இலங்கையில் பிரதானமாக பேசப்படும் மொழிகள் இரண்டுதான். பெரும்பான்மை சிங்கள இன மக்கள் சிங்களத்தை பேசினாலும், அவர்களையடுத்து சிறுபான்மையினராக வாழும் தமிழ் – முஸ்லிம் மக்கள் பேசும் மொழி தமிழ்.
சீனாவின் பிரவேசம் இலங்கையில்
அதிகரித்ததையடுத்து சீன மொழியிலும் அறிவிப்பு பலகைகள் காட்சிக்கு வந்துவிட்டன. சமகால கொரோனோ பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால், விமான நிலையங்களிலும் சீன மொழி ஒலிபரப்பாகலாம்.
சீனாவின் கொழும்பு போர்ட்
சிட்டி எதிர்காலத்தில் பல அதிசயங்களை இலங்கையில் நிகழ்த்தவிருக்கிறது.
அப்போது சீனமொழியில் வெளிவரும் அறிவிப்பு பலகைகள், சுவரொட்டிகளில் எழுத்துப்பிழைகள் நேர்ந்தால், அங்கு வாழும், வாழப்போகும் சீனப்பிரஜைகள் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பது மாத்திரம் நிச்சயம்.
ஒரு காலத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி குறித்த
பிரச்சினைகள், குறிப்பாக அரச வர்த்தமானி அறிவித்தல்களில் எழுத்துப்பிழைகள் நேரும் சமயங்களில் அவற்றைச்சுட்டிக்காட்டி பேசிவந்தவர் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பண்டிதர் க. பொ. இரத்தினம்.
தமிழ் இதழ்கள், பத்திரிகைகளிலும்
மற்றும் வெளியாகும் தமிழ் நூல்கள் , மலர்களிலும்
எழுத்துப்பிழைகள் நேர்ந்துவிடாதிருக்கவேண்டும்
என்பதற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தவர் கி. இலக்ஷ்மண அய்யர்.
இந்த இரண்டு பெரியார்களும் இலங்கையில் வாழ்ந்த காலத்திலும் அதன்பின்னரும் அரச அறிவித்தல்களில் தொடர்ந்தும் எழுத்துப்பிழைகள்
நேர்ந்துகொண்டுதானிருக்கிறது.
தமிழ் மொழி அமுலாக்கலுக்கென
ஒரு அமைச்சும் ஜே.ஆர். ஜெயவர்தனா அதிபராக பதவி ஏற்ற காலத்திலிருந்து இயங்கிவருகிறது.
மட்டக்களப்பு எம். பி. ஆகவிருந்த திரு. செல்லையா இராஜதுரை ஐக்கிய தேசியக்கட்சிக்கு தாவியபோது, அவருக்காக
உருவாக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி, தமிழ் மொழி அமுலாக்கள் , இந்து கலாசார அமைச்சு பின்னாளில் சிறுபான்மை தமிழ் இனத்திலிருந்து தெரிவாகும் யாரோ ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டு வந்தது.
அந்தப்பதவிகளை பி. தேவராஜா, திருமதி இராஜமனோகரி புலேந்திரன், டக்ளஸ் தேவானந்தா, திருமதி விஜயகலா மகேஸ்வரன், டீ.
எம். சுவாமிநாதன், மனோ கணேசன் முதலானோர் அலங்கரித்தனர்.
இது இவ்விதமிருக்க, இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில்
நிகழ்த்திய உரையின் சில பகுதிகளை இங்கு பதிவிடுகின்றோம்.
அவர் சொன்னார்:
“ இரண்டாம் மொழிப் பரிச்சயத்திற்கான சான்றிதழ்களையும் கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளுகின்ற அரச அதிகாரிகள் பலரும் இரண்டாம் மொழியில் ஒரு வார்த்தைகூட புரிந்து கொள்ள
முடியாத நிலைமைகளையே நடைமுறையில் பார்க்கின்றோம். அரச கரும மொழிகள் அமுலாக்கலில் அரச அதிகாரிகள் தங்களது முழுமையான பங்களிப்பினை அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டும்.
இந்த நாட்டிலே அரச கரும மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய
மொழிகள் இருத்தல் வேண்டுமென இலங்கையின் அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள
போதிலும், இன்றுவரையில் இந்த நாட்டில் அது நடைமுறையில் இல்லாதது, கவலைக்குரிய அதே
நேரம் கண்டிப்புக்குரிய ஒரு விடயமாகும்.
அரச சுற்றறிக்கைகள் முதற்கொண்டு அரச அதிகாரிகளின் கடிதங்கள் வரையிலாக அனைத்தையும் அரச நிறுவனங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலே வாழ்ந்து வருகின்ற சிங்கள மொழி பரிச்சயமற்றவர்களுக்கு சிங்கள மொழி மூலமாகவே அனுப்பி வைப்பதும், அதனைப் பெறுகின்றவர்கள் மொழி புரியாத
காரணத்தினால் பல்வேறு இடையூறுகளுக்கு உட்படுவதும் பல காலமாகவே தொடர்ந்து வருகின்றது. “
இந்தப்பின்னணிகளுடன்தான் வீதிகளில் காணப்படும் அறிவிப்பு பலகைகள்,
சுவரொட்டிகள், பஸ் வண்டிகளில் தமிழுக்கு
நேர்ந்திருக்கும் சிதைவுகளையும்
அவதானிக்கவேண்டியுள்ளது.
இலங்கையில் தமிழ் சிதைக்கப்படுவதை நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையோடு
சுட்டிக்காண்பிக்கும் அளவுக்கு வலைத்தளங்களும்
பெருகிவிட்டன.
தமிழ் அச்சு ஊடகங்களிலும் எழுத்துப்பிழைகள்
மலிந்துகிடக்கின்றன.
எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழைகளாகிவிடும் ஆபத்தும் இருப்பதை
கவனித்தல் வேண்டும். சில சமயங்களில்
அந்தத் தவறுகள் கெட்ட வார்த்தைகளாகவும் மாறிவிடலாம்.
அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டிருப்பதுபோன்று தமிழ் மொழி அமுலாக்கலில் நேர்ந்திருக்கும்
நெருக்கடிகளை களைவதற்கு ஆவனசெய்யவேண்டும்.
இரண்டு மொழிகள் நடைமுறையிலிருக்கும் இலங்கையில் சீனமொழியும் பிரவேசித்துக்கொண்டிருக்கிறது. தொழில் நிமித்தம் இலங்கை வரும் சீனர்கள், தமது தாய் மொழியில் அத்தகைய தவறுகள் நேர்ந்துவிடாதிருக்கத்தக்கதாக அதற்குரிய பொறுப்புகளில் தேர்ச்சி மிக்கவர்களையே நியமிக்க விரும்புவார்கள்.
இலங்கையில் தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு, இதுவிடயமாக காலத்திற்கு
காலம் பயிலரங்குகளை நடத்துவதன்
மூலமும், உடனுக்குடன் தவறுகளை
கண்டுபிடித்து திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலமும் சீரான மொழிப்பரிவர்த்தனைக்கு வழிசமைக்க
முடியும்.
---0---
No comments:
Post a Comment