வாசகர் முற்றம் – அங்கம் 15 “ புத்தகங்கள் நல்ல நண்பன் “ மெல்பன் வாசகர் – எழுத்தாளர் வி. எஸ். கணநாதன் மனம் திறக்கிறார் ! சந்திப்பு : முருகபூபதி

 


“ அம்மாவை இழந்தால் அன்புபோய்விடும். அப்பாவை இழந்தால் அறிவுபோய்விடும், மனைவியை இழந்தால் வாழ்க்கையே போய்விடும்   என்று எமது முன்னோர்கள் முன்னர் சொல்லியிருப்பதாக சிலர் கூறக்கேட்டுள்ளேன்.

ஆனால், இந்த நூற்றாண்டில் இந்த உணர்வுபூர்வமான கருத்து செல்லுபடியாகுமா..? என்று நான் யோசிப்பதுண்டு.

ஒரு பஸ் போனால் என்ன..?  மற்றும் ஒரு பஸ்ஸில் ஏறி பயணித்துவிடலாம் என்ற வாழ்க்கையை இந்த அவசர யுகம் தந்திருக்கிறது.

வாழ்க்கைத்துணை விடயத்தில்தான் அவ்வாறு ! ஆனால், பெற்றவர்களின் இடத்தை வேறு எவராலும் நிரப்பிவிட முடியாது.

Old is gold என்று சொல்லி, அதனை பொற்காலம் எனவும் , அதுவெல்லாம் ஒரு கனாக்காலம் எனவும் தங்கள் மனதை தேற்றிக்கொள்பவர்களையும் பார்த்திருப்பீர்கள்.

எனது வாசகர் முற்றம் தொடரில் இம்முறை நான் அறிமுகப்படுத்துபவர், தற்போது வாசகர் என்ற நிலையிலிருந்து மாறி,  எழுத்தாளராக எமது சமூகத்தில் அறிமுகமாகியிருப்பவர்.

தான் பிறந்த எட்டுமாத காலத்திற்குள்ளாகவே தனது அப்பாவை


இழந்திருக்கும் இவர், அதனால் தனது அறிவை இழக்கவில்லை.   தனது அம்மாவை இழக்கும்போதும் அருகில் இல்லை.  தன்னாலும் இந்த உலகத்தில் எதிர்நீச்சல்போட்டு வாழ்ந்து காட்ட முடியும் என்று நிரூபித்திருப்பவர்.

இவருக்குத்  தாயாக – தந்தையாக  நல்லாசானாக நல்ல சிநேகிதியாக  வந்திருக்கும் வாழ்க்கைத்துணைவியும் ஒரு எழுத்தாளர்தான்.

அன்பு தந்த அன்னையும், அறிவு தந்த தந்தையும்  வாழ்ந்த இடத்தில் அனைத்துமாக மனைவி இருப்பதனால்,   “ வேர் என நீ இருந்தாய்... அதனால் வீழ்ந்துவிடாதிருக்கின்றேன் “  என்று மனதுக்குள் பாடிக்கொண்டிருக்கிறார்.


அவர்தான் அவுஸ்திரேலியா  மெல்பனில் வதியும் வேலுப்பிள்ளை சுப்பையா கணநாதன். இவரை வி. எஸ். கணநாதன் என்றுதான்  அழைப்போம்.

இலங்கையின் பிரபல கட்டிடக் கலைஞரும் குத்துவிளக்கு என்ற ஈழத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும் உலகத்தமிழராய்ச்சி மாநாடு மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம்  புனரமைப்பு , தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் முக்கிய பங்காற்றியவருமான ( அமரர் ) வி. எஸ். துரைராஜாவின் அருமைத்தம்பிதான்  இந்த வி. எஸ். கணநாதன்.

