.
கன்னட திரையுலகில் கீர்த்தி பெற்ற இயக்குனராக திகழ்ந்தவர் புட்டண்ணா கனகல். பழம்பெரும் இயக்குனரான பி ஆர் பந்துலுவி டம் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு பின்னர் அவரே தனித்து இயக்கிய பல கன்னடப் படங்கள் அவரை புகழின் உச்சியை அடையச் செய்தன. பல அறிமுக இயக்குனர்கள் வியந்து பார்க்கப்பட்ட புட்டண்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படம்தான் 1971ம் ஆண்டு கலரில் வெழிவந்த இருளும் ஒளியும்.
இரட்டையர்களான இரு சகோதரிகளுக்கு பிறந்த பானு சந்திரா இருவரும் உருவத்தில் ஒரே மாதிரியானவர்கள் ஆனால் குணநலன்களோ எதிரும் புதிருமானவை. திருமணமே செய்யமாட்டேன் என்று கூறி வரும் கல்லூரி மாணவனான ராமுவின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி அவனை தன் காதல் வலையில் விழ வைக்கிறார் பானு . பின்னர் அவளை திருமணம் செய்ய மாட்டேன் என்று மறுத்து விடுகிறார். மனமுடைந்த ராமு தற்கொலை செய்கிறான்.
தன் நண்பனின் மரணத்திற்கு காரணமான பானுவை பழிவாங்க துடிக்கும் தியாகு ஆள்மாறாட்டம் காரணமாக சந்திராவை பானு என்று நினைத்து அவளிடம் வெறுப்பை உமிழ்கிறான் .
இப்படி அமைந்த இருளும் ஒளியும் படத்திற்காக வசனங்களை வியட்நாம் வீடு சுந்தரம் எழுதியிருந்தார். எஸ் வி ரங்கராவ் , எஸ்வி சுப்பையா பேசும் உணர்ச்சிகரமான வசனங்கள் ஆகட்டும், நாகேஷ், ரமா பிரபா பேசும் நகைச்சுவை வசனங்கள் ஆகட்டும் இரண்டிலும் ஸ்கோர் பண்ணியிருந்தார் சுந்தரம்.
படத்தின் கதாபாத்திரங்களுக்கு ஏற்றார்போல் நடிகர்களை புட்டண்ணா திறமையாக தெரிவு செய்திருந்தார். இதனால் காட்சிகள் அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிந்தன. படத்தை ஒளிப்பதிவு செய்தவர் மாருதிராவ் . முழுப் படத்திலும் அவரின் திறமை பளிச்சிட்டது. பாடல்களை கண்ணதாசன் இயற்றி இருந்தார். இன்று கூட புதுமனை புகுவிழாவில் பாடுவதற்கு ஏதுவாக அமைந்த திருமகள் தேடி வந்தாள் எங்கள் புதுமனை குடிபுகுந்தாள் , என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இசை கே வி மகாதேவன்
வாணிஸ்ரீ இரட்டை வேடங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அவருடன் ஏவிஎம் ராஜன், முத்துராமன், நாகையா ஆகியோரும் நடித்தனர்
No comments:
Post a Comment