்சத்திர பிச்சைக்காரன்' என்ற கவிதைத்தொகுப்பையும் வெளியிடத் தயார் நிலையில் இருக்கிறது.
அவரது முதல் கவிதைத் தொகுதி 'மெசியாவின் காயங்கள்'. 'வலியோடு முறியும் மின்னல்', 'நிழலன்றி ஏதுமற்றவன்', 'சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்' போன்றவையும் அவர் எழுதி வெளிவந்த தொகுப்புகள். சுந்தர ராமசாமி விருது, மீரா விருது, சுஜாதா விருது, விகடன் விருது போன்ற அங்கீகாரங்களை படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.
இறுதியில் நோயின்பிடியில் சிக்கி பொறுக்க முடியாமல் நொறுங்கினார். அவரது படைப்புகள் மல்லிகைக் கிழமைகள் என்ற பெயரில் தொடராக வெளிவந்திருக்கின்றன. மலர் மாலைகளும் அழுகைக்குரல்களும் ஆறுதல் அஞ்சலியும் கூடி இன்று அவரது உடலடக்கம் சொந்த ஊரான பத்தினிப்பாறையில் நடைபெறுகிறது.
நன்றி https://yarl.com/forum3
No comments:
Post a Comment