உலகச் செய்திகள்

 அவுஸ்திரேலியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: பிரிட்டன், அமெரிக்காவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

‘சஹாரா’ ஐ.எஸ் தலைவர் பிரான்ஸ் தாக்குதலில் பலி

4 சுற்றுலாப் பயணிகள் விண்வெளிப் பயணம்

ஆப்கானிஸ்தானில் ஷரிஆ சட்டம் அமுல்படுத்தப்படும்

150 இற்கும் மேற்பட்ட ஊடக கூடங்கள் செயற்பாடுகளை நிறுத்தின

வடகொரியா புதிய நீண்ட தூர க்ரூஸ் ஏவுகணைச் சோதனை



அவுஸ்திரேலியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: பிரிட்டன், அமெரிக்காவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

அவுஸ்திரேலியோவுடன் செய்துகொண்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

சீனாவை எதிர்கொள்ளும் முயற்சியாகப் பார்க்கப்படும் இந்த உடன்படிக்கை மூலம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன், அவுஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் தொழில்நுட்பத்தை வழங்கவுள்ளது. ஆனால் இது பிரான்ஸின் கோபத்தை தூண்டியுள்ளது. இதனை ‘முதுகில் குத்தும் செயல்’ என்று அந்த நாடு குறிப்பிட்டுள்ளது. மறுபுறம் இந்த மூன்று நாடுகளும் ‘பனிப்போர் மனோநிலையில்’ இருப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த உடன்படிக்கை சீனாவை போர் ஒன்றுக்கு தூண்டுவதாக இருப்பதாக அச்சம் வலுத்துள்ளது.

ஆக்கஸ் என்ற இந்த உடன்படிக்கை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் ஆகிய மூன்று தலைவர்களாலும் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் அவர்கள் சீனாவை குறிப்பிட்டு கூறாதபோதும், போட்டி நிலவும் தென் சீன கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்சியாகவே இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டிருப்பதாக பரவலாக பார்க்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கை சீனாவுக்கு எதிரான நோக்கம் கொண்டதல்ல என்று ஜோன்சன் பிரிட்டன் எம்.பிக்களிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த உடன்படிக்கையால் பிரிட்டன், சீனாவுடன் போர் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படக் கூடும் என்று பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தெரேசா மே கேள்வி எழுப்பியுள்ளார்.

தாய்வான் மீது சீனா ஆக்கிரமிப்புச் செய்யும் நிகழ்வில் இந்த கூட்டணியின் செயற்பாடுகள் பற்றி பிரதமரிடம் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜோன்சன், ‘பிரிட்டன் சர்வதேச சட்டத்தை பாதுகாக்க உறுதியாக இருப்பதோடு இது உலகெங்கும் இருக்கும் எமது நட்பு நாடுகள் மற்றும் பீஜிங் அரசுக்கு நாம் வழங்கும் கண்டிப்பான அறிவுறுத்தலாகும்’ என்றார்.

தாய்வான் தம்மை இறைமை கொண்ட ஒரு நாடாக கருதுகின்றபோதும், அதனை தமது பிரிந்து சென்ற மாகாணமாக கருதும் சீனா, அதன் மீது அழுத்தங்களை அதிகரித்து வருகிறது. மறுபுறம் இந்த உடன்படிக்கையால் அவுஸ்திரேலியாவுடன் கைச்சாத்திட்ட பல பில்லியன் டொலர் பெறுமதியான நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை இழந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா மீது தனது கோபத்தை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ‘முதுகில் குத்தும் செயல்’ என்று பிரான்ஸ் வெளியுறுவு அமைச்சர் ஸீன் யிவேஸ் லே ட்ரியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஞாபகமூட்டும் வகையிலான, ‘கொடிய, எதேச்சதிகாரம் கொண்ட மற்றும் எதிர்வுகூர முடியாத தீர்மானம்’ என்று அவர் சாடினார். இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவைக் கொண்டாடும் நிகழ்வை அமெரிக்காவில் உள்ள பிரான்ஸ் இராஜதந்திரிகள் இரத்துச் செய்துள்ளனர்.

இரு நாட்டு உறவில் ‘இது மிக பலவீனமான தருணம்’ என்று அமெரிக்காவுக்கான பிரான்ஸின் முன்னாள் தூதுவர் கெரார்ட் அரவுட் கூறினார். ‘இந்த ஒப்பந்தம் மற்றும் இந்த மூலோபாய ஒப்பந்தம் பிரான்ஸ் தேசிய நலனுக்கு அவசியம் என்பதை அமெரிக்கா தெரிந்திருந்தபோதும் அமெரிக்கா அதனை பொருட்படுத்தவில்லை’ என்று பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

பிரான்ஸை தமது முக்கிய கூட்டாளி என்று அழைத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டோனி பிளிங்கன், பிரான்ஸுடன் அமெரிக்கா தொடர்ந்தும் நெருக்கமாக செயற்படுகிறது என்றார்.

உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த உடன்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக நீர்மூழ்க்கிக் கப்பல்கள்தான் முக்கியமானவை. அவை தெற்கு அவுஸ்திரேலியாவில் அடிலெய்டில் கட்டப்பட உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்க இருக்கின்றன. இதன்மூலம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இயக்கும் உலகின் ஏழாவது நாடாக அவுஸ்திரேலியா மாறவுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் வழக்கமான எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை விட கண்டுபிடிக்க இயலாதவை. எதிரிகளின் பரப்புக்கு உள்ளேயே ஊடுருவிச் செல்லக்கூடியவை.

இவற்றில் அணு ஆயுதங்கள் இருக்காது. மாறாக இவை அணுசக்தி எரிபொருள் மூலம் இயங்குகின்றன. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் இருபது ஆண்டுகள் வரைகூட இவை தொடர்ந்து செயல்படும். ஆயினும் அவுஸ்திரேலியா அணு ஆயுதங்களைப் பெறப் போவதில்லை என்பதை அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கஸ் உடன்பாட்டின்படி குறைந்தது 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் அவுஸ்திரேலியாவில் கட்டுமான வசதிகள் குறைவாக இருப்பதால் இந்தத் திட்டம் தாமதமாகவே செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது.   நன்றி தினகரன் 





‘சஹாரா’ ஐ.எஸ் தலைவர் பிரான்ஸ் தாக்குதலில் பலி

இஸ்லாமிய அரசு குழுவின் சஹாரா பிராந்திய தலைவர் பிரான்ஸ் துருப்புகளால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சஹாரா பிராந்தியத்திற்கான ஐ.எஸ் குழுவை 2015 ஆம் ஆண்டு அத்னன் அபூ வலீத் அல் சஹ்ராவி நிறுவினார். அந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்ற பல தாக்குதல்களுக்கு இந்தக் குழு மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதில் 2020 ஆம் ஆண்டு பிரான்ஸ் தொண்டு ஊழியர்கள் கொல்லப்பட்ட தாக்குதலும் அடங்கும்.

சஹெலில் இடம்பெறும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான போராட்டத்தில் சஹ்ராவியின் மரணம் மற்றொரு முக்கிய வெற்றி என்று மக்ரோன் தெரிவித்துள்ளார். சஹெல் பிராந்தியமானது மேற்கில் செனகலில் இருந்து கிழக்கில் சோமாலியா வரை சஹாரா பாலைவனத்தின் தென் பகுதியை உள்ளடக்கிய மூன்று மில்லியன் சதுர கிலோமீற்றர் பகுதியாகும்.

எனினும் சஹ்ராவி கொல்லப்பட்ட இடம் மற்றும் வேறு எந்த விபரம் பற்றியும் மக்ரோன் குறிப்பிடவில்லை.

எனினும் பிரான்ஸின் பர்கேன் படை நடவடிக்கையின்போதே அவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பிளோரன்ஸ் பார்லியின், ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த படை நடவடிக்கை மாலி, நைகர், சாட் மற்றும் புர்கினா பாசோவை உள்ளடக்கிய சஹேல் பிராந்தியத்தில் ஐ.எஸ் குழுவுக்கு எதிராக இடம்பெற்று வருகிறது.   நன்றி தினகரன் 




4 சுற்றுலாப் பயணிகள் விண்வெளிப் பயணம்

விண்வெளி வீரர்கள் அல்லாத நால்வர் முதல் முறை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிய ரொக்கெட் பிளோரிடாவில் இருந்து நேற்று புறப்பட்டது.

அமெரிக்காவின் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோடீஸ்வரர் ஜாரிட் ஐசக் மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினரே இந்த விண்வெளி பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சென்ற விண்கலத்திற்கு இன்ஸ்பிரேஷன்-4 என்று பெயரிடப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளித் தளத்திலிருந்து நேற்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என். 9 என்ற ரொக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ரொக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் 2ஆவது அடுக்கு தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது.

பூமியிலிருந்து 575 கி.மீ உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்குச் சுற்றி வரும். மணிக்கு 27,300 கிலோ மீற்றர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும்

3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பின்னர் அட்லாண்டிக் கடலில் பால்கான் ரொக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 




ஆப்கானிஸ்தானில் ஷரிஆ சட்டம் அமுல்படுத்தப்படும்

ஆப்கானிஸ்தானில் ஷரிஆ சட்டம் அமுல்படுத்தப்படும்-Sharia Law will be Implemented in Afghanistan

- தலிபான்களின் பதில் பிரதமர்

காபூலில் இடைக்கால அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து, 'ஆப்கானிஸ்தானில் ஷரிஆ சட்டம் அமுல்படுத்தப்படும்' என்று தலிபானின் உச்சபீடத் தலைவரான பதில் பிரதமர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடா கூறியுள்ளார்.

'ஆப்கானிஸ்தானில் ஆட்சி மற்றும் வாழ்க்கை தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் புனித ஷரிஆ சட்டங்களால் நிர்வகிக்கப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளதாக அறிக்கையொன்றை 'ஸ்புட்னிக்' மேற்கோள் காட்டியுள்ளது. 'இஸ்லாமிய கட்டமைப்பிற்குள் மனித உரிமைகளையும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாக்க ஆப்கான் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வர்' எனவும் அகுந்த்ஸடா குறிப்பிட்டுள்ளார்.

தலிபான்கள் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு குழுவுக்குள் நிலவிய சச்சரவுகளும் யூகங்களும் முடிவுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டதாக 'த ரைம்ஸ் ரிபப்ளிக்' சுட்டிக்காட்டியுள்ளது.

தலிபானின் தீர்மானமெடுக்கும் சக்திமிக்க அமைப்பான 'ரெஹ்பாரி சூரா' வின்  தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த், நாட்டின் இடைக்கால   அரசாங்கத்திற்கும் தலைமை தாங்குகிறார்.  தலிபானின் பேச்சாளர் ஜபிஹுல்லா முஜாஹித் ஊடகவியலாளர் மாநாடொன்றில், 'குழுவின் இணை ஸ்தாபகர் அப்துல் கனி பரதர் ஆப்கானின் பதில் பிரதிப் பிரதமராவார்' என்றார்.

மேலும், தடை செய்யப்பட்ட ஹக்கானி வலையமைப்பின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி இடைக்கால அரசில் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலிபான்களின் பதில் பிரதமர் அகுந்த்ஸடா விடுத்துள்ள அறிக்கையில், 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்ஸ், அதன் அனைத்து வளங்களையும் பொருளாதார பலம், சுபீட்சம் மற்றும் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தும். பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும்.  உள்நாட்டு வருவாயை சரியான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் நிர்வகித்து, சர்வதேச முதலீடுகளுக்கும் வர்த்தகத்தின் பல்வேறு துறைகளுக்கு விஷேட வாய்ப்புகள் அளிக்கப்படும்.  அத்தோடு வேலையின்மையையும் திறம்பட எதிர்த்துப் போராடும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 




150 இற்கும் மேற்பட்ட ஊடக கூடங்கள் செயற்பாடுகளை நிறுத்தின

150 இற்கும் மேற்பட்ட ஊடக கூடங்கள் செயற்பாடுகளை நிறுத்தின-150 Media Outlets in Afghanistan Stopped Their Work

காபூல் தலிபான்களிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் ஆப்கானிஸ்தானின் 153 ஊடக கூடங்கள் (Media Outlets) 20 மாகாணங்களில்  தம் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனை நாட்டின் ஊடக சுதந்திரத்தை ஆதரிக்கும் அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. 

'இவ்வாறு தம் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ள ஊடக கூடங்களில் அச்சு மற்றும் வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகளும் அடங்கும். இவை பொருளாதார பிரச்சினைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகவே தம் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன என்று அந்த அமைப்புகளை மேற்கோள்காட்டி 'டோலோ நியூஸ்' குறிப்பிட்டுள்ளது.

இந்த ஊடகங்களின் நிதி நெருக்கடி தீர்க்கப்படாதுள்ளதோடு அவர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் குறித்தும் கவனம் செலுப்படாதுள்ளன. அதனால் மேலும் பல ஊடக கூடங்கள் தம் செயற்பாடுகளை நிறுத்த வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் ஹுஜத்துல்லா முஜாததி, 'ஊடகங்களை ஆதரிக்கும் அமைப்புகள் ஊடகங்களில் கவனம் செலுத்தவில்லையாயின் நாட்டில் மீதமுள்ள ஏனைய ஊடக கூடங்களும் மூடப்படுவதை எம்மால் விரைவில் காணக்கூடியதாக இருக்கும் என்றுள்ளார். 

'இந்நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. இது தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்துமாறு சர்வதேச அமைப்புகளை நாங்கள் கோருகின்றோம். இல்லாவிடில் ஊடக சுதந்திரமும் மனித மற்றும் சிவில் சுதந்திரங்களும் விரைவில் முடிவுக்கு வருமென ஆப்கானிஸ்தான் தேசிய ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதி மஸ்ரூர் லுத்பி குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஊடக சுதந்திரத்தை ஆதரிக்கும் அமைப்பு, 'பொருளாதார பிரச்சினை மிகவும் மோசமடைந்துள்ளதோடு கட்டுப்பாடுகளின் கீழ் செயல்படுவது சவால்களை உருவாக்கியுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் தலிபான்கள், ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தங்கள் தொழிலை முன்னெடுக்கவென பாதுகாப்பான சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

ஆனால் கடந்த வாரம், காபூலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் தலிபான்களால்  தடுத்து நிறுத்தப்பட்டு.

உள்ளூர் பொலிஸ் நிலையமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு இரண்டு அறைகளில் அடைத்து வைத்து நையபுடைத்து, கேபிள்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளன.   நன்றி தினகரன் 



வடகொரியா புதிய நீண்ட தூர க்ரூஸ் ஏவுகணைச் சோதனை

ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கக் கூடிய திறன் கொண்ட புதிய நீண்ட க்ரூஸ் தூர ஏவுணை ஒன்றை வட கொரியா சோதித்துள்ளது.

கடந்த வார இறுதியில் இடம்பெற்றிருக்கும் இந்த சோதனையில் அந்த ஏவுகணை 1,500 கி.மீ வரை பாய்ந்ததாக வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

நாட்டில் உணவு பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றபோதும் வட கொரியா தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்தும் திறனை பெற்றிருப்பதாக இந்த சோதனை காட்டுகிறது.

இந்த புதிய ஏவுகணை சோதனை சர்வதேச சமூகம் மற்றும் அண்டை நாடான ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று எச்சரித்திருக்கும் அமெரிக்க இராணுவம், இது “குறிப்பிடும்படியான அவதானத்திற்குறியது” என்று கூறியது.

தங்களின் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவை பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. வட கொரியா சோதனை செய்த ஏவுகணை குறித்து, அமெரிக்க உளவு அமைப்புகளோடு இணைந்து ஆய்வு செய்து வருவதாக தென் கொரியாவின் யோன்ஹப் செய்தி முகாமையில் செய்தி வெளியாகியுள்ளது.

வட கொரியா அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த வாரம் சந்தித்து பேச உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏவுதள வாகனத்தில் இருந்து ஏவுகணை வீசப்படுவது மற்றும் அது பாய்ந்து செல்லும் படங்கள் வட கொரியாவின் ரொடொங் சின்முன் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.

ஏவுகணைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய ஆயுதம் ஒன்றாக உள்ளது என்று வட கொரிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற இந்த சோதனையில் ஏவுகணைகள் வட கொரிய கடல் எல்லைக்குள் விழுவதற்கு முன்னர் அவைகளின் இலக்குகளை தாக்கியதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இது வட கொரியாவின் அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய முதலாவது நீண்ட தூர க்ரூஸ் ஏவுகணை என்று அந்நாட்டு ஆய்வாளர் அகிட் பன்டா குறிப்பிட்டுள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை சோதிப்பதற்கு வட கொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்புச் சபை தடை விதித்தபோதும் இது போன்ற க்ரூஸ் ஏவுகணைகளுக்கு அந்தத் தடை இல்லை.

கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகள் க்ரூஸ் ஏவுகணைகளை விட மிகப் பெரியதும் சக்திவாய்ந்ததுமான ஆயுதங்களை நீண்டதூரம் வேகமாக எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருப்பதாக பாதுகாப்புச் சபை கருதுகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரொக்கெட் ஒன்றின் சக்தியுடன் வளைவாக பறப்பதோடு க்ரூஸ் ஏவுகணை ஜெட் இஞ்சினின் சக்தியுடன் தாழ்வாக பறக்கும்.    நன்றி தினகரன் 





No comments: