நெற்றிக்கண் விமர்சனம் : நயன்தாராவின் படம் எப்படி இருக்கிறது?

 

 • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
 • பிபிசி தமிழ்
நெற்றிக்கண்

பட மூலாதாரம்,TWITTER

நடிகர்கள்: நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண்; இயக்கம்: மிலிந்த் ராவ்.

2011ல் கொரிய மொழியில் வெளிவந்த Blind திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்த 'நெற்றிக்கண்'. இயக்குனர் மிலிந்த் ராவ் இதற்கு முன்பாக 'காதல் 2 கல்யாணம்', 'அவள்' போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.

துர்கா (நயன்தாரா) ஒரு சிபிஐ அதிகாரி. ஒருமுறை துர்கா காரை ஓட்டிவரும்போது ஏற்படும் விபத்தில் தம்பி இறந்துவிட, அவளுடைய பார்வையும் பறிபோகிறது. இந்தத் தருணத்தில் சென்னை நகரில் பல பெண்கள் காணாமல் போகிறார்கள். துர்கா ஒரு முறை கால் டாக்ஸியில் பயணம் செய்யும்போது, அந்த ஓட்டுனர் நடந்துகொள்ளும்விதம் விபரீதமாக இருப்பதோடு, விபத்தும் ஏற்படுகிறது.

அதிலிருந்து தப்பிக்கும் துர்கா இது குறித்து காவல்துறையில் தகவல் தெரிவிக்கிறாள் துர்கா. இதனை விசாரிக்கிறார் உதவி ஆய்வாளரான மணிகண்டன் (மணிகண்டன்). பெண்கள் காணாமல் போன நிகழ்வுகளுக்கும் இந்த கால் டாக்சி விபத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும் எனப் புரிகிறது. இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே மீதப் படம்.

மிலிந்த் ராவ் இதற்கு முன்பாக இயக்கிய 'அவள்' திரைப்படம், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அந்தப் படத்தை இயக்கியவர்தான் இதையும் இயக்கியிருக்கிறார் என்று சொன்னால் நம்புவது கடினம். அந்த அளவுக்கு படத்தில் ஓட்டைகள்.

  தான் பயணம் செய்த கால் டாக்சியின் ஓட்டுநர் விபரீதமாக நடந்துகொண்டதாகவும் விபத்தை ஏற்படுத்தியதாகவும் காவல்துறையில் சொல்கிறாள் துர்கா. 'ஆப்' மூலம் பதிவுசெய்யப்பட்ட அந்த கால் டாக்சியின் ஓட்டுனர் யார் என்பதை உடனடியாகக் கண்டுபிடித்து, அவர்தான் கதாநாயகியிடம் மோசமாக நடந்துகொண்டாரா என்று விசாரித்திருந்தால் பல விஷயங்கள் விளங்கியிருக்கும்.

  ஆனால், அதைவிட்டுவிட்டு எந்தக் காரிலாவது கண்ணாடி உடைந்திருக்கிறதா எனத் தெருத்தெருவாக விசாரிக்கிறது காவல்துறை. அடுத்ததாக, அந்த சைக்கோ கொலைகாரன் மெட்ரோ ரயிலில் செல்வதை வீடியோ காலில் பார்க்கும் இளைஞன் ஒருவன், அந்த சைக்கோவின் படத்தை காவல்துறைக்கு அனுப்பியிருக்க முடியும். அதையும்விட்டுவிட்டு, அங்க அடையாளங்களைச் சொல்லி படம் வரைந்து, தேடுகிறார்கள்.

  படம் நெடுக,கதாநாயகி செல்லும் இடங்களில் எல்லாம் மனித சஞ்சாரமே இல்லாமல் இருக்கிறது. பாலத்தின் மேல் விபத்தில் சிக்கினாலும் சரி, மெட்ரோ நிலையங்கள், மால்கள் என வில்லனிடம் மாட்டிக்கொண்டாலும் சரி எங்கேயுமே ஆட்கள் இருப்பதில்லை. ஒரு கட்டத்தில் வில்லன் தப்பிக்க வேண்டுமென்பதற்காக, காவல் நிலையத்திலும் 3 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.

  படத்தில் மற்றொரு பிரச்சனையும் இருக்கிறது. படம் நெடுக வன்முறையை சகிக்கமுடியாத வகையில் தொடர்ந்து காட்டுகிறார் இயக்குனர். நெற்றிக்கண் என படத்தின் பெயரைச் சொன்னால், இந்தக் காட்சிகளே மனதில் நிற்கின்றன. பெண்கள் மீதான வன்முறையையும் பாலியல் துஷ்பிரயோகத்தையும் அவ்வளவு அப்பட்டமாகக் காட்ட வேண்டிய அவசியம் இந்தக் கதையில் இல்லவேயில்லை. இருந்தும் அதை அவ்வப்போது காட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.

  படம் முழுக்கவே அடிவாங்கி கீழே விழுபவர்கள் சரியான நேரத்தில் எழுந்து ஏதாவது செய்கிறார்கள். இதெல்லாம் 'ஜோம்பி' படங்களில் நடப்பதைப்போலவே இருக்கிறது.

  நகரையே பதற வைக்கும் ஒரு கடத்தல் வழக்கு குறித்து ஊடகங்கள் ஏதும் கவலைப்படவில்லை. சம்பந்தப்பட்ட காவல் நிலையமும் சர்வ அலட்சியமாக இந்த விவகாரத்தை டீல் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் காவல் துறையில் அந்த சைக்கோ சிக்கியதும், அவன் இருப்பிடத்தைச் சோதனை செய்யாமல், அவனிடம் உண்மை அறியும் சோதனை என்ற பெயரில் நேரத்தைக் கடத்துகிறார்கள். அந்த சைக்கோ, காவல்துறை ஆணையர் முன்பாகவே சவால்விட்டு, பிறகு தப்பிச் செல்கிறான்.

  நயன்தாரா மட்டும் ஒற்றையாக நின்று கொலைகாரர்கள், பேய்கள், போதை மருந்து கடத்தல்காரர்கள் ஆகியோரைச் சமாளிக்கும் பல படங்கள் வந்துவிட்டன. அதில் இதுவும் ஒன்று. மிக சுமாரான ஒன்று.  நன்றி பிபிசி தமிழ் 

  No comments: