மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
பனையின் மீது தமிழர் பெருங்காதல் கொண்டிருந்திருக்
கிறார்கள்.பனை என்பது தமிழர்களின் மரம் என்றே எண்ணி வந்திருக்கிறார்கள்.அந்த நினைப்பு அவர்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்த காரணத்தால் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கும் தங்களின் விருப்பத்துக்குரிய பனையினை இணைத்து பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார்கள். அந்தவகையில்த்தான் இங்கு சில ஊர்களின் பெயர்களைப் பார்க்கின்றோம்
பனையின் குளம் , பனகுடி, பனஞ்சாவடி , பனங்குளம் , பனையூர், பனையப் பட்டி , வடக்குப் பனை வடலி, தீய்ந்த பனைப்பட்டி , கலந்த பனை , பனங்காட்டூர், திருப்பனையூர் , பனங்காடு , பொற்பனைக் கோட்டை.
இலக்கியங்களில் காட்டினாலும் தாங்கள் வாழுகின்ற இடங்களிலும் பனையினை விட்டுவிடத் தமிழர்கள் விரும்பவில்லை என்பதையே இந்நிலை காட்டுகிறதல்லவா !
வெய்யில் என்று பாராமல் , மழை என்று பாராமல் ; ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து மக்களுக்கு - அவர்களின் வாழ்வில் பல நிலைகளிலும் பனையானது பயனை நல்கியே வந்திருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே.
கிறீத்தவ வேதமான பைபிளும் பனையினை வியந்து நிற்கிறது."
நீதிமான் பனையைப் போல் செழித்து வளருவான் " என்பதும் நோக்கத்தக்கது.
பதநீரைப் பற்றியும் , சுவையான நுங்கு பற்றியும். பனம்பழம் பற்றியும், கள் பற்றியும் இலக்கியங்கள் காட்டி நிற்பதையும் காண முடிகிறது. பனை மாறன் என்று பெயரைக் கொண்ட மன்னர்கள் ஈழத்தை ஆண்டார்கள் என்பதையும் அறிய முடிகிறது.நுங்கின் நீரும், கரும்பின் சாறும், இளநீரும் அருந்தி ஆனந்தம் அடைந்தார்கள் பெண்கள் என்று ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் பாடுகிறார்.நலங்கிள்ளை என்னும் அரசனின் படை மிகவும் பாரியது. அப்படையின் முன்னணியினர் பனையின் நுங்கினைச் சுவைத்து மகிழ்கிறார்கள். நடுவில் செல்லும் படையணியினர் பனம்
பழத்தை உண்டு மகிழ்கிறார்கள். படையணியின் கடைசிப் பகுதியினர் பனங் கிழங்கினை உண்டு பசியாறுகிறார்களாம். அந்த அளவுக்கு படையின் பெருக்கமும், கடந்து செல்லும் காலத்தின் நீட்டமும் காணப்பட்டது என்றும் பனையின் பருவத்தினையும் அதனால் வருகின்ற பயனை யும் புறப்பாடல் வாயிலாக ஆலத்தூர் கிழார் காட்டி நிற்பது கருத் திருத்த வேண்டியதே !
வீட்டுக்கு வருகின்ற விருந்தினருக்கு நாம் இப்போது தேனீர் கொடுப்போம். கோப்பி கொடுப்போம். இன்னும் எத்தனையோ வகையான பானங்களைக் கொடுப்போம். அவை அனைத்தும் உடல் நலத்துக்கு உகந்தனவா என்பதை கொடுக்கின்ற நாங்களும்
உணர் வதில்லை.பருகுகின்ற விருந்தினரும் உணருவதில்லை. ஆனால் வீட்டுக்கு வருகின்ற வர்களுக்கு நுங்கினைக் கொடுத்து அக்காலத்தில் எம்மக்கள் மகிழ்ந்தார்கள் என்பதை சிறுபாணாற்றுப் படை மூலம் அறிகின்றோம்.
பனையினைப் பலவிதங்களில் பயன்படுத்திய செய்தியினையும் இலக்கியங்கள் புலப்படுத்தி நிற்பதும் நோக்கத்தக்கது.பனையின் ஓலையினால் ஆகிய உண் கலங்கள் பயன்பட்ட விதத்தினை நற்றிணை காட்டுகிறது. தட்டுவம் என்பது பனை ஓலையால் ஆன உண் கலமாகும். பனை ஓலையால் ஆன தட்டுவம் தூய்மையான கலமாகும். இன்று எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறதோ தெரியாது ! கள்ளினை அருந்துவதற்கு பனை ஓலையிலான கலம் பயன்பட்டிருக்கிறது. இன்றும் அது நடைமுறையில் கிராமங்களில் இருப்பதையும் காணலாம். பனையின் பன்னாடை கள்ளை வடிப்பதற்கும், பத நீரை வடிப்பதற்கும் துணையாக இருந்தது என்பதை புறப்பாடல் காட்டி நிற்கிறது.
தென்னம் பிள்ளை என்று செல்லமாய் அழைக்கும் தென்னை யானது வீடுகள் தோறும் இருக்கும். தென்னையைப் பிள்ளையாக்கி
செல்லமாய் வளர்ப்போம். நித்தமும் நீர் ஊற்றுவோம்.கிட்டத்தட்ட பிள்ளையைப் பேணுவது போலவே தான் தென்னையைப் பேணு வோம். ஆனால் பனையினை அப்படிப் பேணுவதும் இல்லை. அதனை வளர்த்திட நினைப்பதும் இல்லை. வளர்ந்த பனைகளைப் பார்த்துப் பாராமலும் நிற்போம். யாராவது நல்ல உயரமாய் , நல்ல கறுப்பாய், நல்ல முறுக்கேறிய உடல் தோற்றத்துடன் காணப்பட்டால் - அவர்களை விபரிப்பதற்கு பனையினை எடுத்துக்காட்டி நிற்போம். பனையோ இதனை எதையுமே கண்டு கொள்ளாமல் தனது ஒத்துழைப்பினை வழங்கியபடி தலை கவிழாமல் தலை நிமிர்ந்த படியே தளராது நிற்கும். அடியிருந்து நுனிவரை அனைத்தையுமே எங்களுக்கு அளித்து கற்பகதருவாய் , கர்ணனாய் களிப்புற்று நிற்கும். தென்னையும் இவ்வாறு தந்தாலும் பனையின் பக்குவம் வேறு ! பனையின் பயன் பாடும் வேறாகும் ! பனையின் வாழும் காலமும் வேறாகும் !
பிள்ளையென நாமழைக்கும் தென்னையில் ஆண் , பெண் என்று வகை இல்லை. ஆனால் பனையில் ஆண் ,பெண் என்று காணப் படுகிறது. ஆண் பனையினை ' அழகுப் பனை ' என்றும் , பெண் பனை யினை ' பருவப்பனை ' என்றும் அழைக்கின்றனர். பாளையினை மட்டும் நீட்டிக் கொள்ளுவதுடன் ஆண்பனை நின்றுவிடும். நுங்கினை வழங்கிடும் நிலை ஆண்பனைக்கு இல்லை. ஆனால் காய்ய்ப்பதும் கனிதருவதும் பெண்பனைதான். பதநீர் கூட ஆண்பனையைவிடப் பெண்பனையே தந்து நிற்கும்.
பயிரிடப் படாமல் தானாகவே வளர்ந்து பயனளிக்கும் பனையினை மனமிருத்துவது அவசியமாகும்.இளம் பனையினை ' வடலி ' என்று அழைக்கின்றோம். பனையானது வளர்வதற்கு பதினைந்து ஆண்டுகள் எடுக்கும் என்று அறியமுடிகிறது.பனையின் வயதானது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். வளைவுகள் இன்று நேராக வளர்வது பனையின் சிறப்பு எனலாம்.
கற்பகதருவான பனையினைக் கருத்திற்கொண்டு நாட்டுப்புற மக்களின் நாயகனான ஒருவர் தன்னுள்ளத்து உதித்தவற்றை தனது மொழியிலே கவிதையாக்கி வழங்கி இருக்கிறார். பனையின் வரலாற்றையே எப்படிக் காட்டுகிறார் பாருங்கள்.
No comments:
Post a Comment