குடும்பத்தில் எட்டாவது பிள்ளை கணநாதன். எட்டாவது மாதத்தில்


தந்தையை இழந்திருந்த இவரையும் இவரது சகோதரங்களையும் வளர்த்து ஆளாக்குவதற்கு அந்தத் தாய் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்...?  என்பதை கற்பனை செய்தும் பார்க்கமுடியாது.  வலிநிரம்பிய வாழ்விலும், அன்புத்துணைவரின் ஆதரவின்றி நிர்க்கதியாக நின்ற அந்தத் தாயுள்ளம்,  தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்திருக்கிறது "பிள்ளைகளே! உங்களுக்குப் படிப்பொன்றே  முக்கியம்,” என்று வலியுறுத்தி தன்னையும் சகோதரங்களையும்  வளர்த்து ஆளாக்கிய அந்த அன்னையை நன்றியோடு  கணநாதன்   முதலில் நினைவுபடுத்தினார்.

பிள்ளைகளுக்கு என்னென்ன தேவையோ அவற்றை   இயன்றளவு செய்து கொடுத்த அன்னையையும், அத்துடன்  தனது முன்னேற்றத்திற்கு காரணமான மூத்த சகோதரர்களைப்பற்றியும் சொன்னார்.   அதனை அவரது வாக்குமூலமாகவே இங்கு பதிவுசெய்கின்றேன்.

“ எமது தந்தையார் மறைந்தபின்னர்,  அம்மாவுக்கு பக்கபலமாய்


இருந்தவர் எங்கள் பெரியண்ணா பொன்னுத்துரை.  அவர்  மானிப்பாய் இந்துக்கல்லூரியில் மெட்ரிகுலேஷன்  பரீட்சையில் சித்தி அடைந்த கையோடு,  கொழும்புக்குச் சென்று, எங்கள் பெரியக்கா அத்தானுடன் அவர்களது  வீட்டில் தங்கினார்.   அவர் இரவு வேளையில் டாக்டர் சின்னத்தம்பியின் டிஸ்பென்சரியில் பணி புரிந்து,  பகலில் மருத்துவக் கல்லூரியில் பயின்றார். அம்மாவின் நிலைமையை உணர்ந்த  பெரியண்ணா,  தன் தேவைக்காக  சிறிது  பணம்  வைத்துக்கொண்டு, மீதிச் சம்பளத்தை அம்மாவுக்கு  மாதம் தவறாமல் அனுப்புவார். அப்பா இல்லாத குறையை எங்கள் பெரியண்ணா தீர்த்து வைத்தார்.

நான் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்விப் பொதுத் தராதரம் ( சாதாரணதரம் ) பயின்ற பின்னர்,  கொழும்புக்குச் சென்றேன்.  அங்கே பொறியியல் கல்லூரியில் சேர்ந்து  Chartered Secretaries பரீட்சைக்குப்   படித்து  தேர்ச்சி அடைந்து, 1963 ஆம் ஆண்டில்.  Cost and Works Accountancy படிப்பதற்காக   இங்கிலாந்துக்கு பயணித்தேன்.   

அங்கே படிக்கும் போது Industrial Work அனுபவத் தேவையின்


  நிமித்தம்,  Freemans of London என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.  சிறிது காலத்துக்குப் பிறகு Heron Petroleum Corporation இல்  சம்பள உயர்வுடன் வேலைவாய்ப்பு கிடைத்தது.  

1968 ஆம்  ஆண்டு  நான்  இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்திடுவேன் என்று அம்மாவிடம் உறுதி அளித்திருந்தேன்.  ஆனால்,  அவர் சடுதியாக  நோய்வாய்ப்பட்டு அதே வருடம் தை மாதத்தில்  இறைவனடி  சேர்ந்தார்.  அவரது   மறைவு  என்னைப்  பெரிதும்  பாதித்தது.  எம்மை வளர்த்து ஆளாக்க அவர் பட்ட கஷ்டங்களை மறக்கமுடியாது.

அதே  வருட இறுதியில்  நான்  கொழும்புக்குத்  திரும்பியதும்,  என்  அண்ணன்மார், கட்டிடக் கலைஞர் துரைராஜாவும், பல் மருத்துவர் டாக்டர் கருணாகரனும், எனது  இரு அண்ணிமாரும், எனக்கு திருமண பேச்சு நடப்பதாகச்சொன்னார்கள். சட்டத்தரணி சிவகுருநாதன் தம்பதியரின்  மகள்  சகுந்தலாவுக்கும் எனக்கும்  1969 ஆம் ஆண்டு மாசி மாதம் திருமணம் இனிதே  நடந்தது.  “ என்றார் கணநாதன்.


இவரது  சத்தியம் மீறியபோது சிறுகதைத் தொகுதி  சில மாதங்களுக்கு முன்னர் மெல்பனில் வெளியிடப்பட்டது.   அதற்கு என்னையும் அழைத்து பேசவைத்தவர்.  குறிப்பிட்ட நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியோது,                        " செய்திகளே படைப்பிலக்கியமாக உருமாறும்போது, அதனை வாசிக்கும் வாசகர்களுக்கு கிட்டும் வாசிப்பு அனுபவத்தில்,  தங்களையும் இனம்காணத்தூண்டும். சில வேளைகளில்  தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்யவும் வழிகாண்பிக்கும்.  “ என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்தப்பதிவில் இவர்  குறிப்பிடும் பல் மருத்துவர் கருணாகரன் அவர்கள்,  சிட்னியில் வதியும் எழுத்தாளர் தேவகியின் கணவர் என்பதையும்  இங்கு தெரிவிக்கின்றேன்.

 கணநாதன் அண்மையில் திரும்பிப்பார்க்கின்றேன்  என்ற சிறுகதையை எழுதியிருந்தார். அதில் 1983 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரம் பற்றியும் சித்திரித்திருந்தார்.  அக்கலவரம் கறுப்பு ஜூலை என்று இன்றளவும் பேசப்படும் இலங்கை வரலாற்றின் கறை படிந்த அத்தியாயம்.

அதனால்,  கணநாதனின் கொழும்பு வாழ்க்கை பற்றி கேட்டபோது, அவர் சொன்னதாவது:  

 “ நாங்கள் கட்டிய புதுவீடு கொள்ளுப்பிட்டி ஆர்.. டி. மெல் மாவத்தையில் இருந்தது. எங்கள் மூன்று பெண் பிள்ளைகள்,  கொள்ளுபிட்டி மெத்தடிஸ்ட் கல்லூரியில் பயின்றனர். சில  சந்தர்ப்பங்களில் என்  மனைவி  என்  தாயாரை  நினைவு  படுத்துவார்.  குடும்பங்களில்   அதே  பாசம்  கலந்த  கண்டிப்பு.  தாய்க்குப்  பின்  தாரமே.

1974 ஆம் ஆண்டு, என் மனைவி பணிபுரிந்த நிறுவனம்:  Torqued Youngs & Co, Chartered Accountants  அந்த நிர்வாகத்தின் நடைமுறையின் பிரகாரம்  என் மனைவிக்குத் தன் கணவருடன்  இங்கிலாந்துக்குப் பயணிக்க  பண உதவி அளித்தார்கள். அதை அடுத்து,  நாங்கள் குழந்தைகளை சகுந்தலாவின் பெற்றோர் பாதுகாப்பில் விட்டு இங்கிலாந்துக்குப் பயணித்தோம்.

தனால் மீண்டும் இங்கிலாந்து வாசியானேன்.

இங்கிலாந்தில் எங்களுக்கு சதா குழந்தைகளின் ஞாபகம்தான்.  இரவு நேரங்களில் மன உளைச்சலோடு அவஸ்தைப் படுவோம். தொலைபேசியில் ஒவ்வொரு ஞாயிறும் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வோம். அடுத்த இரண்டு வருடங்களில்  நாங்கள் கொழும்புக்குத் திரும்பிவிட்டோம்.

இந்தக் கால கட்டத்தில் எனக்கு துபாயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு கிட்டியது. அங்கே சில காலம் வேலையில் இருக்கும் போது,  ஒருநாள்  எனது மனைவி  உங்களுக்கு பணமா? பாசமா?  எது தேவை ..?  என்ற கேள்வியை தொலைபேசியில்  விடுத்தார்.

மனைவிமார் கேள்வியின் நாயகிகள்  அய்யா..? அப்புறம் என்ன செய்தீர்கள்..? எனக்கேட்டேன்.

  “ ஆகவே நான் ஒரு மாதம்  இராஜினாமா நோட்டீஸ் கொடுத்திட்டு சீக்கிரமா திரும்பி ஊருக்கு   வந்தேன்.                                      குழந்தைப்பாசம் உனக்கல்லவோ..!   குடும்ப பாரம் எனக்கல்லவோ ... ! “ என்று பாட்டுப்பாடவா முடியும் சொல்லுங்கள்.  

இப்படி இனிதே வாழ்ந்து கொண்டிருக்கும் போது வந்தது 1983 கலவரம்.  ஆகவே அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னைக்கு கிளம்பினோம்.

சென்னையில்  நான் ஒரு அலுவலகத்தை  தொடங்கி, ஏற்றுமதி ஆலோசகராக  செயல்பட்டேன்.  கருங்கல் சுரங்க உரிமையாளருக்கு யப்பானிய இறக்குமதியாளருடன் தொடர்பு கொள்ள இரு பகுதியினருக்கும் வழி வகுத்தேன். அதே போன்று  திருப்பூரில் பின்னல் ஆடை தயாரிப்பாளருக்கும்  ஸ்வீடன், நோர்வே நாட்டு  இறக்குமதியாளருக்கும்  இணைப்பை ஏற்டுத்த வழி வகுத்தேன். ஏற்றுமதியாளர்கள் தம் வேலையைத் திறம்படச் செய்கிறார்களா என்று கண்காணிக்கவும், தரப்படுத்தவும், (Quality controllers and field supervisors)  எங்கள் கம்பெனி செயல்பட்டது.  

எங்கள் பிள்ளைகள் மணமுடித்து தம் கணவர் வாழும் நாடுகளுக்கு புறப்பட்ட பிறகு,  அந்த அலுவலகத்தை  மூடிவிட்டு,  பணியிலிருந்து  ஓய்வு பெற்று  இந்தியாவில் கோயில் குளம் என்றும்,  அமெரிக்கா ஐரோப்பா என்று  பல நாடுகளுக்கும்  பயணங்கள் மேற்கொண்டோம்.   

2011ஆம் ஆண்டு தொடக்கத்தில் எங்களுக்கு அவுஸ்திரேலியாவில் குடிபெயர வாய்ப்பு கிட்டவும்,  மெல்பன் நகருக்கு குடி பெயர்ந்தோம்.  இங்கே  எங்கள் மூத்த மகள் குடும்பத்துடன் வாழ்கிறோம்.

தனது கடந்த கால வாழ்க்கையை நனவிடைதோய்ந்த கணநாதனிடம்,  ய்யா உங்களது வாசிப்பு அனுபவங்கள் எவ்வாறு அமைந்தன..?  “ எனக்கேட்டபோது,  அவர் சொன்னவற்றையும்  இங்கு தொகுத்து தருகின்றேன்.

“ பல எழுத்தாளர்கள் ,  தாம் சிறு வயது துவக்கம் கதைகள் வாசிப்பதும் எழுதுவதும் பழக்கம் என்கிறார்கள். ஆனால் பள்ளிப்படிப்பை விட வேறு  எந்தப் புத்தகமும் நாங்கள் வீட்டிலோ பள்ளியிலோ வாசிக்கப்படாது என்று எமது  அம்மா கண்டிப்பாக இருந்தார்.

 ஆகவே நான் என் சிறு பராயத்தில் புத்தகங்கள் வாசித்தது அரிது. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தவருக்கு படிப்பு ஒன்று தான் முக்கியம். எங்கள் ஊர் பனை மரம் போல், எந்தச் சூழ் நிலையிலும் படிப்பு எங்களைக் கைவிடாது. அது தான் சோறு போடும் என்ற திடமான நம்பிக்கையுடன் நாங்கள் வளர்க்கப்பட்டோம்.

அப்பா காலமாகிவிட்ட நாளிலிருந்து, பெரியண்ணா வேலையில் அமர்ந்திருந்தார். ஒவ்வொரு மாதமும் அவர் எங்களுக்கு கடிதம் எழுதத் தவற மாட்டார். அத்துடன் எங்களையும் அவருக்கு பதில் எழுதச் சொல்லுவார். நாங்கள் அவருக்கு எழுதியதில் ஏதும் எழுத்துப் பிழை இருந்தால், அவற்றை திருத்தி அனுப்புவார். அத்துடன் சிறு கதை ஒன்றையும்  இணைத்து, அதில் படித்தவன் கெட்டிக்காரன், சோம்பேறி படிக்காதவன், கஷ்டப்பட்டான் என்றும் சொல்லி கதையை முடிப்பார்.

பிற்காலங்களில் பெரியண்ணாவின்  ஆலோசனைப்படி, அம்மா எங்களை ஓரளவு கதைப்  புத்தகங்கள் வாசிக்க அனுமதித்தார்.  புராணக் கதைகள் அல்லது யாரும் பெரியவர்களின் வாழ்க்கைச் சரித்திரம் மட்டுமே வாசிக்கச் சொல்லுவார்.

என் வகுப்பில் படித்த ரகுநாதன் கதைப் புத்தகங்கள் நிறைய வாசித்தது மட்டுமன்றி, பிற்காலத்தில் பிரபல எழுத்தாளன், சினிமாப் படங்களுக்கு வசனகர்த்தா, படத் தயாரிப்பாளன் என்றும் பெரும் அங்கீகாரம் பெற்றிருந்தான்.

அவனும் இந்த கோவிட் காலத்தில் அதன் தொற்றினால் பிரான்ஸில் மறைந்துவிட்டான்.

ஒரு முறை நாங்கள் அமெரிக்காவுக்கு எங்கள் இளைய மகள் சியாமளா வீட்டுக்கு சென்றிருந்தோம். அங்கேதான் எனக்கு புத்தகம் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது.  அங்கே ஊர் சுற்றிப் பார்க்காத நேரங்களில், என் மகளும் மனைவியும் புத்தக வாசிப்பில் ஈடுபடுவர். மகளின் வீட்டில் இரண்டு அலுமாரி நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றை ஒரு நாள் புரட்டிப் பார்க்கையில் டான் பிரௌனின் The Da Vinci Code இருந்தது. ஒரு சில பக்கங்களை வாசிக்கும்போது , மேலும் வாசிக்க தூண்டியது. இரண்டு மூன்று நாட்களில் அதை வாசித்து முடித்தேன். அவ்வளவு சுவாரஸ்யமாய் இருந்தது அந்தப் புத்தகம்.  அடுத்து, அவர் எழுதிய மற்றும் நான்கு  புத்தகங்களை வாசித்து முடித்தேன்  

அதன் பின்னர்,  Stephen King எழுதிய புத்தகம் Bag of Bones தாறேன். அதை வாசியுங்கோ,” என்றாள் சியாமளா.  அந்தப் புத்தகம் வாசித்து முடிக்க நாலைந்து நாட்கள் ஆயின. இப்படி வாசிக்க துவங்க, Robin Cook  புத்தகங்களை மகள் தங்கள் வாசிக சாலையிலிருந்து எடுத்து வந்து தந்தாள்.

சியாமளா,  தாய் எழுதிக்கொண்டிருந்த White Flowers of Yesterday ஆங்கில சரித்திர நாவலுக்கு தேவைப்பட்ட  தகவல்களை இணையத்தில்  தரவிறக்கம் செய்வாள். பிறகு அதுபற்றி நெடு நேரம் நாங்கள் மூவரும் கலந்துரையாடுவோம்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாவலின் முதல் புத்தக வெளியீடு,  ஷரோன் நகரிலுள்ள சியாமளா வீட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு நிறைய எழுத்தாளர்கள், உற்றார், உறவினருக்கு மகளும் மருமகனும் அழைப்பு விடுத்தார்கள்.  அவர்கள் வீட்டில் ஒன்று கூடினார்கள். இங்கே மாதிரி இல்லாமல், அமெரிக்காவில் ஒரு விசேடத்துக்கு நூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் பயணிக்க உற்றார் உறவினர் தயங்க மாட்டார்கள்.  

சில சந்தர்ப்பங்களில் வாசித்த புத்தகத் தலைப்பை மறந்து அந்தப் புத்தகத்தை திருப்பி எடுத்து வாசிக்கத் துவங்க, ஓஹோ இது நான் ஏற்கனவே வாசித்ததாயிற்றே என்ற நினைப்பு வரும். இதைத் தவிர்க்க நான் ஒரு நாட்குறிப்பில் வாசித்த புத்தகத் தலைப்பு,  கதாசிரியர் பெயர்,  கதைச் சுருக்கம், கதையின் முக்கிய கருத்து,  என்று பலவற்றை குறித்து வைப்பேன். நாளடைவில் எனக்கு பிடித்த பாகங்களில் சில வசனங்களை,  சில சொற்றொடர்களை  எழுதி  உரக்க  வாசிப்பேன்.

 “ இந்தச்சந்தர்ப்பத்தில் உங்களுக்கு மற்றும் ஒரு நண்பர் பற்றியும் சொல்லவேண்டும்    என்றார் கணநாதன்.

அவரது பெயர் நீலமேகம். அடுத்த வீடு. ஒருநாள், என்னைப்பார்த்து, என்னய்யா, எந்தநேரமும் வாசிக்கிறீங்கள். வாசிக்கிறதில் என்ன பயன்?”  எனக்கேட்டார்.

நிறைய நன்மை இருக்கிறது. என் ஞாபக சக்தி கூடுது. தனிமை என்ற பயம் இராது. மற்றவரோடு வம்பிழுக்காமல்  ஏதாவது ஒன்றை  வாசிப்பேன், அல்லது தேகாப்பியாசம் செய்கிறேன் இந்த கொரோனா நோய் காலத்திலே என்றேன்.

இப்போ வாசிகசாலைக்குப் போகத் தடையாயிருக்கே,” என்றார் நீலமேகம்.  

அது பற்றிய கவலை  எனக்கில்லை. எங்களுக்கு வீட்டில் நிறைய புத்தகங்கள் உள்ளன. மேலும், இணையத்தில்  நிறைய புத்தகங்களை தரவிறக்கம் பண்ணலாம். அண்மையில் நான் வாசித்து ரசித்த புத்தகங்களில் சில:-

1)     சரண்யா ஹேமா எழுதிய,  நட்சத்திர  விழிகளில் வானவில்.’   அதில் என்னை கவர்ந்த சில வரிகள் :-

“…ஒவ்வொரு பெண்ணுக்கும் பரவசத்தையும் பயத்தையும் ஒரே நேரத்தில் தரவல்லது, அவள் பிறந்த மண்ணில் இருந்து அவளை வேரோடு பிடுங்கி புகுந்த வீட்டில் நடப்படும் செடியாக, முதலில் தடுமாறினாலும், பின்னர் நிலையாகி, வேரூன்றி, அவ்வீட்டின் அங்கத்தவருக்கே விருட்சமாகிறாள் ...

2)     இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய  வாழ்வெனும் நதி   அதில் என்னை கவர்ந்த சில வரிகள் :-

“…புதுமை தான் வாழ்க்கை என்று எண்ணுபவர்களுக்கோ பழமையின் பரிணாமங்கள் தெரிவதுமில்லை, புரிவதுமில்லை ...

“…உலக வர்த்தகத்தில் எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். ஆனால் தாய்மையை மட்டும் ஜெயிக்கவே முடியாது….” 

3) Steve Jobs: The Exclusive Biography by Walter Isaacson

4) Paths of Glory by Jeffrey Archer

5) Tamil, A Biography by David Shulman

 

இந்த பொல்லாத கொரோனா தொத்து நோய் காலத்தில், நல்ல புத்தக வாசிப்பு ஒருத்தர் மனதை ஆசுவாசப்படுத்தும்,” என்றேன்.

ஆசுவாசமா?” என்று முகத்தைச் சுளித்தார் நீலமேகம்.     

அதாவது ரிலாக்ஸ் பண்ண உதவும். இரவில் மனதும் உடம்பும் ஒருமித்து ரிலாக்ஸ் பண்ண, லேசாக நித்திரை வந்திடும். நாங்கள் நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றில் வரும் சம்பவங்களை, எங்கள் வாழ்வில் பொருத்திப் பார்த்து முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கலாம். 

 “ ஒருத்தருக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தால், அவர் நிஜ வாழ்வில்   ஒரு பிரச்சினை வரும்போது, அதை  பலரின் கண்களினூடாக பார்க்கும் திறன் கிடைக்கும்.   என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். வாசிப்பதில் இருக்கும் முக்கியமான அனுகூலம் புதிய சொற்கள், புதிய சொற்றொடர்கள். இது குறிப்பாக மாணவர்களுக்கு மிக முக்கியம் அல்லவா? நான் வாசிக்கும் போது ஏதும் புதிய சொல் அல்லது சொற்றொடர் வந்தால், ( அமரர் )  சிசு. நாகேந்திரன்  அய்யாவின் அகராதியை உடனே புரட்டிப் பார்த்திடுவேன்.

நான் இப்படி சொல்லிக்கொண்டிருக்க,  நீலமேகம் ஆழ்ந்த யோசனையில் தன் வீட்டுள் சென்றார்.

அடுத்த நாள்  அவர்  என்னை வாட்சப்பில் தொடர்புகொண்டார். ஒரு நிமிடம், கணநாதன். எங்கள் வீட்டில் வேலைக்கும் பாடசாலைக்கும் எல்லாரும் கிளம்பின பின்னம், நான் தனிமையில்   எதனைச்செய்வது என்பதறியாது இருக்கிறேன். இரண்டு மூன்று மாசங்களாய். எனக்கு மறதியும் கூடிக்கொண்டு வருகிறமாதிரி இருக்கு," என்று கவலையோடு சொன்னார்.

நீலமேகம், கவலை வேண்டாம். உங்கள் மனதுக்கு உற்சாகம் தருகிற புத்தகங்களை நிறைய வாசியுங்கோ. அவற்றை   இணையத்தில் தரவிறக்கம் பண்ண உங்கள் மகனிடம் உதவி   கேளுங்கோ. நீங்கள் புத்தக வாசிப்பில் ஈடுபட்டால், உங்கள் தனிமைக்கு அது முற்றுப்புள்ளி வைத்திடும். நாளைக் காலை நல்லதோர் சிறுகதைத் தொகுப்பு  தாறேன். அதன் தலைப்பு:-

ஆசி கந்தராஜா எழுதிய  செல்லப்பாகியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்.  புத்தகத்தை படித்த பிறகு திருப்பி எனக்கு தந்திடுங்கோ, நீலமேகம். இப்போதைக்கு கவியரசு கண்ணதாசனின் படைப்பொன்றை உரக்க வாசிக்கிறேன். சற்று கேளுங்கோ,” என்றேன். 

இவ்வாறு தனது வாழ்க்கை சரிதையையும் வாசிப்பு அனுபவத்தையும் என்னுடன் பகிர்ந்துகொண்ட கணநாதன் அவர்கள் இறுதியாக கவியரசு கண்ணதாசனின் கவிதையையும் பகிர்ந்துகொண்டார்.

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

   படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

   படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

   அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக்  கேட்டேன்

இறந்து பார் என இறைவன் பணித்தான்!

'அனுபவித்தே தான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன்?' எனக் கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி,

'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

               கணநாதன் தற்போது கர்ணன் எழுதிய மௌனத்தின் நிழல் நூலைப்படித்துக்கொண்டிருக்கிறார்.

---0---

 

 

No comments: