ஜெ.பிரான்சிஸ் கிருபா என்ற கவிதைக் குதிரையும் மறைந்தது

 vikatan_2019-05_4fe9b2c6-1a98-4d82-a1a3-14c6ede7791c_p122a.jpeg


"குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி
என் மனசக் காட்டுது....."
ஜெ.பிரான்சிஸ் கிருபா என்ற இளம் படைப்பாளி அஸ்தமனமாகியிருக்கிறார் என்ற செய்தியோடு இன்றைய காலை விடிந்திருக்கின்றது.
அவரின் ஒவ்வொரு கவி நறுக்குகளை எடுத்து மலரஞ்சலி பகிர்கிறார்கள் நண்பர்கள்.
எனக்கென்னமோ ஆறுதலில் துணைக்கழைக்கின்ற ராஜா தான் இங்கேயும் வந்தார், பிரான்சிஸ் கிருபா எழுதிய வரிகளோடு.
"குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி என் மனசைக் காட்டுது"
இவ்வளவும் போதுமே அந்தப் படைப்பின் நாயகனை நியாயம் செய்ய என்று இது நாள் வரை எண்ணிச் சிலாகிப்பேன் அந்தப் பாட்டை.
இந்தப் பாட்டு வந்து சரியாகப் பத்தாண்டுகளில் தன்னை முடித்துக் கொண்டு விட்டது இந்தக் கவிதைக் குதிரை.
"பூவும் பூவும்" (ஆதலால் காதல் செய்வீர்), "பார்த்தும் பாக்காம" (குரங்கு பொம்மை) என்று
சொற்பமே என்றாலும் திரையிசையிலும் பாட்டெழுதியவர், ஆனால் சொற்பமே வாழ்ந்த பாரதி முதல் பட்டுக்கோட்டையார், வாசன், நா.முத்துக்குமார் வரிசையில் சேர்ந்தும் விட்டார்.
நள்ளிரவில் அறுத்தோம்
நித்திரை பிரியாமல்
பெரும் சப்தத்தோடு அது
சரிந்து விழுந்தது மற்றொரு உறக்கத்தில்
காலையில் கண்விழித்த
இலைகளெல்லாம் கண்டன
ஒரு கனவு போல
காணாமல் போன மரத்தை - ஜெ.பிரான்சிஸ் கிருபா
கானா பிரபா
17.09.2021
படம் நன்றி : விகடன் தடம்

No comments: